ஓட்டுநர் பணிக்கு ரூ.20 லட்சம் கேட்கும் த.வெ.க., புள்ளி!
ஓட்டுநர் பணிக்கு ரூ.20 லட்சம் கேட்கும் த.வெ.க., புள்ளி!
PUBLISHED ON : நவ 29, 2026 12:00 AM

மெது வடையை கடித்தபடியே, “மின்னல் வேகத்துல செயல்பட்டிருக்கார் ஓய்...” என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.
“யாருங்க அது...” என கேட்டார் அந்தோணிசாமி.
“திருப்பரங்குன்றம் தீபத் துாணில், கடந்த 24ம் தேதி தீபம் ஏத்தணும்னு உத்தரவு போட்ட உச்ச நீதிமன்றம், மதுரை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணாவை ஒருங்கிணைப்பு அதிகாரியாகவும் நியமிச்சதோல்லியோ... ஆனா, ‘அறங்காவலர் குழு முடிவின்படியும், தீபம் ஏற்ற குழு அமைக்காததாலும் தீபம் ஏற்ற முடியவில்லை’ன்னு மறுநாள் 25ம் தேதி காலை 10:00 மணிக்கே, உச்ச நீதிமன்றத்தில் கலெக்டர் தரப்புல 16 பக்கங்கள்ல அறிக்கை குடுத்துட்டா ஓய்...
“அந்த அறிக்கையில், உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்ட 20ம் தேதி துவங்கி, 24ம் தேதி ராத்திரி வரை நடந்த சம்பவங்களை தேதி, நேரம் வாரியா கலெக்டர் குறிப்பிட்டிருக்காரு... ‘தீபம் ஏற்றாதது சம்பந்தமா, 12 மணி நேரத்துல கலெக்டர் எப்படி அறிக்கை தயாரிச்சார்...? தீபம் ஏற்ற குழு அமைக்க, மாவட்ட ஆட்சியர் என்ற முறையில், அவர் தானே நடவடிக்கை எடுத்திருக்கணும்... அதை விட்டுட்டு, முன்கூட்டியே அறிக்கையை தயார் பண்ணி, கையெழுத்தை மட்டும் போட்டு அனுப்பிட்டாரோ’ன்னு ஹிந்து அமைப்பினர் சந்தேகப்படறா ஓய்...” என்றார் குப்பண்ணா.
“பேராசிரியர்கள் புலம்பலை கேளுங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
“தமிழகத்துல 160 அரசு கலை, அறிவியல் கல்லுாரிகள்ல காலியா இருந்த முதல்வர் பணியிடங்களை நிரப்பியிருக்காங்களே... இதுல, பதவி உயர்வுக்கு தகுதியா இருந்த பேராசிரியர்கள் தந்த விருப்ப மனுக்கள் அடிப்படையில, அவங்களுக்கு கல்லுாரிகளை ஒதுக்கியதா அதிகாரிகள் சொல்றாங்க...
“ஆனா, பார்வையற்ற மற்றும் மாற்றுத் திறனாளி பேராசிரியர்கள் சிலர், சென்னையில் உள்ள கல்லுாரிகளை கேட்டு விருப்ப மனு குடுத்திருந்தும், அவங்களை கன்னியாகுமரியில் இருக்கிற கல்லுாரிகளுக்கு முதல்வரா நியமிச்சிருக்காங்க... இதனால, வெறுத்து போனவங்க அங்க போகவே இல்லைங்க...
“அதாவது, பேராசிரியர் சங்கத்தின் நிர்வாகிகள் பலர், தங்களுக்கு வேண்டிய கல்லுாரிகளை முதல்லயே தேர்வு பண்ணிட்டாங்க... இந்த நியமனங்கள்ல அதிகாரிகள் சிலர், ‘கை நீட்டி’ட்டதாகவும் தகவல்கள் வருதுங்க...” என்றார் அந்தோணிசாமி.
“தீவிரமா வசூல் பண்ணுதாவ வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
“எந்த துறையில அது...” என கேட்டார் அன்வர்பாய்.
“சென்னை மாநகராட்சியில், 15 மண்டலங்கள் இருக்கு... இந்த மண்டலங்கள்ல காலியா இருக்கிற வாகன ஓட்டுநர் பணியிடங்களை நிரப்பிட்டு இருக்காவ வே...
“இதுல, மாதவரம் மண்டலத்துல மட்டும் எட்டு ஓட்டுநர் பணியிடங்களை நிரப்பணும்... மாதவரம் தொகுதி த.வெ.க., முக்கிய புள்ளி பெயரை சொல்லி, ஒரு பணியிடத்துக்கு, 20 லட்சம் ரூபாய் வரை சிலர் பேரம் பேசுதாவ வே...
“இதுல, ரெண்டு பேரிடம் தலா, 10 லட்சம் முன்பணமும் வாங்கிட்டாவ... இது யாருக்கும் தெரியாது... மாதவரம் சர்ச் பக்கத்துல அடுக்குமாடி குடியிருப்பை, த.வெ.க., பிரமுகர் ஒருத்தர் கட்டிட்டு இருக்காரு வே...
“அவர்கிட்டயும் முக்கிய புள்ளி தரப்பு, ‘கட்டிங்’ கேட்டு தலையை சொறிஞ்சிருக்கு... அவர் தர மறுக்கவே, ரெண்டு தரப்புக்கும் பிரச்னை வந்துட்டு... இதுல கடுப்பான கட்டுமான புள்ளி, டிரைவர் வேலைக்கு நடக்கிற வசூலை கசிய விட்டுட்டாரு வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
“விஜய் பிரபு, நாளைக்கு பார்க்கலாம் பா...” என்றபடியே அன்வர்பாய் எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
