PUBLISHED ON : ஜூன் 20, 2025 12:00 AM
சென்னை, நுங்கம்பாக்கம், வானிலை ஆராய்ச்சி மையம் பேருந்து நிறுத்தம் அருகே, போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார், நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அங்கு, சந்தேகிக்கும் வகையில் நின்று இருந்தவரின் கை பையை சோதனை செய்தபோது, கோகைன் போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது. அவர், சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த பிரதீப்குமார், 38, என்பது தெரியவந்தது.
இதையடுத்து, நுங்கம்பாக்கம் போலீசார் அவரை கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணைக்கு பின், மேற்கு ஆப்ரிக்கா நாட்டைச் சேர்ந்த ஜான், 38, என்பவரை ஓசூரில் வைத்து, போலீசார் நேற்று கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டோரிடம் இருந்து, 11 கிராம் கோகைன், 40,000 ரூபாய், இரு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கோயம்பேடு எஸ்டேட் குட்டை, என்.டி.படேல் சாலையில், போலீசார் நேற்று முன்தினம் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அங்கு நின்ற நெற்குன்றத்தை சேர்ந்த தனஞ்செழியன், 43, என்பவரிடம் இருந்து, 51 கிராம் மெத் ஆம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
தனஞ்செழியன் அளித்த தகவலின்படி, நெற்குன்றத்தை சேர்ந்த பெரியசாமி, 26, என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.