/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஆர்.டி.ஓ., காலியிடங்களுக்கு நடக்கும் அநியாய பேரம்!
/
ஆர்.டி.ஓ., காலியிடங்களுக்கு நடக்கும் அநியாய பேரம்!
ஆர்.டி.ஓ., காலியிடங்களுக்கு நடக்கும் அநியாய பேரம்!
ஆர்.டி.ஓ., காலியிடங்களுக்கு நடக்கும் அநியாய பேரம்!
PUBLISHED ON : ஜூன் 16, 2025 12:00 AM

பெஞ்சில் அமர்ந்ததுமே, ''சினிமா வட்டார தகவல் ஏதாவது இருந்தா சொல்லுங்க வே... கேட்டு ரொம்ப நாளாச்சு...'' என்றபடி, நண்பர்கள் முகத்தை பார்த்தார், பெரியசாமி அண்ணாச்சி.
உடனே பேச துவங்கிய அந்தோணிசாமி, ''மூணு வருஷத்துக்கு முன்னாடி நடந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில், விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், இயக்குனர் பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டாங்களே...
''இதுல ஜெயித்த பாண்டவர் அணியை எதிர்த்தும், தேர்தலை ரத்து பண்ண கோரியும், சென்னை ஐகோர்ட்ல சிலர் வழக்கு போட்டாங்க... இந்த வழக்கை விசாரித்த நீதிபதிக்கு அழுத்தம் கொடுத்ததா, நடிகர் மற்றும் தயாரிப்பாளரா வலம் வர்ற தொழிலதிபருக்கு அபராதம் விதிச்சாங்க...
''இந்த சூழல்ல, நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்தை வர்ற ஆகஸ்ட்ல திறக்க இருக்கிறதால, ஏற்கனவே தேர்வான சங்க நிர்வாகிகளே அடுத்த மூணு வருஷத்துக்கும் நீடிக்க, நடிகர் சங்க பொதுக்குழு ஒப்புதல் குடுத்திருக்கு... ஆனா, இதை எதிர்த்தும் சிலர் கோர்ட்ல வழக்கு போட்டிருக்காங்க...
''இந்த வழக்கின் பின்னணியிலும், அந்த தொழிலதிபர் தான் இருக்கார்னு நடிகர் -- நடிகையர் சொல்றாங்க... 'நடிகர் சங்க புதிய கட்டடத்தை திறக்க விடாம தடுக்கவே இந்த மாதிரி செயல்படுறார்'னும் புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''ஆசிரியர்களை கட்டாயப்படுத்தியிருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ், 'தேசிய கல்வி கொள்கை எனும் மதயானை' என்ற புத்தகத்தை எழுதி, அதை ரெண்டு வாரத்துக்கு முன்ன, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டாரோல்லியோ... இந்த புத்தகத்தின் அறிமுக விழா, ரெண்டு நாளைக்கு முன்னாடி திருச்சியில் சாயந்தரம் 5:00 மணிக்கு நடந்துது ஓய்...
''அமைச்சர் மகேஷ், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்ட பலரும் கலந்துண்டா... 'இந்த விழாவுல மாவட்டம் முழுக்க இருக்கற அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் எல்லாம் கலந்துக்கணும்'னு கல்வித் துறை அதிகாரிகள் கட்டாயப்படுத்தியிருக்கா ஓய்...
''வேற வழியில்லாம, 300க்கும் மேற்பட்ட பெண் ஆசிரியர்களும், 500க்கும் மேற்பட்ட ஆண் ஆசிரியர்களும் மதியமே பள்ளியில இருந்து கிளம்பி விழாவுக்கு போயிட்டா... பள்ளிகள்ல பாடம் நடத்த வாத்தியார்கள் இல்லாம, பசங்க கும்மாளம் போட்டுட்டு வீட்டுக்கு போயிட்டா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''கிட்டத்தட்ட, 70 முதல், 80 லட்சம் ரூபாய் வரை பேரம் நடக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.
''எந்த வேலைக்கு வே...'' என கேட்டார், அண்ணாச்சி.
''தமிழகத்துல இருக்கிற வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்ல, 30க்கும் மேற்பட்ட, ஆர்.டி.ஓ., பணியிடங்கள் காலியா கிடக்கு... ஆர்.டி.ஓ., இன்ஸ்பெக்டர் பணியிடங்களும் நிறைய காலியா கிடக்குது பா...
''நிறைய பேருக்கு புரமோஷனும் போடல... இதனால, ஒரே அதிகாரியை பல அலுவலகங்களுக்கும் பொறுப்பா போட்டு, அவங்க அங்குமிங்குமா ஓடியாடிட்டு இருக்காங்க பா...
''இதுல, ஆர்.டி.ஓ., காலியிடங்களுக்கு, 70 முதல், 80 லட்சம் ரூபாய் வரை ஆளுங்கட்சி புள்ளிகள் சிலர் பேரம் பேசுறாங்க... அதே நேரம், 'இவ்வளவு பணத்தை கொட்டி கொடுத்து, இந்த ஆட்சி முடியுறதுக்குள்ள போட்டதை எடுக்க முடியுமா'ன்னு பலரும் தயங்குறாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
பேச்சு முடிய, பெரிய வர்கள் கிளம்பினர்.