/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஓய்வு வேகத்தில் வாரி சுருட்டும் ஒன்றிய அதிகாரி!
/
ஓய்வு வேகத்தில் வாரி சுருட்டும் ஒன்றிய அதிகாரி!
PUBLISHED ON : மே 11, 2025 12:00 AM

இஞ்சி டீக்கு ஆர்டர் தந்தபடியே, ''தீவிரமா கணக்கெடுக்குறாங்க...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''எதுக்கு ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''தமிழகத்தில் உள்ள கத்தோலிக்க திருச்சபை உள்ளிட்ட கிறிஸ்துவ சபைகள், ஒவ்வொரு கிறிஸ்துவ குடும்பங்களின் சமூக, பொருளாதார நிலை குறித்து கணக்கெடுப்பு நடத்துறாங்க... குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள், கல்வி, தொழில், ஆண்டு வருமானம் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் சேகரிக்கிறாங்க...
''மாநில அளவுல கிறிஸ்துவ மக்களின் சமூக, பொருளாதார நிலை இப்ப எப்படி இருக்கு... அவங்க மேம்பாட்டுக்கு அரசு இன்னும் என்னென்ன செய்யணும்னு பட்டியல் தயாரிக்க போறாங்க...
''அந்த பட்டியல்ல இருக்கும் கோரிக்கைகளை ஏத்துக்கிற அரசியல் கட்சிக்கு, சட்டசபை தேர்தல்ல ஆதரவு தரவும் முடிவு எடுத்திருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''பேரம் பேசிட்டு இருக்காங்க பா...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''என்ன வியாபாரத்துல வே...'' என, அப்பாவியாக கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
''வியாபாரம் இல்ல... பத்திரப்பதிவு துறையில், 'பசை'யான இடங்களை பிடிக்க, சார் - பதிவாளர்களிடம் கடும் போட்டி இருக்கும்... இப்படி நல்ல இடத்தை பிடிக்கிறவங்க, புயல் வேகத்துல வசூலை வாரி குவிக்கிறாங்க பா...
''இதனால, பலரும் விதிகளை மீறி செயல்படுறாங்க... சில இடங்கள்ல, வில்லங்கமான பத்திரங்களை பதிவு பண்ணி, லஞ்ச ஒழிப்பு துறை வழக்குல சிக்கிடுறாங்க பா...
''இப்படி மாட்டிக்கிறவங்களை உயர் அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' பண்ணிடுறாங்க... தற்போதைய நிலவரப்படி சார் - பதிவாளர்கள், உதவியாளர்கள்னு, 100க்கும் மேற்பட்டவங்க சஸ்பெண்ட்ல இருக்காங்க பா...
''இவங்களிடம், துறையின் சார்புல சில அதிகாரிகள் பேச்சு நடத்துறாங்க... அதாவது, 'இவ்வளவு தொகையை தந்துட்டா, சஸ்பெண்டை ரத்து பண்ணிடுறோம்... மறுபடியும் பணியில சேர்ந்துக்கலாம்'னு பேரம் பேசுறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''ஆளுங்கட்சி புள்ளிகள் ஆதரவுடன் கல்லா கட்டுதாரு வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அதிகாரி, இன்னும் சில மாசத்துல பணி ஓய்வுல போக இருக்காரு... அதுக்குள்ள, முடிஞ்ச வரைக்கும் அள்ளிடணும்னு புகுந்து விளையாடுதாரு வே...
''சில நாட்களுக்கு முன்னாடி, 11 பஞ்சாயத்து செயலர்களை, அதிகாரி அதிரடியா இடமாற்றம் செஞ்சாரு... அன்னைக்கே சிலரிடம், 'கட்டிங்' வாங்கிட்டு, உத்தரவை மாத்தி குடுத்ததும் இல்லாம, சிலருக்கு அவங்க கேட்ட ஊராட்சிகளுக்கும் இடமாறுதலை மாத்தி குடுத்திருக்காரு வே...
''இந்த ஒன்றியத்துல, 40க்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரர்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஒருத்தருக்கு மட்டும் 2 கோடி ரூபாய்க்கான டெண்டரை குடுத்துட்டாரு... இது பத்தி, கலெக்டரிடம் ஒப்பந்ததாரர்கள் புகார் குடுத்திருக்காவ வே...
''அதிகாரியோ, 'மாவட்ட அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ., ஆதரவு எனக்கு இருக்கு... அதனால, யார் எந்த வேலையை எடுத்து செய்தாலும் எனக்கு, 10 சதவீத கமிஷன் வந்துடணும்'னு கண்டிப்பா கேட்காரு வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.
''அது சரி... ஆசையே துன்பத்திற்கு காரணம்னு கவுதம சித்தார்த்தர் சொன்னது, இந்த அதிகாரிக்கு தெரியாதோ ஓய்...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.