/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அரசு பஸ் டிப்போவில் தீண்டாமை பிரச்னை!
/
அரசு பஸ் டிப்போவில் தீண்டாமை பிரச்னை!
PUBLISHED ON : ஆக 17, 2025 12:00 AM

ட பராவில் வந்த பில்டர் காபியை வாங்கிய படியே, ''யாரையும் விமர்சிக்க வேண்டாம்னு உத்தரவு போட்டிருக்கார் ஓய்...'' என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''யாரை சொல்றீங்க பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''தமிழக பா.ஜ.,வுக்கு, சமீபத்துல புதிய நிர்வாகிகளை அறிவிச்சிருக்கால்லியோ... இந்த நிர்வாகிகளுக்கு, சென்னையில் இருக்கும் பா.ஜ., தலைமை அலுவலகமான கமலாலயத்தில், சமீபத்துல பயிற்சி பாசறை நடத்தியிருக்கா ஓய்...
''இதுல, சிறப்பு விருந்தினரா பா.ஜ., அமைப்பு பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷ் பங்கேற்று, புதிய நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கி யிருக்கார்... அப்ப, 'தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, அ.தி.மு.க., - பா.ம.க., போன்ற கட்சிகளை, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர்கள் யாரும் தேவையில்லாம விமர்சித்து பேசிடாதீங்க... குறிப்பா, அ.தி.மு.க.,வுடன் மென்மையான போக்கை கடைப்பிடிங்க'ன்னு குறிப்பிட்டு சொல்லிட்டு போயிருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''ஊருக்கெல்லாம் பால் சப்ளை பண்ணிட்டு , தவிச்ச வாய்க்கு தண்ணி இல்லாம இருக்காவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''என்ன விவகாரமுங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''மதுரை ஆவின் ஒன்றியத்தில், 300க்கும் மேற்பட்டோர் வேலை செய்யுதாவ... இங்க பால் , நெய், பால்கோவா, மைசூர்பாகு எல்லாம் தயாரிக்காவ வே...
''இந்த பொருட்களை தயாரிக்கும் இயந்திரங்களை இயக்குறவங் களுக்கு குடிக்க தண்ணீர் தர மாட்டேங்காவ... எல்லாரும் வீட்டுல இருந்து பிளாஸ்டிக் பாட்டில்ல தண்ணீர் எடுத்துட்டு போறாவ... சிலர் சொந்த பணத்தை போட்டு, தண்ணீர் கேன் வாங்கி குடிக்காவ வே...
''உயர் அதிகாரிகள் யாராவது ஆய்வுக்கு வந்தா மட்டும், 'சின்டெக்ஸ்' தொட்டி வச்சு, அதுல கார்ப்பரேஷன் தண்ணீரை நிரப்புதாவ... 'அந்த தொட்டியை முறையா பராமரிக்காம தண்ணீரை நிரப்புறதால, அதை குடிச்சா, வயிற்று போக்கும், வாந்தியும் வருது'ன்னு ஊழியர்கள் புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''தீண்டாமை பிரச்னை மறுபடியும் தலை துாக்குதுங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''எந்த கிராமத்துல ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''கிராமத்துல இல்லைங்க... திருச்சி மாவட்டம், துவரங் குறிச்சியில் உள்ள அரசு போக்குவரத்து கழக டிப்போவுல, 2023ல் பட்டியல் சமூக ஊழியர்களிடம், மாற்று சமூகத்தினர் தீண்டாமையை கடைப்பிடிச்சாங்க... அப்ப, டிப்போ மேலாளரா இருந்தவர் பேச்சு நடத்தி, பிரச்னையை தீர்த்து வச்சாருங்க...
''இப்ப, இந்த பிரச்னை மறுபடியும் எழுந்திருக்கு... கேன்டீனில் சிலருக்கு மட்டும் தனி தட்டு, பேப்பர் கப்கள் தர்றாங்க... அதேபோல் டியூட்டி போடுறதிலும், ஜாதி பேதம் பா ர்க்கிறாங்க...
''மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர், ஆளுங்கட்சி தொழிற்சங்க தலைவரா இருக்கிறதால, அதிக வசூல் நடக்கும் வழித்தடங்கள்ல பட்டியல் சமூகத்தினரை புறக்கணிக்கிறாராம்... அதுவும் இல்லாம, பட்டியல் சமூகத்தினருடன் மற்ற சமூகத்தினரை சேர்த்து டியூட்டி போடுறது இல்லைங்க...
''இதை டிப் போ மேலாளரும் கண்டுக்கிறது இல்ல... இதனால, பட்டியல் சமூக ஊழியர்கள் கடும் மன உளைச்சல்ல இருக்காங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
அரட்டை முடிவுக்கு வர, பெரியவர்கள் கிளம்பினர்.