/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
விஜய் கட்சியில் பதவிகள் விற்கப்பட்டதா?
/
விஜய் கட்சியில் பதவிகள் விற்கப்பட்டதா?
PUBLISHED ON : ஜன 26, 2025 12:00 AM

குடியரசு தின வாழ்த்து களை பரிமாறிக் கொண்ட நண்பர்கள் மத்தியில், ''இன்னைக்கு படிப்பகம் திறக்கிறாங்க...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''எங்க வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், கடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு மதுரை போயிருந்தப்ப, 'கமல் பண்பாட்டு மையம்' சார்புல அமைக்கப்பட்ட, நம்மவர் படிப்பகத்தை திறந்து வச்சாருங்க...
''அப்ப அவர் பேசுறப்ப, 'ஒரு தொகுதியில் ஒரு படிப்பகத்தை கட்சி நிர்வாகிகள் கட்டி திறந்தா, நான் பதிலுக்கு இன்னொரு படிப்பகம் கட்டி தர்றேன்'னு வாக்குறுதி குடுத்தாருங்க...
''அந்த வகையில, அருப்புக்கோட்டை, பரமக்குடி சட்டசபை தொகுதிகள்ல கட்டிய நம்மவர் படிப்பகங்களை திறக்க கமலை அழைச்சிருக்காங்க... அவர் இப்ப அமெரிக்காவுல இருக்கிறதால, 'குடியரசு தினமான இன்னைக்கு நீங்களே திறந்து வச்சிடுங்க'ன்னு நிர்வாகிகளிடம் சொல்லிட்டாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''முதல்வர் நிகழ்ச்சி, அதிருப்தியை ஏற்படுத்திடுச்சு பா...'' என்றார், அன்வர்பாய்.
''விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''மதுரையில் சமீபத்துலவியாபாரிகள் சங்க விழாவில், முதல்வர் ஸ்டாலின் கலந்துக்கிட்டாரு... தனியார் நிகழ்ச்சிக்கு முதல்வரை அழைக்கிறவங்க, வழக்கமா மாவட்டச் செயலர் வழியா தான் போவாங்க பா...
''ஆனா, சென்னையில் இருக்கிற ஒரு சங்க நிர்வாகி வாயிலா முதல்வரை அணுகி, 'எங்க சங்கத்தின் 75வது ஆண்டு விழாவுல உங்கப்பா கலந்துக்கிட்டாரு... இப்ப, 100வது ஆண்டு விழாவுல நீங்க கலந்துக்கணும்'னு சென்டிமென்டா பேசி ஒப்புதல் வாங்கிட்டாங்க பா...
''முதல்வர் வருகை, கடைசி நேரத்துல தான் மதுரை நிர்வாகிகளுக்கு தெரிஞ்சிருக்கு... அதுவும் இல்லாம அந்த விழாவுல, தன்னை அழைச்ச நிர்வாகியை முதல்வர் ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளியிருக்காரு பா...
''இதனால கடுப்பான மதுரை தி.மு.க., நிர்வாகிகள், தலைமை கழக நிர்வாகிகளிடம், 'எங்களுக்கு தெரியாம முதல்வர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செஞ்சா, லோக்கல்ல எங்களை அவங்க எப்படி மதிப்பாங்க'ன்னு புலம்பி தள்ளிட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''பதவிகள் விற்பனைக்குன்னு போர்டு போடாத குறையா போயிட்டுல்லா...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவங்கி, ஒரு வருஷம் முடிஞ்சிட்டுல்லா... கட்சிக்கு கொள்கை பரப்பு செயலர், பகுதி பொறுப்பாளர்னு யாரும் இல்ல வே...
''இந்த சூழல்ல, சென்னையில் பகுதி தலைவர்கள் பதவிக்கும், விழுப்புரம் மாவட்டத்துல நகர நிர்வாகி பதவிக்கும் லட்சக்கணக்குல சிலர் பணம் கேட்டிருக்காவ வே...
''கட்சி பதவி துவங்கி, எம்.எல்.ஏ., சீட் வரை லட்சத்துல இருந்து கோடி ரூபாய் வரை பேரம் பேசியிருக்காவ... கட்சிக்கு ஆர்வமா வந்த ரசிகர்கள், இதை கேள்விப்பட்டு அதிர்ச்சியாகிட்டாவ வே...
''இதனால, 'உங்களை நம்பியே அரசியலுக்கு வந்தோம்... ஆனா, எங்களுக்கே பணம் வாங்கிட்டு தான் பதவி தருவாங்கன்னா, நாங்க ரசிகர்களா மட்டுமே இருந்திருப்போம்'னு விஜய்க்கே பகிரங்கமா கடிதம் எழுதிட்டாவ...
''இதை பார்த்துட்டு தான், 'கட்சி பதவிக்கு பணம் வாங்குற நிர்வாகிகள் பதவி பறிக்கப்படும்'னு விஜய் எச்சரிக்கை குடுத்திருக்காரு வே...'' என, முடித்தார், அண்ணாச்சி.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.