PUBLISHED ON : ஜூலை 11, 2025 12:00 AM

'பொது இடத்தில், அண்ணனுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று இந்த பெண்ணுக்கு தெரியவில்லையே...' என, தன் தங்கையை பற்றி வருத்தத்துடன் பேசுகிறார், ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருந்தவர், காங்கிரசின் ராஜசேகர ரெட்டி. ஹெலிகாப்டர் விபத்தில் இவர் இறந்ததை அடுத்து, அவரது வாரிசான ஜெகன்மோகன் ரெட்டி, அரசியலுக்கு வந்தார். தற்போது, ஆந்திர மாநில எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.
இவரது தங்கை ஷர்மிளா, துவக்கத்தில் அண்ணனுக்கு உதவியாக இருந்தார். அதன்பின், சொத்து மற்றும் அரசியல் காரணங்களுக்காக, காங்கிரசில் இணைந்தார். தற்போது இருவரும் எலியும், பூனையுமாக உள்ளனர்.
சமீபத்தில் ராஜசேகர ரெட்டியின், 76வது பிறந்த நாள் விழா, கடப்பாவில் உள்ள அவரது நினைவிடத்தில் நடந்தது. இதில், ஜெகனும், ஷர்மிளாவும் தனித் தனியாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த ஷர்மிளா, 'என்னை பற்றி சமூக வலைதளங்களில் தரக்குறைவான கருத்துகளை ஜெகன் கட்சியினர் பதிவிடுகின்றனர். அவர்களை துாண்டிவிடுவதே ஜெகன் தான்...' என கூறியதுடன், அவரை கடுமையாக தாக்கி பேசினார்.
'உங்கள் அண்ணனை பற்றி இப்படி பேசலாமா...' என ஷர்மிளாவிடம் சிலர் கேட்டபோது, 'அரசியல் என்று வந்து விட்டால், அண்ணன் என்ன; தம்பி என்ன...' என கூறி, அவர்களது வாயை அடைத்து விட்டார்.