/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பஞ்., செயலர்களை மிரட்டி பணம் பறித்தது யார்?
/
பஞ்., செயலர்களை மிரட்டி பணம் பறித்தது யார்?
PUBLISHED ON : மே 03, 2025 12:00 AM

பில்டர் காபியை பருகியபடியே, ''இடமாறுதலை அமல்படுத்தாம இருக்கா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''ஈரோடு மாவட்டத்தில் போலீசார் பற்றாக்குறை இருக்கறதால, ஆயுதப்படை போலீசாரை அலுவலகப் பணிக்கு பயன்படுத்திக்கறா... எஸ்.பி., - ஏ.டி.எஸ்.பி., மற்றும் தனிப்பிரிவு அலுவலகங்கள்ல மட்டும் நிறைய ஆயுதப்படை போலீசார் பணியில இருக்கா ஓய்...
''இதனால, பாதுகாப்பு பணிக்கு கூடுதலா ஆயுதப்படை போலீசாரை அனுப்ப முடியல... இதுக்கு மத்தியில, 25க்கும் மேற்பட்ட போலீசாருக்கு அப்போதைய, எஸ்.பி., ஜவஹர், 'டிரான்ஸ்பர்' போட்டார் ஓய்...
''எஸ்.பி.,யே டிரான்ஸ்பராகி போயிட்டாரு... ஆனா, அவர் டிரான்ஸ்பர் போட்ட போலீசார் இன்னும் போகாம, பழைய இடங்கள்லயே டூட்டி பார்த்துண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''விருது தர்றதா அலைக்கழிச்சு அனுப்பிட்டாங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் அந்தோணிசாமி.
''என்ன விருதை சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''சென்னை, குன்றத்துார்ல, போன மாசம் 19ம் தேதி, 'கருணாநிதி கைவினை திட்டம்' துவக்க விழா நடந்துச்சு... இதுல, முதல்வர் ஸ்டாலின் கலந்துக்கிட்டாருங்க...
''இதுல, மாநில அளவிலான சிறந்த தொழில் முனைவோருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட எட்டு பேருக்கு, முதல்வர் கையால் விருது வழங்க முடிவு பண்ணி அழைப்பு குடுத்தாங்க... எட்டு பேரும், 18ம் தேதியே குன்றத்துாருக்கு போயிட்டாங்க...
''முதல்வரிடம் எப்படி விருது வாங்கணும், எப்படி கும்பிடணும்னு ஒத்திகையும் நடத்தினாங்க... ஆனா, மறுநாள் விழாவுல மூணு பேரை மட்டும் முதல்வரிடம் விருது வாங்க அனுப்பியிருக்காங்க...
''மற்ற அஞ்சு பேரிடமும், 'நீங்க ஊருக்குப் போங்க... உங்க மாவட்ட அதிகாரி வந்து விருதை தருவார்'னு வெறுங்கையோடு அனுப்பிட்டாங்க...
''அவங்களும், 'கைக்காசு செலவு பண்ணி, ரெண்டு நாள் வெட்டியா காத்துக் கிடந்ததுதான் மிச்சம்'னு புலம்பிட்டே போனாங்க... அதேநேரம், இதுவரைக்கும் அவங்க கைக்கு விருது வரல... ஏமாந்துபோன ஒருத்தர், 'ஏன் அழைத்தீர்கள் முதல்வரே'ன்னு முதல்வரின் இ - மெயிலுக்கு காட்டமா கடிதம் அனுப்பிட்டாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''மொபைல் போன்ல மிரட்டி பணம் பறிச்சிருக்காரு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களும், அதுல 526 ஊராட்சிகளும் இருக்கு... ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு செயலர் இருக்காரு வே...
''கடந்த சில வாரங்களா, ஊராட்சி செயலர்களுக்கு ஒருத்தர் மொபைல் போன்ல பேசியிருக்காரு... தன்னை கலெக்டர் ஆபீஸ்ல இருக்கும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஹரின்னு அறிமுகப்படுத்திக்கிட்டவர், 'ஊராட்சியில் எவ்வளவு வரி வசூல் பண்ணியிருக்கீங்க'ன்னு பொதுவா சில கேள்விகளை கேட்டிருக்காரு வே...
''அப்புறமா, 'உங்க ஊராட்சி மீது நிறைய புகார்கள் வந்திருக்கு... அதை முடிச்சு வைக்க, 5,000 ரூபாய் அனுப்புங்க'ன்னு கேட்டிருக்காரு... தப்பு செய்திருக்கிற சில செயலர்கள் பயந்து போய், அவர் சொன்ன கணக்குக்கு பணம் அனுப்பிட்டாவ வே...
''பணம் அனுப்பாதவங்களை மிரட்டியிருக்காரு... நாலு நாளைக்கு முன்னாடி, திருவாலங்காடு ஒன்றியத்துல மட்டும், 20க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலர்களை தொடர்பு கொண்டு மிரட்டியிருக்காரு... அந்த மர்ம நபர் மீது எஸ்.பி.,யிடம் புகார் அளிக்க செயலர்கள் முடிவு பண்ணியிருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
அரட்டை முடிய, பெஞ்ச் அமைதியானது.