/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் மானாவாரி முறைகேடு!
/
மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் மானாவாரி முறைகேடு!
மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் மானாவாரி முறைகேடு!
மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் மானாவாரி முறைகேடு!
PUBLISHED ON : மே 13, 2025 12:00 AM

''எல்லாத்துக்கும் கையை விரிச்சிடுதாவ வே...'' என்றபடியே வந்தார், பெரியசாமி அண்ணாச்சி.
''என்ன விஷயம் பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''சட்டசபையில, துறைவாரியா மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்துச்சுல்லா... இதுல பேசிய அமைச்சர்கள் பலரும், தங்கள் துறையின் சார்பில் செயல்படுத்த இருக்கும் திட்டங்களை அறிவிப்புகளா வெளியிட்டாவ வே...
''அதுக்கு முன்னாடியே, அதுல பல அறிவிப்புகளுக்கு நிதி இல்லன்னு நிதித்துறை அதிகாரிகள் கையை விரிச்சுட்டாவ... இதனால, பத்திரப்பதிவு துறையில, புதிய அறிவிப்புகளே வெளியிடல வே...
''அறநிலைய துறையிலும் பல அறிவிப்புகளை, நிதியில்லன்னு நீக்கிட்டாவ... அமைச்சர்கள் வெளியிட்ட அறிவிப்புகளிலும், அத்தியாவசியம், அவசியம்னு பிரிச்சு, அத்தியாவசியத்துக்கு மட்டுமே நிதி ஒதுக்குதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''கருவிகள் வாங்கியதுல, கமிஷன் பார்த்துட்டா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''தமிழகத்துல, ரேஷன் கடைகள்ல சரியான எடையில் பொருட்கள் வழங்குறதுக்காக, மின்னணு தராசையும், பொதுமக்கள் விரல் ரேகை பதிவு செய்ற, பயோ மெட்ரிக் கருவியையும் இணைக்கும், 'மதர் போர்டு' மற்றும் 'புளு டூத்' கருவி வாங்கி பொருத்திட்டு இருக்கா ஓய்...
''துாத்துக்குடி மாவட்டத்துல, 1,000 கடைகளுக்கு இந்த கருவிகள் வாங்கியிருக்கா... இதுல, கூட்டுறவு துறை கட்டுப்பாட்டில் வர்ற 850 கடைகளுக்கு, ஒரு கருவி தலா, 4,000 ரூபாய்னும், நுகர்பொருள் வாணிப கழக கட்டுப்பாட்டில் வர்ற 150 கடைகளுக்கு தலா, 2,000 ரூபாய்னும் வாங்கியிருக்கா ஓய்...
''இதுல என்ன வேடிக்கைன்னா, ரெண்டு தரப்புக்கும் கருவிகளை சப்ளை பண்ணியது, ஒரே நிறுவனம் தான்... எந்த டெண்டரும் விடாம, கூட்டுறவு துறை அதிகாரிகள் இருவர், 4,000 ரூபாய்க்கு கருவிகளை வாங்கியதா ரசீது தயார் பண்ணி, காசு பார்த்துட்டா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''ராஜேஷ், பாலமுருகன் வராங்க... இஞ்சி டீ குடுங்க நாயரே...'' என்ற அந்தோணிசாமியே, ''இந்த மோசடியையும் கேளுங்க...'' என்றபடியே தொடர்ந்தார்...
''பனியன் மாவட்டத்துல, இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர்கள் கேட்டு, ஏராளமான மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிச்சுட்டு காத்திருக்காங்க... ஆனா, மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் சார்புல, தகுதியே இல்லாதவங்களுக்கு எல்லாம் ஸ்கூட்டர் குடுத்துடுறாங்க...
''ஸ்கூட்டர் பெற தகுதியில்லாத பெண் பெயர்ல ஸ்கூட்டரை பதிவு பண்ணி, ஆர்.சி., புக்கும் குடுத்துட்டாங்க... இதுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்க, ஸ்கூட்டரை வழங்காம ஷோரூம்லயே நிறுத்தி வச்சிருக்காங்க...
''அதே மாதிரி, 26 வயசு இளைஞருக்கு ஆர்.சி., புக்கை மட்டும் அனுப்பிட்டு, நாலு மாசமா ஸ்கூட்டரை கண்ணுலயே காட்டாம, தகுதியில்லாத வேற ஒருத்தருக்கு குடுத்துட்டாங்க... மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்பூர்வ கார்டியன் சான்று கேட்டு பலர் விண்ணப்பிச்சாலும், மாசக்கணக்குல இழுத்தடிச்சு தான் தர்றாங்க...
''மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்துல, 10 வருஷத்துக்கும் மேலா நங்கூரம் போட்ட மாதிரி இருக்கும் மூத்த அலுவலர் தான், எல்லா முறைகேடுக்கும் காரணமாம்... அவரது உயர் அதிகாரியும் இதை கண்டுக்கிறது இல்லைங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
''வாங்க சுப்பன்... ஊர்ல வசந்தகுமார் சவுக்கியமா வே...'' என, நண்பரிடம் அண்ணாச்சி பேசத் துவங்க, மற்றவர்கள் கிளம்பினர்.