/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
காங்., - எம்.எல்.ஏ.,வுக்கு மீண்டும் 'சீட்' கிடைக்குமா?
/
காங்., - எம்.எல்.ஏ.,வுக்கு மீண்டும் 'சீட்' கிடைக்குமா?
காங்., - எம்.எல்.ஏ.,வுக்கு மீண்டும் 'சீட்' கிடைக்குமா?
காங்., - எம்.எல்.ஏ.,வுக்கு மீண்டும் 'சீட்' கிடைக்குமா?
PUBLISHED ON : அக் 07, 2025 12:00 AM

“இ லவச குடிநீருக்கு பணம் வாங்குறதா பேசியிருந்தோமுல்லா...” என கேட்டபடியே வந்தார், பெரியசாமி அண்ணாச்சி.
“ஆமா... மேல சொல்லுங்க...” என்றார், அந்தோணிசாமி.
“திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெமிலிச்சேரி ஊராட்சியில், 10 லட்சம் ரூபாய் செலவில் சுத்திகரிக்கப்பட குடிநீர் மையம் அமைச்சிருக்காவ... இங்க, லோக்கல் ஆளுங்கட்சியினர் ஒரு குடம் தண்ணீருக்கு, 5 ரூபாய் வசூலிக்கிறதா பேசியிருந்தோமுல்லா வே...
“இதை பார்த்து, பூந்தமல்லி ஒன்றிய அதிகாரிகள் அதிர்ச்சியாகிட்டாவ... இப்ப, பி.டி.ஓ., உத்தரவுப்படி, 'இலவச குடிநீருக்கு கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'னு, குடிநீர் மையத்தில் அறிவிப்பு ஒட்டியிருக்காவ வே...
“ஆனா, அதை கிழிச்சு எறிஞ்சிட்டு, மறுபடியும் வசூல்ல இறங்கிடக் கூடாதுல்லா... அதனால, 'நிரந்தரமா ஒரு அறிவிப்பு பலகை வச்சு, அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்கணும்'னு அந்த பகுதி மக்கள் சொல்லுதாவ வே...” என்றார், அண்ணாச்சி.
“காந்தி ஜெயந்தி அன்னைக்கு, 'சரக்கு' ஆறா ஓடுச்சு பா...” என்றார், அன்வர்பாய்.
“எந்த ஊர்ல ஓய்...” என கேட்டார், குப்பண்ணா.
“திருப்பூர் மாவட்டம், அவிநாசி போலீஸ் சப் - டிவிஷனுக்கு உட்பட்ட பகுதி, 'டாஸ்மாக்' பார்கள்ல, 'சரக்கு' விற்பனை அமோகமா நடந்துச்சு... அந்தந்த ஏரியாவில் நடந்த மது விற்பனை பத்தி, போலீசாருக்கு தெரிஞ்சாலும் கம்முன்னு இருந்துட்டாங்க பா...
“குறிப்பா, மதுவிலக்கு போலீசாருக்கு புகார்கள் போயிருக்கு... அவங்களோ, சரக்கு விக்கிறவங்களுக்கு முன்கூட்டியே தகவல் தந்துட்டு, பேருக்கு ஆய்வு நடத்திட்டு போயிட்டாங்க பா...
“இதுக்காக, அவங்க காட்டுல பணமழையே பொழிஞ்சிருக்கு... ஆயுத பூஜைக்கு மறுநாளா வேற இருந்ததால, சரக்கு விற்பனை சக்கை போடு போட்டுச்சு... பாட்டிலுக்கு, 100 முதல், 150 ரூபாய் வரை அதிகம் வச்சு வித்து கொழுத்த லாபம் பார்த்துட்டாங்க பா...” என்றார், அன்வர்பாய்.
“தொகுதி கைமாறிடும்னு பேசிக்கறா ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
“துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்., - எம்.எல்.ஏ., அமிர்தராஜ்... சென்னையிலயே செட்டிலாகிட்ட இவர், மாதம் ஒருமுறை தான் தொகுதியில தலை காட்டறார் ஓய்...
“அன்னைக்கு ஒரே நாள்ல பல்வேறு நிகழ்ச்சிகள்ல கலந்துண்டு, அது சம்பந்தமான படங்களை தினமும் ஒவ்வொன்றா அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்கள்ல வெளியிடறா... அதாவது, அவர் தொகுதியிலயே இருக்கற மாதிரி காட்டிக்கறா ஓய்...
“சமீபத்தில் ஏரல் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், 'தொகுதி பக்கமே வராத அமிர்தராஜுக்கு மறுபடியும் சீட் தரப்படாது... தொகுதியில் வசிப்பவருக்கு தான் சீட் தரணும்'னு சில காங்., நிர்வாகிகள் ஒன்றுகூடி உறுதிமொழி எடுத்திருக்கா ஓய்...
“இந்த வீடியோ, சமூக வலைதளங்கள்ல பரவிண்டு இருக்கு... இப்படி, கட்சிக்குள்ளயே கடும் எதிர்ப்பு கிளம்பறதால, வர்ற தேர்தல்ல ஸ்ரீவைகுண்டம் தொகுதியை காங்கிரசுக்கு தி.மு.க., ஒதுக்குமாங்கறது சந்தேகம் தான் ஓய்...” என, முடித்தார் குப்பண்ணா.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.