PUBLISHED ON : ஆக 13, 2026 01:16 AM

“பணம் சம்பாதிக்கறதுல கட்சி பேதம் எல்லாம் இல்லை ஓய்...” என்றபடியே, பெஞ் சில் அமர்ந்தார் குப்பண்ணா.
“என்ன விவகாரம் பா...” என கேட்டார் அன்வர்பாய்.
“கடந்த தி.மு.க., ஆட்சியில், சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் இருக்கற கொய்யா தோப்பு, நெடுஞ்செழியன் நகர்ல, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், நிறைய வீடுகள் கட்டி பயனாளிகளுக்கு ஒதுக்கினா... தேர்தல் அறிவிச்சிட்டதால, 75 வீடுகளை மட்டும் யாருக்கும் ஒதுக்காம போயிட்டா ஓய்...
“இப்ப, இந்தத் தொகுதியில் இருக்கற த.வெ.க., - தி.மு.க., பிரமுகர்கள் சிலர் சேர்ந்து, 75 வீடுகளையும் பயனாளிகளுக்கு ஒதுக்க, சில லட்சம் ரூபாய் முன்பணம் வசூலிக்கறா... ஆனா, 'குடிசைகள் மற்றும் நடைபாதையில வசிக்கறவாளுக்கு வீடுகள் தரணும்கற நோக்கத்துல உருவாக்கிய திட்டத்துல, பணம் வாங்கிண்டு வீடுகள் ஒதுக்கறதை அதிகாரிகள் அனுமதிக்கப்டாது'ன்னு, தொகுதியில் இருக்கற சமூக ஆர்வலர்கள் எல்லாம் சொல்றா ஓய்...” என்றார் குப்பண்ணா.
“தண்டனையே வரமா போயிட்டுல்லா...” என்ற பெரியசாமி அண் ணாச்சியே தொடர்ந்தார்...
“வடசென்னையில் ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல, நுண்ணறிவு பிரிவு எனப்படும் உளவுப்பிரிவுல போலீசா இருந்த ஒருத்தர், 'டபுள் மீனிங்'குல பேசி, பெண் போலீசாருக்கு தொல்லை குடுத்திருக்காரு... இவரைப் பத்தி உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவிச்ச இன்ஸ்பெக்டரையே, தன் அதிகாரத்தை பயன்படுத்தி வேற இடத்துக்கு மாத்திட்டாரு வே...
“சமீபத்துல, ஒரு பெண் போலீசிடம் இவர் அத்துமீறவே, அவங்க கூடுதல் கமிஷனரிடம் புகார் குடுத்துட்டாங்க... இது சம்பந்தமா, அதிகாரிகள் குழு விசாரணை நடத்துச்சு... அப்ப, மேலும் சில மகளிர் போலீசார், அவர் மீது வரிசையா புகார்களை அடுக்கியிருக்காவ வே...
“ஆனாலும், அந்த போலீஸ்காரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காம, மத்திய சென்னையில் இருக்கிற போலீஸ் ஸ்டேஷன் நுண்ணறிவு பிரிவுக்கு மாத்திட்டாவ... அவரது வீடு, ஸ்டேஷன் பக்கத்துலயே அமைஞ்சிட்டதால, பழைய இடத்தை விட இங்க ரொம்பவே ஜாலியா இருக்காரு... 'இதுக்கெல்லாம், அவரது துறையில் இருக்கிற உயர் அதிகாரியின் ஆசி தான் காரணம்'னு, சக போலீசார் சொல்லுதாவ வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
“ராஜ்குமார், ராமமூர்த்தி இப்படி உட்காருங்க...” என்ற அந்தோணிசாமியே, “அசைக்க முடியாம இருக்காங்க...” என்றார்.
“யாருப்பா அது...” என கேட்டார் அன்வர்பாய்.
“அரசு ஊழியர்களையும், அதிகாரிகளையும், மூணு வருஷத்துக்கு ஒரு முறை இடமாறுதல் பண்றது வழக்கம்... ஆனா, ஆவின் நிர்வாகத்துல பல அதிகாரிகள், 10 - 15 வருஷங்களா ஒரே இடத்துல இருக்காங்க...
“பொது மேலாளர் பதவிக்கு தகுதியான அதிகாரிகளை நியமிக்காம, சிலருக்கு கூடுதல் பொறுப்பா குடுத்திருக்காங்க... உதாரணமா, நாமக்கல் பொது மேலாளரிடம், கோவையை கூடுதலா குடுத்திருக்காங்க... இந்த மாதிரி, தமிழகம் முழுக்கவே பல அதிகாரிகள் ஒரே இடத்துல, அதே பதவியில நீடிக்கிறாங்க...
“இந்த அதிகாரிகள், ஆவினுக்கு லாரிகள் இயக்குறது, இயந்திரங்களை பராமரிக்கிறது உள்ளிட்ட பல வேலைகளை எடுத்து செய்ற ஒப்பந்ததாரர்களுடன் நெருங்கி பழகி, 'கமிஷன்' வாங்குறாங்க... கடந்த திராவிடக் கட்சிகள் ஆட்சியில, இவங்களுக்கு இடமாறுதல் போட்டாலும், துறையின் மேலிடத்துக்கு, 'கட்டிங்' வெட்டி, தங்களது பணியிடங்களை த க்க வச்சுக்கிட்டாங்க...
“அதனால, 'இப்ப வந்திருக்கிற த.வெ.க., அரசாவது, ஒட்டுமொத்த ஆவின் அதிகாரிகளையும் கூண்டோடு மாத்தணும்'னு, அங்க வேலை பார்க்கும் ஊழியர்கள் சொல்றாங்க...” என முடித்தார் அந்தோணிசாமி.
பெரியவர்கள் அரட்டை முடிய, பெஞ்ச் அமைதியானது.
