தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/தீபாவளி வசூலில் பெண் அதிகாரியின் தனி ஆவர்த்தனம்!

தீபாவளி வசூலில் பெண் அதிகாரியின் தனி ஆவர்த்தனம்!

தீபாவளி வசூலில் பெண் அதிகாரியின் தனி ஆவர்த்தனம்!

1


PUBLISHED ON : நவ 14, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 14, 2026 12:00 AM

1


1
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஏலக்காய் டீயை உறிஞ்சியபடியே, ‘‘தண்டனையை எல்லாம் ரத்து பண்றாங்க பா...’’ என, அரட்டையை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

‘‘என்ன தண்டனைங்க...’’ என கேட்டார் அந்தோணிசாமி.

‘‘தி.மு.க.,வுல உட்கட்சி பூசல்ல ஈடுபடுறவங்களை கட்சியில் இருந்து, ‘சஸ்பெண்ட்’ பண்ணுவாங்க... கொஞ்ச நாள் கழிச்சு, அவங்க வருத்தம் தெரிவிச்சா திரும்ப சேர்த்துக்குவாங்க அல்லது மொத்தமா நீக்கிடுவாங்க பா...

‘‘சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி, 113வது வார்டைச் சேர்ந்த தி.மு.க., இளைஞர் அணி முன்னாள் நிர்வாகி நுங்கை சுரேஷ்... இவரது மனைவி பிேரமா, மாநகராட்சி கவுன்சிலரா இருக்காங்க பா...

‘‘இவங்களை சில மாசங்களுக்கு முன்னாடி கட்சியில் இருந்து, ‘சஸ்பெண்ட்’ பண்ணியிருந்தாங்க... சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின், ஆயிரம் விளக்கு தொகுதியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் த.வெ.க.,வுக்கு ஓட்டம் பிடிச்சிட்டாங்க...

‘‘இதனால, தம்பதியும் தாவிடக்கூடாதுன்னு நினைச்ச தலைமை, அவங்க சஸ்பெண்டை ரத்து பண்ணி, மீண்டும் கட்சியில சேர்த்துடுச்சு பா...’’ என்றார் அன்வர்பாய்.

‘‘வழக்குல பெயர் வந்துடுமோன்னு பயப்படுதாவ வே...’’ என்றார் பெரியசாமி அண்ணாச்சி.

‘‘யார் ஓய் அது...’’ என கேட்டார் குப்பண்ணா.

‘‘மதுரை மாநகராட்சியில், தி.மு.க., ஆட்சியில் நடந்த சொத்து வரி முறைகேடு தொடர்பா, தி.மு.க., பகுதி செயலர் சரவணனை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் சமீபத்துல கைது செஞ்சாங்கல்லா...

‘‘இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு, மாநகர தி.மு.க., செயலர் தளபதி உள்ளிட்ட நிர்வாகிகள் அங்க கூடிட்டாவ... அங்க தள்ளுமுள்ளு நடந்து, பெண் இன்ஸ்பெக்டர் தடுமாறி கீழே விழுந்துட்டாங்க வே...

‘‘அவங்க தந்த புகாரின்படி, 30 தி.மு.க.,வினர் மீது தல்லாகுளம் போலீசார் வழக்கு பதிவு செஞ்சாவ... இதுல, தளபதி உட்பட 10 பேர் பெயர்களை போலீசார் வெளியிட்டாவ வே...

‘‘அவங்களை எல்லாம் கைது பண்ணி, தீபாவளிக்கு, ‘உள்ள’ வச்சிடணும்னு போலீசார் தயாரான சூழல்ல, 10 பேரும் முன்ஜாமின் வாங்கிட்டாவ... இதனால, உஷாரான போலீசார், மீதி 20 பேரின் பெயர்களை வெளியிடாம கமுக்கமா வச்சிருக்காவ வே...

‘‘இதனால, முன்ஜாமினும் வாங்க முடியாம,

‘பட்டியல்ல நம்ம பெயர் இருக்குமோ... எந்த நேரம் வந்து போலீஸ் துாக்குமோ’ன்னு தி.மு.க., நிர்வாகிகள் பயத்துல இருக்காவ வே...’’ என்றார் பெரியசாமி அண்ணாச்சி.

‘‘தீபாவளி வசூல் மேட்டர் ஒண்ணு இருக்கு... கேளுங்கோ ஓய்...’’ என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

‘‘திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா ஆபீஸ்ல ஒரு பெண் அதிகாரி இருக்காங்க... இவங்க வந்ததுல இருந்தே மணல் கொள்ளையர்கள், செங்கல் சூளை உரிமையாளர் களிடம் மாதாந்திர மாமூல் வாங்கறாங்க ஓய்...

‘‘சமீபத்துல, தீபாவளிக்கு பட்டாசு கடைகளுக்கு அனுமதி கேட்டு வியாபாரிகள் பலர், ‘ஆன்லைன்’ மூலமா விண்ணப்பிச்சா... அந்த கடைகளுக்கு பெண் அதிகாரி, தன் ஜீப் டிரைவருடன் தனியா போய் ஆய்வு செய்து, கடைக்கு ஏற்ப, 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரைக்கும், ‘கட்டிங்’ வாங்கிட்டாங்க ஓய்...

‘‘வழக்கமா, அந்தந்த பகுதி வி.ஏ.ஓ., – ஆர்.ஐ.,க்களை ஆய்வுக்கு கூட அழைச்சுண்டு போகணும்... அவாளை கூட்டிண்டு போனா, ‘கட்டிங்’ல பங்கு தரணுமோல்லியோ... அதனால, அதிகாரியம்மா தனி ஆவர்த்தனம் பண்ணி, பல லட்சங்களை பார்த்துட்டாங்க ஓய்...’’ என முடித்தார் குப்பண்ணா.

ஒலித்த மொபைல் போனை எடுத்த அந்தோணி சாமி, ‘‘வெங்கட், சித்ரா வீட்டுல காரை விட்டுட்டு நீங்க கிளம்புங்க...’’ என பேசியபடியே நடக்க, மற்ற வர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us