PUBLISHED ON : மே 16, 2024 12:00 AM

அதிகளவில் ஏற்படும் புற்று நோய் வகைகளில் ஐந்தாம் இடத்தில் இருப்பது இரைப்பைப் புற்றுநோய். கிழக்காசிய நாடுகளில் மட்டுமே அதிகளவில் காணப்பட்டு வந்த இந்தப் புற்றுநோய் இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளிலும் அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதுவும் குறிப்பாக, 50 வயதுக்குட்பட்டவர்களிடம் இந்நோய் அதிகரித்து வருவதால், இதுகுறித்த ஆய்வில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த வியன்னா பல்கலை இறங்கியது.
உணவில் அதிகப்படியான உப்பைச் சேர்ப்பது டிமென்ஷியா, டைப்-2 நீரிழிவு ஆகியவற்றை அதிகரிக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இன்னும் சில ஆய்வுகளில் அதிக உப்பு இரைப்பையில் உள்ள பாதுகாப்புப் படலத்தைச் சேதமாக்குவதாகவும், சேதமான இடத்தில் ஹெலிக்கோபேக்டர் பைலோரி பாக்டீரியா வளர்ந்து புற்றுநோயை ஏற்படுத்துவதாகவும் சில ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.
இந்த ஆய்வறிக்கைகளைப் படித்த பின்னர் தனி ஆய்வு ஒன்றை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். நடுத்தர வயதுடைய 4,71,144 நபர்களை ஆய்வுக்கு உட்படுத்தினர். அவர்களின் சராசரி வயது 56. அவர்களில் 53.9 சதவீதம் பெண்கள். அவர்கள் அன்றாட உணவில் எவ்வளவு உப்பு சேர்த்துக் கொள்கின்றனர் என்று கண்காணிக்கப்பட்டது.
குறைவாகச் சேர்ப்பவர்கள், மிதமாகச் சேர்ப்பவர்கள், அதிகம் சேர்ப்பவர்கள் என்று மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டனர்.
ஆய்வின் இறுதியில் அதிகமான உப்பு சேர்த்துக் கொள்பவர்களுக்குப் பிறரை விட இரைப்பைப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு, 41 சதவீதம் அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது. உணவில் சேர்க்கப்பட வேண்டிய பாதுகாப்பான உப்பு அளவு என்ன என்பது குறித்துப் பல்வேறு ஆய்வுகள் நடந்தபடி உள்ளன.