PUBLISHED ON : மே 09, 2024 12:00 AM

மனிதர்களாகிய நமக்கு நோய் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுகிறோம். விலங்குகளுக்கு நோய் வந்தால் என்ன செய்யும்? வீட்டு விலங்குகள் என்றால், அவற்றை வளர்ப்பவர்களே, நோயைக் கண்டுபிடித்து, கால்நடை மருத்துவரை அணுகி சரி செய்துவிடுவர். ஆனால் வன விலங்குகள் என்ன செய்யும்?
இந்த சுவாரசியமான கேள்விக்கு விடை தருகிறது சமீபத்திய நிகழ்வு. தென்கிழக்கு ஆசிய நாடான சுமத்ராவில் வாழும் ஒருவகை மனித குரங்குகள் ஒரங்குட்டான்கள். அருகி வரும் இவற்றை கவனிப்பதற்காக தேசியப் பூங்காக்கள், சரணாலயங்களில் பாதுகாக்கப்படுகின்றன.
அப்படியான ஓர் ஒரங்குட்டான் தனக்குத் தானே மருத்துவம் செய்து கொண்டதைப் படங்கள், வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர் வன அதிகாரிகள். இந்தக் குரங்கிற்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. இதற்குப் பின் சில தினங்கள் இந்தக் குரங்கு லியான் வைன் (Liana vine) எனும் தாவரத்தின் இலைகளைப் பறித்து, வாயில் மென்று அதன் சாற்றை முகத்தில் காயம் பட்ட இடத்தில் தடவிக் கொண்டது.
இந்த தாவரத்தின் இலை நீண்ட காலமாக மனிதர்களால் மூலிகையாகப் பயன்பட்டு வருகிறது. அதோடு இது பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைகளைக் கொல்லும் தன்மை உடையது என்பதை நவீன விஞ்ஞானமும் உறுதி செய்துள்ளது. மருந்திட்ட சில நாட்களிலேயே, குரங்கின் காயமும் குணமானது.
ஒரு விலங்கு தனக்குத் தானே மருந்திட்டு நோயைக் குணப்படுத்திக் கொள்வதைக் காண்பது இதுவே முதன்முறை என்று வனக் காவலர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், விஞ்ஞானிகளோ, குரங்குகளுக்கு மூலிகைகளைப் பற்றிய அறிவு உண்டு என்பதற்கு ஆதாரமாக பல நிகழ்வுகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன என்று சொல்கின்றனர்.
சிம்பன்சி குரங்குகள், குடற்புழுக்களை நீக்க கசப்பான மூலிகைகளை உட்கொள்வதும், சில ஒரங்குட்டான்கள் இஞ்சி இலைகளின் மருத்துவத் தன்மைகள் அறிந்தே உட்கொண்டதும் இதற்கு முன்பே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.