/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
உடல் பருமனுக்கு தீர்வாகுமா புதிய ஆய்வு?
/
உடல் பருமனுக்கு தீர்வாகுமா புதிய ஆய்வு?
PUBLISHED ON : மார் 21, 2024 12:00 AM

பலருக்கு மிகப் பெரிய பிரச்னையாக இருப்பது உடல் பருமன். இது நீரிழிவு, இதய நோய்களை விரைவுபடுத்துகிறது. குறிப்பாக, நடுத்தர வயது உடல் பருமன் மிகவும் ஆபத்தானது. இதைச் சரி செய்வதற்காகப் பல்வேறு ஆய்வுகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். ஜப்பானைச் சேர்ந்த ஒசாகா பல்கலை ஆய்வாளர்கள், மூளையின் நியூரான்களில் ஏற்படும் மாற்றங்களுக்கும் உடல் பருமனுக்கும் உள்ள தொடர்பை எலிகளில் சோதனை செய்து கண்டறிந்துள்ளனர்.
நம் உடலுக்குப் போதுமான கலோரி கிடைத்ததும், உணவு உட்கொண்டது போதும் என்று மூளைக்கு சமிக்ஞை அனுப்பும் ஒரு புரதம் தான் மெலனொகார்டின் 4 (MC4R). இது மூளை நியூரான்கள் உள்ள சிலியா எனப்படும் ஆன்டனா போன்ற பகுதிகளில் படிந்து இருக்கும்.
எலிகளைக் கொண்டு ஆய்வு செய்த விஞ்ஞானிகள், ஒரு பகுதி எலிகளுக்கு சாதாரண உணவையும், மற்றொரு பகுதி எலிகளுக்கு அதிக கொழுப்பு நிறைந்த உணவையும் தந்தனர். சாதாரண உணவு உண்ட எலிகளுக்கு சிலியா பகுதி நன்றாக இருந்தது. அதிக கொழுப்பு உட்கொண்ட எலிகளுக்கு சிலியா பகுதி விரைவாகச் சுருங்கியது. இதனால், இதில் படியும் மெலனொகார்டின் 4 புரதத்தின் அளவு குறைந்தது. இதன் விளைவாக இந்த எலிகள் அளவு தெரியாமல் அதிகமான உணவு உட்கொண்டு எடை கூடின.
இதன் வாயிலாக மெலனொகார்டின் 4 புரதத்திற்கும் உடல் பருமனுக்கும் இடையிலான தொடர்பு நிறுவப்பட்டது. இது மனிதர்களுக்கும் பொருந்தும். அதேபோல் லெப்டின் எனும் நாளமில்லா சுரப்பிக்கும் உடல் பருமனுக்குமான தொடர்பு ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது.
பருமன் உள்ள மனிதர்களின் உடலில் உள்ள கொழுப்புத் திசுக்கள் அதிகளவிலான லெப்டினை உற்பத்தி செய்கின்றன. இந்த லெப்டினும் சிலியா பகுதியைச் சுருக்குகிறது. இது உடல் பருமனை மேலும் அதிகரிக்கும். இந்தப் புதிய ஆய்வின் மூலம் கொழுப்பு உணவின் புதிய பக்கவிளைவுகள் வெளிவந்துள்ளன. உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய ஆய்வுகளை இது முடுக்கிவிடும்.

