PUBLISHED ON : ஜூன் 27, 2024 12:00 AM

நம் உடலின் எல்லா பாகங்களிலும் நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. குடலில் வாழும் நுண்ணுயிர்களுக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதனால் நோயைக் கண்டறிவதற்கும், அதற்கான மருந்துகளைத் தருவதற்கும் முன்னர் குடலில் எத்தகைய நுண்ணுயிர்கள், எப்படி வாழ்கின்றன என்று அறிவது அவசியம்.
இதற்குத் தற்போது பின்பற்றும் முறை மலத்தை ஆய்வுக்கு உட்படுத்துவதே. ஆனால், இதிலிருந்து குடலில் உள்ள பாக்டீரியா பற்றி முழு விபரம் கிடைக்காது.
டஃப்ட்ஸ் பல்கலை இதற்கு ஒரு புது வழியைக் கண்டுபிடித்துள்ளது. இதன்படி சாதாரண வைட்டமின் மாத்திரை அளவுள்ள கருவி ஒன்று உடலுக்குள் செலுத்தப்படும். இது வெளிப்புறத்தில் மிருதுவாக, பார்ப்பதற்கு மாத்திரை போலவே இருக்கும். வயிற்றுக்குள் சென்றவுடன் அமிலங்கள் பட்டு வெளிப்பகுதி சிதைந்துவிடும். இதற்குப் பின் வெளிப்படும் கருவி, குடலில் உள்ள பாக்டீரியாவை உள்ளிழுக்கும். தனது பணி முடிந்தவுடன் மலத்துடன் வெளியேறிவிடும்.
இது பன்றிகளில் சோதிக்கப்பட்டதில் நல்ல முடிவுகள் கிடைத்தன. குடல் நுண்ணுயிர்கள் பற்றிய நம் புரிதலை இந்தப் புது முறை மேம்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். விரைவில் மனிதர்களில் சோதிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும்.