/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
ஐ.ஐ.டி., உருவாக்கிய அசத்தல் கழிவுநீர் சுத்திகரிப்பு முறை
/
ஐ.ஐ.டி., உருவாக்கிய அசத்தல் கழிவுநீர் சுத்திகரிப்பு முறை
ஐ.ஐ.டி., உருவாக்கிய அசத்தல் கழிவுநீர் சுத்திகரிப்பு முறை
ஐ.ஐ.டி., உருவாக்கிய அசத்தல் கழிவுநீர் சுத்திகரிப்பு முறை
PUBLISHED ON : அக் 30, 2025 12:00 AM

தமிழகத்தின் ஜவுளித் தொழிலின் மையமான ஈரோட்டில், ஒரு புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு முறை, அமைதியான தொழில் புரட்சியை துவங்கியுள்ளது. சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள் துவங்கிய 'ஜே.எஸ்.பி., என்விரோ' நிறுவனம், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஒரு புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பை ஈரோட்டில் நிறுவியுள்ளது.
இந்த ஆலையில், 'பீட்ஸ்' எனப்படும் 'காற்றில்லா உயிரி மின்வேதியியல் செறிமான முறை' (Bio-Electrochemical Anaerobic Digestor System- - BEADS) என்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுகிறது. இதற்கு முன் உருவாக்கப்பட்ட, சுத்திகரிப்பு ஆலைகளில் காற்றோட்டத்திற்கு என அதிக மின்சாரம் பயன்படும். மேலும் சுத்திகரிப்புக்காக விலையுயர்ந்த வேதிப்பொருட்களை கலக்க வேண்டியிருக்கும். எனவே, கழிவுநீரை சுத்தமாக்கும் வேகத்தில், சுற்றுச்சூழல் மாசினையும் வெளியேற்றும்.
இதனால், கூடுதல் செலவை இழுத்துவிடக் கூடியவை அவை. ஆனால், 'பீட்ஸ்' ஆலை, செலவைக் குறைத்து, சுற்றுச்சூழலுக்கு கேடு தராமல், கழிவுநீரை நல்ல நீராக மாற்றித் தருகிறது.
இது எப்படி சாத்தியம்? பீட்ஸ் சுத்திகரிப்பு ஆலை, நுண்ணுயிரிகளையும் மின்முனைகளையும் (Electrodes) பயன்படுத்தி, ஈரக் கழிவுகளைச் 'செரிமானம்' செய்து நீரை சுத்திகரிக்கிறது. மேலும், சிறிதளவு மின்சாரத்தை உருவாக்குவதோடு, மிகக் குறைவான திடக் கழிவை மட்டுமே வெளியேற்றுகிறது.
இது வேதியியல் மற்றும் உயிரியல் இணைந்த ஓர் அருமையான கண்டுபிடிப்பு என வல்லுநர்கள் பாராட்டுகின்றனர். கருவிகள் வாங்கும் கடனுக்கான வட்டியும், கரியமில உமிழ்வுக்கான வரியும் உயர்ந்து வரும் இக்காலகட்டத்தில், ஒரு பீட்ஸ் ஆலையும், ஆண்டுக்கு கிட்டத்தட்ட 80 டன் கரியமில வாயு வெளியேற்றத்தை தவிர்ப்பது, எல்லாக் கோணத்திலும் லாபகரமானதுதான்.

