PUBLISHED ON : அக் 10, 2024 12:00 AM

இங்கிலாந்தில் உள்ள சர்ரே பல்கலை, பிரிட்டிஷ் சூழலியல் கூட்டமைப்புடன் இணைந்து, ஆண்டுதோறும் இயற்கை ரோபாட்டிக்ஸ் போட்டியை நடத்தி வருகிறது. இயற்கையாக உள்ள தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்டவற்றை முன்மாதிரியாகக் கொண்டு ரோபோக்களை வடிவமைப்பதை ஊக்குவிப்பதே இந்தப் போட்டி நடத்தப்படுவதன் நோக்கம். இதில், முதல் பரிசு பெற்றுள்ளவர் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒரு மாணவர். அப்படி என்ன வடிவமைத்தார்?
தற்போது மரங்கள் வெட்டப்படுவதால், காடுகளின் பரப்பளவு மிக வேகமாகக் குறைந்து வருகிறது. இதைச் சரிசெய்ய நிறைய மரங்களை நடுவது அவசியம்.
மனிதர்கள் நேரடியாகச் சென்று, குழி தோண்டி மரங்களை நடுவது சுலபமல்ல. இதைச் செய்ய ஏன் ரோபோக்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது.
தற்செயலாக பாங்கோலின்ஸ் (Pangolins) எனப்படும் ஒருவகை எறும்புண்ணிகளை மாணவர் கண்காணித்தார்.
இவை தங்கள் முன்னங்கால்களால் மண்ணைத் தோண்டி அங்கே எறும்புகளைத் தேடி உண்கின்றன. இதைப் பார்த்த மாணவருக்கு இதைப்போலவே ஒரு ரோபோவை உருவாக்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது.
இதன் விளைவாக பாங்கோலின் வடிவ ரோபோவை உருவாக்கினார். இவற்றைத் தொலைவில் இருந்து இயக்க முடியும். இதில் இரண்டு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை நகர்வதற்கு உதவும். இதன் முன்னங்கால்கள் குழி தோண்டுவதற்கு உதவுகின்றன. இதன் உள்ளே இருக்கும் தாவரத்தின் விதை பின்பகுதியிலிருந்து சரியாகத் தோண்டப்பட்ட குழியில் விழும். இவ்வாறு விதையை விடுவிக்கும்போது சமாளித்து நிற்பதற்கு இதன் பின்னங்கால்கள், வால் உதவும்.
இயற்கையைக் காக்க, இயற்கையில் இருக்கும் விஷயத்தைத் துாண்டுகோலாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ரோபோவுக்கு முதல் பரிசு தரப்பட்டுள்ளது பொருத்தமானது தானே?

