PUBLISHED ON : ஏப் 25, 2024 12:00 AM

மனிதர்களாகிய நாம் தூக்கத்தில் கனவு காண்பது போல் பிற உயிரினங்களும் கனவு காண்கின்றன. சிலந்திகளின் கனவுகள் குறித்துக் கூடப் பல ஆய்வுகள் வெளிவந்துள்ளன. அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த யு.பி.ஏ. பல்கலை ஆய்வாளர்கள் பறவைகளின் கனவு குறித்துப் புதிய ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய, தென் அமெரிக்கப் பகுதிகளில் பரவலாக வாழும் 'கிஸ்காடி' எனும் பறவையை ஆய்வுக்கு உட்படுத்தினர். பல்வேறு விதமான ஒலிகளை ஏற்படுத்தக் கூடிய இயல்புடைய இந்தப் பறவைகள் மிகவும் ஆக்ரோஷமானவை. இவை தங்கள் எல்லைகளைக் காத்துக் கொள்ள மிகவும் உக்கிரமாகச் சண்டையிடும் போது கொண்டையில் உள்ள இறகுகளை உயர்த்தி மிகவும் சத்தமான ஒலிகளை ஏற்படுத்தும். இவை தூங்கும்போதும், விழித்திருக்கும்போதும் ஏற்படுத்தும் ஒலிகளை எலெக்ட்ரோடுகள் பொருத்திப் பதிவுசெய்து கொண்டனர்.
இவை தூங்கும்போது குரல் உருவாகும் தசைப் பகுதிகளில் நகர்வுகள் ஏற்படுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இந்த அசைவுகள் இவை விழித்திருந்து ஒலி எழுப்பும் போது எவ்வாறு தசை நகர்வுகள் இருக்குமோ அதுபோலவே இருந்தன. தூக்கத்திலும் கூட இவை தங்கள் எல்லையைப் பாதுகாக்கும் நினைவிலேயே இருக்கின்றன என்பது கொண்டை அசைவுகளில் தெரிய வந்தது. அதாவது அவை தங்கள் கனவில் கூட வேறு பறவைகளுடனான எல்லைத் தகராறுகளில் ஈடுபடுகின்றன.
இதுபோன்ற ஆய்வுகள் மூலம் பறவைகள் தூக்கத்தின் போது எந்த வகையான கனவுகள் காண்கின்றன என்பதை யூகிக்க முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

