PUBLISHED ON : பிப் 20, 2025 12:00 AM

உடல் பருமனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடல் பருமனைக் குறைக்க, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் கரைக்க வேண்டியது அவசியம். ஆனால், கொழுப்பைக் கரைக்கப் பயன்படும் மருந்துகள் ஆரோக்கியமான தசைகளை வலுவிழக்கச் செய்து விடுகின்றன. இதனால், தசை வலிமையைக் குறைக்காமல் கொழுப்பை மட்டும் கரைக்கும் மருந்தை உருவாக்க விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வந்தனர்.
தற்போது எகிப்தில் உள்ள அலெக்ஸாண்ட்ரியா பல்கலை தங்க நானோ துகள்களை இதற்குப் பயன்படுத்தலாம் என்று கண்டறிந்துள்ளது. எலிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்தத் துகள்கள் அவற்றின் உடலில் உள்ள கொழுப்பை 36 சதவீதம் வரை குறைத்துள்ளது.
இந்த மருந்து கொடுக்கப்பட்டு வெறும் ஒன்பது வாரங்களில் இவ்வளவு முன்னேற்றம். அது மட்டும் இல்லாமல் எலிகளின் சிறுநீரகம், கல்லீரல் ஆகிய உறுப்புகளின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தி இருக்கின்றன. எனவே வருங்காலத்தில் இது மனிதர்களுக்கும் பயனுள்ள மருந்தாக அமையும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.