/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
வெப்பத்தால் அதிகரிக்கும் மாரடைப்பு?
/
வெப்பத்தால் அதிகரிக்கும் மாரடைப்பு?
PUBLISHED ON : மே 30, 2024 12:00 AM

மனிதர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் முக்கியமான காரணங்களில் ஒன்று மாரடைப்பு. உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, அதீத கொழுப்பு, மது நுகர்வு ஆகியவை மாரடைப்பு ஏற்பட காரணங்களாக இருக்கின்றன. என்றாலும், அதிகரிக்கும் வெப்பநிலை மாரடைப்பு ஏற்பட எவ்வாறு காரணமாகிறது என்பது இதுவரை ஆராயப்படவில்லை.
உலக வெப்பமயமாதல் என்பது முக்கியமான பிரச்னை. பகல் வெப்பநிலையை விட இரவுநேர வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கும் மாரடைப்பிற்கும் நேரடித் தொடர்பு இருப்பதை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஆக்ஸ்பெர்க் பல்கலை கண்டறிந்துள்ளது.
இந்த ஆய்வுக்காக மாரடைப்பு ஏற்படும் சாத்தியம் உள்ள 11,037 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுடைய சராசரி வயது 71. இவர்கள் வெவ்வேறு அறைகளில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அறை வெப்பநிலை, ஈரப்பதம், அழுத்தம் ஆகியவை கண்காணிக்கப்பட்டன.
வெப்பம் அதிகம் இருந்த அறைகளில் இருந்தவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அறிகுறிகள் தோன்றின. குளிர்ந்த அறைகளில் இருந்தவர்களுக்கு எதுவும் ஏற்படவில்லை.
இந்த ஆய்வின் முடிவில், இரவுநேர வெப்பநிலையால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு 7 சதவீதம் அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. பிறரைக் காட்டிலும் முதியோர்களுக்கும் பெண்களுக்கும் வெப்பநிலை அதிகரிப்பதால் பாதிப்பு தீவிரமாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
நகர்ப்புறங்களில் கான்கிரீட் வீடுகளில் பகல் நேரத்தில் உள்ளே வந்த வெப்பம் அவ்வளவு எளிதாக வீட்டை விட்டு வெளியேறுவது இல்லை. இதனால் அறைகளின் வெப்பநிலை அதிகமாகவே இருக்கிறது. அதனால்தான் மாரடைப்பு சதவீதம் கிராமப்புறங்களை விட நகரங்களில் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.