PUBLISHED ON : ஆக 22, 2024 12:00 AM

நம் உடலில், குறிப்பாகக் குடலில் ஏராளமான நுண்ணுயிரிகள் வாழ்கின்றன. அவற்றில் நமக்கு நன்மை செய்பவை நலநுண்ணுயிரிகள் (Probiotics) என்று அழைக்கப்படுகின்றன. குடல் நலநுண்ணுயிரிகளுக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் உள்ள தொடர்புகள் குறித்துப் பல ஆய்வுகள் வெளியானபடி உள்ளன.
குறிப்பிட்ட சில உணவுகளை உண்பதன் வாயிலாக அவற்றின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடியும். இன் தயிர் (யோகர்ட் - தயிர் போன்ற ஒரு பால் பொருள்) நலநுண்ணுயிரிகள் நிறைந்தது. இதில் தேன் சேர்த்து உண்பது அதில் உள்ள நுண்ணுயிரிகள் முழுமையாக நம் உடலில் சேர வழிவகுக்கும் என அமெரிக்காவைச் சேர்ந்த இலினொய் பல்கலை கண்டறிந்துள்ளது.
மத்தியத் தரைக் கடல் பகுதிகளின் உணவுகளில் இன் தயிரில் தேன் சேர்க்கப்படுகிறது. இதுகுறித்த ஆய்வில் இறங்கினர் ஆராய்ச்சியாளர்கள். 170 கிராம் இன் தயிரில் 42 கிராம் தேன் கலந்தனர். நம் வயிற்றில் உணவைச் செரிப்பதற்காக சில வேதியியல் வினைகள் நடக்கும். அதேபோன்ற ஓர் ஆய்வுக்கூட சோதனைக்கு இன் தயிர் கலவையை உட்படுத்தினர். அதிலிருந்து தேனானது இன் தயிரிலிருந்த நலநுண்ணுயிரிகளை வேதிவினையால் அழியாமல் காத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆய்வுக்கூட சோதனையை அடுத்து, மனித உடலில் சோதிப்பதற்காக 66 பேரை அழைத்தனர். அவர்களில் ஒரு பகுதியினருக்கு தேன் கலந்த இன் தயிரையும், மற்றொரு பகுதியினருக்கு தேன் கலக்காத இன் தயிரையும் இரண்டு வாரங்களுக்கு உண்ணத் தந்தனர்.
பிறகு இருதரப்பினரின் குடலில் உள்ள நலநுண்ணுயிரிகளைச் சோதித்தனர். தேன் கலந்து உண்டவர்கள் குடலில் நிறைய நலநுண்ணுயிரிகள் உயிருடன் இருந்தன. இதிலிருந்து தேனானது நலநுண்ணுயிரிகளைக் காக்கிறது என்ற ஆய்வுக்கூட முடிவு வலுப்பெறுகிறது.