/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
சில்லுகளை 'ஜில்'லாக்கும் லேசர்கள்
/
சில்லுகளை 'ஜில்'லாக்கும் லேசர்கள்
PUBLISHED ON : ஏப் 24, 2025 12:00 AM

இணையத்தின், மூளையாக இருப்பவை டேட்டா சென்டர் எனப்படும் தரவு மையங்கள். இவை அதிக அளவு மின்சாரத்தை எடுத்துக்கொள்ளக்கூடிய மையங்களாகி இருக்கின்றன.
இவை நுகரும் மின்சாரத்தில் பெரும்பகுதி, தரவு மையங்களில் இருக்கும் சிலிக்கான் சில்லுகளை குளிர்ச்சியாக வைத்திருக்கவே செலவாகின்றன. குறைந்த மின் செலவில், தரவு மையங்களை அதிக குளிர்ச்சியாக வைத்திருக்க, விஞ்ஞானிகள் ஒரு தீர்வை கண்டு பிடித்துள்ளனர். லேசர்களை சூடாக்குவதற்கு பதிலாக குளிரவைக்கவும் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.
'ஒளியணு லேசர் குளிரூட்டல்' எனப்படும் இந்தத் தொழில்நுட்பம், துல்லியமான அகச்சிவப்பு லேசர்களைப் பயன்படுத்தி ஜி.பி.யு., போன்ற சில்லுகளின் சூடான பகுதிகளிலிருந்து வெப்பத்தை வெளியேற்றுகிறது.
இந்த நுட்பம், சில சிறப்புப் பொருட்களில் உள்ள எலக்ட்ரான்களின் ஆற்றல் நிலைகளை திறமையாக கையாள்கிறது. அதாவது, வெப்பத்தை ஒளியாக மாற்றி வெளியே பிரதிபலிக்கச் செய்கிறது.
எனவே, சூடான பகுதிகளை குறிபார்த்து குளிர்விக்கும் லேசர் கதிரை செலுத்துவதன் வாயிலாக, விரைவில் சில்லுகள் குளிர்ந்துவிடுகின்றன. இதனால், மின் விசிறிகள் அல்லது குளிர்பதன கருவிகள் தேவையில்லை.
அமெரிக்காவின், சாண்டியா தேசிய ஆய்வகங்கள் மற்றும் நியூ மெக்ஸிகோ பல்கலை ஆய்வாளர்கள், இந்த முறை வாயிலாக, தரவு மையங்களின் மின்சார நுகர்வை 40 சதவீதம் வரை குறைக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளனர்.

