PUBLISHED ON : மே 15, 2025 12:00 AM

ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு விதமான உணவு கவனம் பெறுகிறது. குறிப்பாக இயற்கையான காய்கறி, பழங்களில் உள்ள மருத்துவ குணங்கள் கண்டறியப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டு 'டார்ட் செர்ரி' எனும் ஒரு பழம் ஆய்வாளர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.
பேக்கரி பொருட்களில் மட்டுமே பயன்பட்டு வந்த இந்த பழம் தற்போது மருந்தாகவும் பயன்படுகிறது. முதன்முதலாக 2011ம் ஆண்டு இந்த பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள் குறித்து சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 2023ம் ஆண்டு இது துாக்கமின்மையை சரி செய்வதாகக் கண்டறியப்பட்டது.
இந்த பழத்தில் மெலடோனின் என்ற ஒரு ஹார்மோன் இருக்கிறது. இது நல்ல துாக்கத்திற்கு அவசியமானது. அதேபோல இதில் உள்ள ட்ரைப்டோஃபான் எனும் ஒருவித அமினோ அமிலம் நம்முடைய உடலுக்கு மிகவும் நல்லது. இது ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
இது குறித்து ஆய்வு செய்த இங்கிலாந்து விஞ்ஞானிகள் இந்த பழத்தின் சாற்றை மருந்துக்குப் பதிலாகப் பயன்படுத்த முடியாது, அதே நேரத்தில் மருந்துடன் சேர்த்து எடுத்து கொண்டால் விரைவில் குணமடையலாம் என்கின்றனர்.
இந்த பழச்சாற்றை எந்த வடிவில், எவ்வளவு உட்கொண்டால் முழுப் பயனை பெற முடியும் என்று ஆய்வுகள் நடந்தபடி உள்ளன.