/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
நீரில் நுண்நெகிழிகளை சுத்தப்படுத்தும் ரோபோ
/
நீரில் நுண்நெகிழிகளை சுத்தப்படுத்தும் ரோபோ
PUBLISHED ON : மே 16, 2024 12:00 AM

இன்றைய தேதியில் 'மைக்ரோ பிளாஸ்டிக்' எனப்படும் நுண்நெகிழிகள் இல்லாத இடமே இல்லை என்று கூறலாம். நுண் நெகிழி என்பது, 5 மில்லி மீட்டருக்கும் குறைவான விட்டத்தை உடைய நெகிழிகளைக் குறிக்கும்.
இவை நீரில் அதிகமாகக் காணப்படுகின்றன. தண்ணீரில் மிதக்கும் நெகிழிகள் சிதையும்போதும், சிந்தடிக் உடைகளைத் துவைக்கும் போதும், கார் டயர்கள் சாலைகளில் உராயும்போதும் இவை உருவாகின்றன. இவற்றின்மீது ஆபத்தான பாக்டீரியா ஒட்டிக் கொண்டு வளர்கின்றன. அதனால் நாம் நுண்நெகிழிகள் உள்ள தண்ணீரை குடிப்பது ஆபத்தாகிறது. நுண்நெகிழி களை நீக்கவல்ல சிறிய ரோபோக்களை செக் குடியரசு நாட்டின் தொழில்நுட்பப் பல்கலை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். உருளை வடிவத்தில் உள்ள இவை, வெறும் 2.8 மைக்ரோ மீட்டர் அளவுடையவை. இவற்றின் மையத்தில் காந்தம் இருக்கும்.
இந்த ரோபோக்களை நீரில் மிதக்கவிட்டு வெளியில் இருந்து காந்தப் புலத்தைக் கொண்டு அவற்றை இயக்குவர். இவை பாக்டீரியா, நுண்நெகிழிகளைத் தங்களை நோக்கி ஈர்க்கும். 30 நிமிடங்கள் கழித்து இந்த ரோபோக்கள் வெளியே எடுக்கப்படும். அல்ட்ரா ஒலிகளைக் கொண்டு ரோபோக்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் கிருமிகள், நுண்நெகிழிகள் நீக்கப்படும்.
நீக்கப்பட்ட கிருமிகள் மீது புற ஊதாக் கதிர்கள் பாய்ச்சப்பட்டு அவை கொல்லப்படும். ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த ரோபோக்கள் சிறப்பாகச் செயல்பட்டன. 5 முதல் 10 ஆண்டுகளில் இவை பலவகைகளில் மேம்படுத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.