/
இணைப்பு மலர்
/
அறிவியல் மலர்
/
இயற்கையின் அற்புதம் வெடிக்கும் வெள்ளரிக்காய்!
/
இயற்கையின் அற்புதம் வெடிக்கும் வெள்ளரிக்காய்!
PUBLISHED ON : டிச 05, 2024 12:00 AM

இனப்பெருக்கம் செய்வது என்பது அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாத ஒன்று. தாவரங்கள் பெரும்பாலும் விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்கின்றன. விதைகள் ஒன்றுக்கு ஒன்று நெருக்கமாகவோ, தாய் தாவரத்தின் அருகிலேயோ விழுந்து விடக்கூடாது.
அப்படி விழுந்தால், முளைக்கும் செடிகள் தங்களுக்குள் சூரிய ஒளி, தண்ணீர், ஊட்டச்சத்து ஆகியவற்றுக்கு போட்டியிட வேண்டிய நிலை வந்துவிடும். இதை தவிர்க்க, விதைகளை துாரத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஒரு தாவரத்திற்கு இருக்கிறது. இவ்வாறு கொண்டு செல்வதற்கு தண்ணீர், காற்று, விலங்குகள் ஆகியவற்றை தாவரங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.
வெடிக்கும் வெள்ளரிக்காய் (Squirting cucumber) என்று அழைக்கப்படும் ஒரு தாவரம், மேற்கண்ட எந்த புறக்காரணியையும் நம்பி இருக்கவில்லை; தனக்குள்ளே இருக்கும் திரவ அழுத்தத்தை மட்டுமே பயன்படுத்துகிறது.
மத்திய தரைக்கடல் பகுதிகளை பூர்வீகமாகக் கொண்டது இந்த தாவரம். இது குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலை, மான்செஸ்டர் பல்கலை ஆகியவை இணைந்து ஆய்வு மேற்கொண்டன. இந்த தாவரத் தின் பழம் வெடிக்கின்ற சமயத்தில் அதை வீடியோ எடுப்பதற்காக, வினாடிக்கு 86,000 பிரேம்கள் படம் எடுக்கும் கேமராவை பயன்படுத்தினர். இதை நுட்பமாக ஆராய்ந்தபோது, இந்த தாவரத்தின் அற்பு தமான திறமை விஞ்ஞானிகளுக்கு புரிந்தது.
இந்த தாவரத்தின் ஒரு பழம் முழுதும் வளர்ந்து வரும் நிலையில், முழுக்கவே திரவத்தால் நிரம்பிவிடும். எவ்வாறு ஓர் ஏவுகணை காற்றையும், நிலத்தையும் கீழ்நோக்கி தள்ளி, மேலே பறக்கிறதோ அதுபோல், முழுதும் முற்றிய நிலையில், திரவத்தை தன் தண்டு நோக்கி உந்தித் தள்ளி பழமானது காற்றில் சுழன்று பறக்கும்.
இவ்வாறு பழத்திலிருந்து திரவம் வேகமாகப் பீய்ச்சி அடிக்கப்படும்போது, விதைகளும் திரவத்துடன் சேர்ந்து துாரமாக வீசப்படுகின்றன.இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இவ்வாறு வெடித்து பறப்பதற்கு முன், அந்தச் செடி தன் விதையை நிலத்திற்கு சரியாக 45 டிகிரிக்கு மாற்றுகிறது. இதற்கு குறைவாகவோ, அதிகமாகவோ இருந்தால், விதை தாவரத்திற்கு அருகிலேயே விழுந்து விடும்.
வேறு எந்த தாவரத்திலும் இப்படியான விசேஷ தகவமைப்பு காணப்படவில்லை. 45 டிகிரிக்கு மாற்றுவதன் வாயிலாக, விதைகள் தாய் தாவரத்திலிருந்து 2 முதல் 10 மீட்டர் தொலைவிற்கு பறந்து சென்று மண்ணில் விழுகின்றன.
விதைகள் போட்டியின்றி நன்றாக வளர்கின்றன. இந்த தாவரத்தில் காணப்படுகின்ற இந்த அதிசயமான விதை பரப்பும் முறை, விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.