PUBLISHED ON : மார் 28, 2024 12:00 AM

சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் லமிங்டன் தேசியப் பூங்காவில் ஒரு வித்தியாசமான பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பூங்கா, பூச்சியியலாளர்களிடையே கடந்த 100 ஆண்டுகளாக மிகவும் புகழ்பெற்றது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குவின்ஸ்லாந்து சுற்றுச்சூழல் பல்கலை முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் மாணவர் ஜேம்ஸ் தான் இதை முதன்முதலில் பார்த்துள்ளார். அதிகாலை வேளையில் இலையின் மீது அமர்ந்திருந்த இந்தப் பூச்சியை பறவையின் எச்சம் என்று நினைத்தார் அந்த மாணவர். கூர்ந்து கவனிக்கும் போது தான் அது பூச்சி என்று தெரிந்தது. 9.7 மில்லி மீட்டர் நீளமுள்ள இந்தப் பூச்சி, கருப்பு, சிவப்பு நிறத்தில் இருந்தது. ஆனால், இதன் உடல் முழுவதும் பூஞ்சை வந்தது போல் வெள்ளை நிற முடிகள் நிறைந்திருந்தன.
இது என்ன பூச்சி என்று கண்டுபிடிக்க முடியாத ஜேம்ஸ், பூச்சியியல் நிபுணர்களை தொடர்பு கொண்டார். இதுவரை கண்டறியப்படாத பூச்சி வகை இது என்று உணர்ந்த நிபுணர்கள் இதற்கு எக்ஸ்காஸ்ட்ரா அல்பொபிலொசா (Excastra albopilosa) என்று பெயரிட்டுள்ளனர். இதற்கு லத்தீன் மொழியில் 'வெள்ளை நிற முடிகள் நிறைந்தது' என்று பொருள்.
இப்படியான முடிகள் நிறைந்திருப்பது தற்காப்புக்காகத் தான் என்கின்றனர் விஞ்ஞானிகள். அதாவது வெள்ளை முடிகளைப் பார்க்கும் பறவைகள் அல்லது விலங்குகள் இந்தப் பூச்சி ஏற்கனவே பூஞ்சைகள் தாக்கி இறந்துபோய் விட்டது என்று கருதிவிடும். இதனால் ஆபத்திலிருந்து இது தப்பித்துக் கொள்கிறது.