ஜோடிக்கப்பட்ட வழக்கு; நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் ப.சிதம்பரம் கருத்து
ஜோடிக்கப்பட்ட வழக்கு; நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் ப.சிதம்பரம் கருத்து
ADDED : டிச 21, 2025 01:56 PM

சென்னை: நேஷனல் ஹெரால்டு வழக்கு ஜோடிக்கப்பட்டது. இந்த வழக்கில், நீதிபதி சிறந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறார் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது: மற்றவர்கள் மீது தொடுக்கப்பட்ட, ஜோடிக்கப்பட்ட வழக்கு. இந்த வழக்கில், நீதிபதி சிறந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறார். பண பரிமாற்றம் என்பது குற்றம் அல்ல. நாள்தோறும் ஒவ்வொருவரும் பணப்பரிமாற்றம் செய்கிறோம். சம்பளம் வாங்கும் போது பணப்பரிமாற்றம், சம்பளம் கொடுக்கும் போது பணப்பரிமாற்றம்.
கடையில் ஒரு பொருளை வாங்கும் போது விற்கும் போது பணப்பரிமாற்றம் தான். சட்டவிரோதமான பணப்பரிமாற்றம் தான் குற்றம். சட்டத்தை மீறிய பணப்பரிமாற்றம் தான் குற்றம். அதுக்கு முதலில் குற்றம் நடைபெற வேண்டும். அந்த குற்றத்தில் போலீசாரோ அல்லது புலனாய்வு துறையோ ஒரு வழக்கு பதிவு செய்ய வேண்டும். அந்த வழக்கில் இந்த குற்றத்தை இவர்கள் செய்து இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்ட வேண்டும்.
அந்த குற்றத்தை பதிவு செய்த பிறகு, அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்றம் என்ற வழக்கை தொடங்கலாம்.இதில், எந்த போலீசாரும், எந்த மத்திய புலனாய்வு துறையும் எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை. எப்ஐஆர் ஏதும் கிடையாது. முதல் தகவல் அறிக்கை இல்லாத ஒரு வழக்கில், அமலாக்கத்துறை ஒரு குற்றத்தை பதிவு செய்தது. அது சட்டவிரோதம். அவர்களுக்கு இந்த நீதிபதியின் தீர்ப்பு பாடமாக இருக்கும்.
மஹாத்மா காந்தி 1948ம் ஆண்டு ஜனவரி மாதம் 30ம் தேதி கொல்லப்பட்டார். ஏறத்தாழ 77 ஆண்டுகளுக்கு பிறகு மஹாத்மா காந்தியின் பெயரை நீக்கி, என்னை பொறுத்தவரை இது அந்த கொலையை விட, அந்த கொலைக்கு ஈடாக கொடிய செயல். 2வது முறை மஹாத்மா காந்தியை கொல்கிறார்கள். மஹாத்மா காந்தியின் பெயரை எடுப்பது ஒன்று. வாயில் நுழையாத பெயர் வைத்து இருக்கிறார்கள். ஹிந்தி சொற்களை ஆங்கில எழுத்தில் எழுதினால், அது ஹிந்தியா? ஆங்கிலமா? ஹிந்தியும் அல்ல, ஆங்கிலமும் அல்ல.
உதாரணமாக தமிழ் எழுத்துகளை வங்காளத்தில் எழுதினால், தமிழர்களுக்கும் புரியாது, வங்காளிகளுக்கு புரியாது. ஹிந்தி சொற்களை ஆங்கிலத்தில் எழுதினால், ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கும் புரியாது, ஹிந்தி தெரிந்தவர்களுக்கும் புரியாது. யாருக்கு புரிகிறது, அமைச்சர்களும் புரியவில்லை. மஹாத்மா காந்தி விட இந்த திட்டத்திற்கு புதிய பெயர் பொருத்தமானதா? இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

