பொருநை, கீழடி அருங்காட்சியகத்திற்கு வந்து பாருங்கள்: பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் அழைப்பு
பொருநை, கீழடி அருங்காட்சியகத்திற்கு வந்து பாருங்கள்: பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமனுக்கு முதல்வர் அழைப்பு
UPDATED : டிச 21, 2025 12:19 PM
ADDED : டிச 21, 2025 12:04 PM

திருநெல்வேலி: பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் தமிழகத்தில் கட்டியிருக்கும் பொருநை, கீழடி அருங்காட்சியகத்தை பார்க்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
திருநெல்வேலியில் ரூ.356 கோடி புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:நெல்லையின் அடையாளமாக விளங்கும் நெல்லையப்பர் கோவிலை, 700 ஆண்டுகளுக்குப் பிறகு புதுப்பித்து திருப்பணிகள் மேற்கொண்டவர் கருணாநிதி. அவர் வழியில், இக்கோவிலுக்கு ஏராளமான நலத்திட்டங்களை திராவிட மாடல் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, 1991ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் எரிந்த நெல்லையப்பர் கோவில் தேர் மீண்டும் ஓடும் என நான் அறிவித்தேன். அதன்படி, வரும் ஜனவரியில் நெல்லையப்பர் வெள்ளித்தேர் மீண்டும் ஓடும்.
தனித்துவமானது
பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்த பெருமிதத்துடன் நான் உங்கள் முன்னால் கம்பீரத்துடன் நின்று கொண்டு இருக்கிறேன். பொருநை தமிழர்களின் பெருமை. இந்திய துணைக் கன்டத்தின் வரலாறு, இனிமேல் தமிழ் நிலத்தில் இருந்து தான் தொடங்கி எழுதப்பட வேண்டும்.
கீழடி, பொருநை என்று நமது வரலாற்று தரவுகளை உரக்க பேசி கொண்டு இருக்கிறோம். தமிழர்களின் பண்பாடு தனித்துவமானது. முற்போக்கானது.இந்திய துணைக் கன்டத்தின் நாகரிகத்தின் தொட்டிலாக இருந்தது. அகழாய்வுகளுக்கு மத்திய பாஜ அரசு எப்படி எல்லாம் தடை போடுகிறார்கள் என்று தொடர்ந்து அம்பலப்படுத்தி கொண்டு இருக்கிறோம். அவர்களுடைய எண்ணம் என்ன?
தோற்கமாட்டோம்
தமிழர்களின் வரலாற்று தொன்மையை நிரூபிக்கும் ஆய்வுகள் ஏதும் நடக்க கூடாது. மீறி நடந்தாலும் அந்த ஆய்வு முடிவுகள் வெளியில் வந்து விடக்கூடாது. இப்படிப்பட்ட எண்ணம் கொண்ட , தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் வெறுப்போடு செயல்படுவதை எதிர்த்து தான், நாம் இன்றைக்கு உறுதியோடு எதிர்த்து போராடி கொண்டு இருக்கிறோம்.
இல்லாத சரஸ்வதி நாகரிகத்தை தேடி தேடி அலைபவர்களுக்கு கண் முன் நாம் வெளியிடும் ஆய்வுகள் தெரிவதில்லை. அதுக்காக நாம் சோர்ந்து போய் விட முடியுமா? நம்முடைய கடமைகளில் இருந்து நாம் பின்வாங்க முடியுமா? நம்முடைய வரலாற்றை விட்டு கொடுத்திட முடியுமா, நிச்சயம் முடியாது. 2 ஆயிரம் ஆண்டு கால சண்டை இது, தோற்றுப் போக மாட்டோம்.
வாங்க பிரதமரே!
உரிமையோடு உங்கள் எல்லோரையும் பார்த்து கேட்க விரும்புவது, நீங்கள் எல்லோரும் குடும்பத்துடன் அருங்காட்சியங்களை பார்க்க வேண்டும். கடந்த 2021ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம் அமைக்க அறிவிப்பு வந்தது. அந்த பணிகள் தற்போது எந்த நிலையில் இருக்கிறது. இன்னும் அதற்கான பணிகள் ஏதும் தொடங்கவில்லை.
உலகமே திரும்பி பார்க்கும் அளவுக்கு பொருநை அருங்காட்சியகத்தை உருவாக்கி இருக்கிறோம். இந்த நேரத்தில் பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் தமிழகத்தில் கட்டியிருக்கும் பொருநை, கீழடி அருங்காட்சியகத்தை பார்க்க வேண்டும். இந்த விழாவின் மூலமாக நான் அவர்களை அன்போடு அழைக்கிறேன். நீங்கள் வந்து பார்த்தால் தான், தமிழர்களின் நாகரிகத்தில் எந்தளவுக்கு தொன்மை இருக்கும் என்று தெரியும்.
நீக்கிவிட்டார்கள்
மக்களுக்கு தேவையானதை பார்த்து பார்த்து, செய்து தரக்கூடிய மக்கள் ஆட்சியை நாம் நடத்தி கொண்டு இருக்கிறோம். இதற்கு நேர் மாறாக, மக்கள் விரோத ஆட்சியாக மத்திய அரசு நடந்து கொண்டு இருக்கிறது.
இந்திய கிராமங்களின் உயிர்நாடியாக இருந்து பல கோடி ஏழை மக்களின் வறுமையை போக்கிய மஹாத்மா காந்தி 100 நாள் வேலைத்திட்டத்தை, இப்பொழுது பாஜ அரசு திட்டமிட்டு, முடக்கி இருக்கிறார்கள்.மஹாத்மா காந்தி என்கிற பெயரையே நீக்கி, பெரும்பாலான மக்களுக்கு புரியாத ஹிந்தி பெயரை வைத்து இருக்கிறார்கள். காந்தியையும் பாஜவுக்கு பிடிக்காது. உலகம் முழுவதும் இந்தியாவின் அடையாளமாக இருக்கிற தேச தந்தை காந்தியின் பெயரையே இன்றைக்கு நீக்கி இருக்கிறார்கள். 100 நாள் திட்டத்தின் உண்மையான நோக்கத்தையே காலி பண்ணிவிட்டார்கள். கடந்த 10 ஆண்டுகளாக இந்த திட்டத்தை பல வழியில் நாசப்படுத்தினார்கள். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

