PUBLISHED ON : மார் 20, 2025 12:00 AM

பிரபஞ்சம் மிகவும் அதிசயமானது. நமது சூரியக் குடும்பத்தில் இருக்கின்ற எண்ணற்ற விஷயங்களையே இன்னும் முழுதாகக் கண்டுபிடிக்கப்படவில்லை. பூமிக்கு இருக்கும் நிலவு ஒன்றுதான். நமது சூரிய குடும்பத்திலேயே மிக அதிகமான நிலவுகளைக் கொண்ட கிரகம் சனி. சமீபத்தில் சனி கோளைச் சுற்றி வரும் 128 புதிய நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தைவான், கனடா, அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்தப் புதிய கோள்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். சர்வதேச விண்வெளி ஒன்றியம் இந்தக் கண்டுபிடிப்பை மார்ச் 11ஆம் தேதி அங்கீகரித்துள்ளது.
கனடா பிரான்ஸ் ஹவாய் டெலஸ்கோப் (சிஎஃப்ஹச்டி) எனும் தொலைநோக்கி கொண்டு சனிக்கோளை 2019 முதல் 2021ஆம் ஆண்டு வரை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த ஆய்வில் 62 புதிய நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதேபோல் அடுத்தடுத்த ஆண்டுகளிலும் தொடர்ந்து சனிக்கோள் கண்காணிக்கப்பட்டு வந்தது. கண்டுபிடிக்கப்பட்ட நிலவுகளில் சில மிகவும் சிறியவை. சில கிலோமீட்டர் மட்டுமே அகலம் கொண்டவை. இவை பெரிய நிலவுகள் மோதிக் கொள்ளும்போது உடைந்து உருவான துகள்கள். இந்த ஆய்வு முடிவில் சனிக் கோளுக்கு மொத்தம் 274 நிலவுகள் உள்ளன என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.