PUBLISHED ON : மே 23, 2024 12:00 AM

பூமியில் உள்ளதை விட நிலவில் புவியீர்ப்பு சக்தி, ஆறு மடங்கு குறைவாக இருக்கும். அதாவது இங்கு 60 கிலோ இருக்கும் மனிதர் அங்கு வெறும் 10 கிலோ எடை தான் இருப்பார். இதனால், பூமியில் நடப்பது போல சுலபமாக நிலவில் நடக்க முடியாது. விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறங்கி நடந்தும், குதித்தும் செல்கின்ற வீடியோக்களைப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கலாம்.
ஆனால், நிலவில் நடந்து செல்கின்ற விண்வெளி வீரர், கீழே விழுந்து விட்டால் சுலபமாக எழுந்திருக்க முடியாது. எதிர் காலத்தில் மனிதர்களை மீண்டும் நிலவிற்கு அனுப்ப பல நாடுகளும் முயற்சி செய்து வருகின்றன. மாசசூசெட்ஸ் பல்கலை விஞ்ஞானிகள் இதற்குத் தீர்வு காண தீவிரமாக ஆராய்ந்து வந்தார்கள்.
விண்வெளி வீரர்கள் பொதுவாக நல்ல உடல் வலிமை உடையவர்களாகவே இருப்பர். இருந்தாலும் மிகவும் கனமான விண்வெளி உடைகளை அணிந்திருக்கும் போது அவர்களால், சுலபமாக எழ முடியாது. இதை மனதில் வைத்து அவர்களுக்கு உதவுகின்ற வகையிலான இயந்திர கால்களை, ஆய்வாளர்கள் வடிவமைத்திருக்கின்றனர். கப்பல் கட்டுமானம், விமானத் தயாரிப்பு, கட்டடத் துறைகளில் வேலை செய்பவர்களுக்கு உதவுகின்ற 'சூப்பர் லிம்ப்ஸ்' எனப்படும் இயந்திர கை கால்களை ஏற்கனவே விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கின்றனர்.
அவற்றை சற்றே மாற்றி, விண்வெளி வீரர்களுக்குத் தேவையான வகையில் தற்போது வடிவமைத்து உள்ளனர். நாசா விஞ்ஞானிகளின் வழிகாட்டுதலின்படி இவற்றை உருவாக்கி இருக்கின்றனர். இதனால், இனி எதிர்காலத்தில் நிலவில் சிரமமின்றி நடக்கலாம்.

