PUBLISHED ON : மே 01, 2025 12:00 AM

உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டால் உடனே, உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ளச் சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்துவார்கள். ஆனால், இதைவிடச் சிறந்த தீர்வு உணவில் பொட்டாசியத்தை அதிகப்படுத்துதல் என்கிறது சமீபத்திய ஆய்வு.
நாம் பயன்படுத்தும் உப்பில் சோடியம் அதிகமாக இருக்கிறது. உடலுக்கு சோடியம் இன்றியமையாதது. ஆனால் அதுவே அதிகமாகும்போது, அதைச் சமன்படுத்த உடல் அதிகமான தண்ணீரைக் கேட்கும். அதிகமாகத் தண்ணீர் பருகும்போது ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். அதனால் ரத்த அழுத்தம் அதிகமாகிறது. இதயத்திற்கு வேலைப் பளு கூடுகிறது. இதனால் பல மரணங்களுக்கு ரத்த அழுத்தம் காரணமாக அமைந்து விடுகிறது.
சமீபத்தில் கனடா நாட்டில் உள்ள வாட்டர்லுா பல்கலை மேற்கொண்ட ஆய்வில் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உண்பதால் ரத்த அழுத்தம் குறையும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொட்டாசியம் சத்து ரத்த நாளங்களுக்கும் இதயத்திற்கும் மிகவும் நல்லது. அதேபோல அளவுக்கு அதிகமான சோடியதைச் சிறுநீர் வழியாக வெளியேற்ற சிறுநீரகத்திற்கு உதவி செய்கிறது. எனவே பொட்டாசியம் சத்து அதிகமாக இருக்கக்கூடிய வாழைப்பழம், ஆப்பிரிகாட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, ப்ரோக்கோலி முதலியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் கூறி வருகிறார்கள்.