PUBLISHED ON : பிப் 29, 2024 12:00 AM

01. இன்று கடைகளில் கிடைக்கும் சாக்லேட்களில் அதன் மொத்த எடையில் 50 சதவீதம் சர்க்கரை மட்டும் தான் உள்ளது. சர்க்கரையின் அளவைக் குறைத்தால் சுவையுடன், சாக்லேட்டின் வழுவழுப்புத் தன்மையும் குறைந்துவிடும். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலப் பல்கலை, சர்க்கரைக்குப் பதிலாக குறிப்பிட்ட அளவு ஓட்ஸ் மாவைச் சேர்க்க பரிந்துரைத்தது. அதன்படி ஓட்ஸ் மாவு சேர்க்கப்பட்ட சாக்லேட்டின் சுவையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. அதேபோல் சாக்லேட்டின் வழுவழுப்புத் தன்மையும் அப்படியே இருந்தது.
![]() |
02. புரதச்சத்து நமக்கு மிகவும் அவசியமான ஒன்று தான். ஆனால், நாம் எடுத்துக் கொள்ளும் தினசரி கலோரிகளில் 22 சதவீதத்திற்கு மேல் புரதமாக இருந்தால் அது தமனிகளில் அடைப்பு ஏற்படுத்தி இதயநோய்களை உருவாக்கும் என, அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
![]() |
03. சூரியனைப் போல் 1,700 கோடி நிறையை உடைய கருந்துளை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது, நாள் ஒன்றுக்குசூரியனுக்குச் சமமான விண்வெளிப் பொருட்களை விழுங்கி, வளர்ந்துகொண்டே இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
![]() |
04. பூமியின் ஒரே துணைக்கோள் சந்திரன். இதில் ஆய்வுகள் மேற்கொள்ள சில நாடுகள் செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளன. அமெரிக்கா கடைசியாக 1972ம் ஆண்டு தன் அப்பல்லோ 17 செயற்கைக்கோளை நிலவில் தரை இறக்கியது. அதற்குப் பிறகு, அதாவது 52 ஆண்டுகள் கழித்து தற்போது தான் ஒடிசியஸ் செயற்கைக்கோளை அனுப்பியுள்ளது. உலகிலேயே முதல்முறையாக ஒரு தனியார் நிறுவனத்தால் அனுப்பப்பட்டு நிலவில் தரையிறங்கிய முதல் செயற்கைக்கோள் இதுதான்.




