PUBLISHED ON : ஜன 08, 2026 07:24 AM

1. கொலம்பியா பல்கலை விஞ்ஞானிகள், மூளையின் சமிக்ஞைகளை, கம்பியில்லா முறையில் ஏ.ஐ., கருவிக்கு அனுப்பும் 'பிஸ்க்' எனும் காகிதம் போன்ற சில்லு ஒன்றை உருவாக்கியுள்ளனர். அறுவை சிகிச்சை வாயிலாக நிறுவக்கூடிய இந்த சில்லில் உள்ள, 65,000 நுண்மின்முனைகள், மூளையில் ஓடும் எண்ணங்களை புரிந்துகொள்ள உதவும்.
2. இங்கிலாந்தில், புதைபொருள் ஆய்வில் கிடைத்த கல்லால் ஆன கருவிகள், 4 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே, 'நியாண்டர்தால்' மனிதர்கள், சிக்கிமுக்கிக் கற்களால் நெருப்பை உருவாக்கினர் என்பதை நிறுவுகின்றன. குளிர் காயவும், சமைக்கவும், மனிதர்கள் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் தீயை உருவாக்கினர் என்ற கணிப்பை, இந்த கண்டுபிடிப்பு மாற்றியமைத்துள்ளது.
3. புற்றுநோய் சிகிச்சைக்காக, வெகுநேரம் நரம்பு வழியே ஊசி மருந்தை செலுத்துவர். இதற்கு மாற்றாக, அமெரிக்காவின் எம்.ஐ.டி., ஆய்வாளர்கள், செறிவூட்டப்பட்ட நோய் எதிர்ப்புப் புரதங்களைக் கொண்ட 2 மி.லி., நானோ துகள்களை உருவாக்கி, அவற்றை ஊசி வாயிலாக செலுத்தும் சிகிச்சையை உருவாக்கியுள்ளனர்.
4. எதிரிகள் அனுப்பும் சிறிய ரக ட்ரோன்களை தடுக்க, அமெரிக்க ராணுவம், வாகனங்களில் பொருத்தக்கூடிய 20- கி.வா., லேசர் ஆயுதங்களை அறிமுகம் செய்துள்ளது. 'ஆற்றலை குவித்து செலுத்தும்' லேசர் வாயிலாக இயங்கும் இத்தொழில்நுட்பம், கூட்டமாக வரும் குட்டி ட்ரோன்களை துல்லியமாக, விரைவாகக் தாக்கி அழிக்கும்.
5. முன்பு கைவிடப்பட்ட டெங்கு எதிர்ப்பு மருந்தான, 'மோஸ்னோடென்விர்' தற்போது டெங்கு வைரஸ் இனப்பெருக்கம் செய்வதை விரைந்து தடுத்து, நோய்த்தொற்றின் வீரியத்தைக் குறைப்பதாக, புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது வெப்பமண்டல நாடுகளில், டெங்குப் பரவலைத் தடுக்க உதவும்.

