/
இணைப்பு மலர்
/
தீபாவளி மலர்
/
சென்னை முள்ளெலிகளின் தாய்மடி பனையடி
/
சென்னை முள்ளெலிகளின் தாய்மடி பனையடி
PUBLISHED ON : அக் 20, 2025

நமது சுற்றுச்சூழல் தளத்தில் இருந்து சில விலங்குகள் நாளுக்கு நாள் அழிந்து வருகின்றன. அந்த வரிசையில் அழிந்து வரும் சிங்கவால் குரங்கு, சென்னை முள்ளெலி, வரிக் கழுதைப்புலி ஆகியவற்றை பாதுகாக்க, ஒரு கோடி ரூபாய் செலவில் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அது சரி...அதென்ன...சென்னை முள்ளெலி? அது ஏன் பாதுகாக்கப்பட வேண்டும்? சுற்றுச்சூழல் எழுத்தாளர் கோவை சதாசிவத்திடம் கேட்போம்...
பொதுவாக முள்ளெலிகளின் உடலில் 2 அடுக்கு தோல் இருக்கும். ஆனால் இந்தியாவின் தென்னக பகுதியில் குறிப்பாக தமிழகத்தில் வாழும் முள்ளெலிகள் 3 அடுக்கு தோல் கொண்டவையாக இருந்ததால், 'சென்னை முள்ளெலி' என தனித்து அழைக்கப்பட்டது.
பெரும்பாலும் பனை மரத்தின் வேர்ப்பகுதியில் தான் முள்ளெலிகள் பதுங்கி வாழும்; அந்த இடம் தான் அவற்றுக்கு பாதுகாப்பான, நல்ல சூழலை ஏற்படுத்தி கொடுக்கும் இடமாக இருக்கிறது. பனையடி தான் முள்ளெலிகளின் தாய்மடி என்று சொல்வது பொருத்தம்!
இரவில் இரை தேடி வெளியே வரும். பூச்சிகளை அதிகளவில் உண்ணும். பொதுவாக, புழு, பூச்சிகளை உண்ணும் பறவையினங்கள், வண்டு, நத்தை போன்ற மேல் ஓடு வேயப்பட்ட பூச்சிகளை உண்பதை தவிர்த்து விடும். அதற்கு காரணம் அவற்றை உண்டு செரிக்கும் அளவுக்கு பறவைகளிடம் ஜீரண சக்தி கிடையாது.
ஆனால் வண்டு, நத்தை போன்ற ஓடு வேயப்பட்ட சிறிய பூச்சியினங்களை முள்ளெலிகள் தேடிப்பிடித்து உண்ணும். அவற்றின் ஒடுகளை கூட கடித்து உண்டு செரிக்கும் ஆற்றலை முள்ளெலிகள் கொண்டுள்ளன. மழைக்காலங்களில் அதிகளவில் பெருகும் 'வரட்டை' எனும் பூச்சிகளையும் வெள்ளெலிகள் உண்ணும். இதனால் வண்டு, நத்தை, மழைக்காலங்களில் பெருகும் வரட்டை உள்ளிட்டவற்றால் பயிர்கள் சேதமாவது தவிர்க்கப்படும்.
முள்ளெலிகளின் சுய வைத்தியம்
முள்ளெலிகள் தன்னை தற்காத்துக் கொள்ள பல வழிமுறைகளை கையாள்கிறது. ஒரு முள்ளெலி தன் உடம்பில் ஐந்தாயிரம் முதல் ஏழாயிரம் முட்களை கொண்டிருக்கும். கோடை காலத்தில் அதிகளவு வெப்பம் காரணமாக அவற்றின் உடலில் நீர்சத்து குறைந்துவிடும்; இதனால் அவை சோர்ந்து விடும். அந்த சமயத்தில் அவற்றின் உடலில் 'உண்ணி' எனப்படும் நுண்ணுயிரும் அதிகளவில் தொற்றிக் கொள்ளும்.
அந்த சமயத்தில் முள்ளெலிகள் தன்னை தானே சுய வைத்தியம் செய்து கொள்ளும் என்பது, இயற்கையின் படைப்பில் ஒரு வியப்பு. ஒரு இரையை மென்று, மென்று உமிழ்நீரை சுரக்க செய்து கொண்டே இருக்கும். அந்த உமிழ்நீர், நுரை போன்று மாறும். அதை தன் நாவால், உடல் முழுக்க பூசிக்கொள்ளும்; ஒரு வித நச்சுத்தன்மையுள்ள அந்த நுரை,
அவற்றின் உடலில் தொற்றியுள்ள நுண்ணுயிர்களை அழித்துவிடும். அழிந்து போன நுண்ணுயிர்களை தன் உடலில் இருந்து அப்புறப்படுத்த, எறும்பு பொந்து உள்ள இடத்திற்கு போய் படுத்துக் கொள்ளும். அவற்றின் உடலில் உள்ள நுரையின் வாசத்தால் ஈர்க்கப்படும் எறும்புகள், முள்ளெலிகள் மீது ஏறி, அவற்றின் உடம்பில் படர்ந்துள்ள நுண்ணுயிர்களை உணவாக்கிக் கொள்ளும்.
முள்ளெலிகள் தனித்து தான் வாழும். இரை தேடலுக்கான தன் எல்லையை 2 சதுர கி.மீ., சுற்றளவுக்கு வரையறுத்துக் கொள்ளும். பனை மரங்கள் அழிக்கப்பட்டு, சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டது உட்பட பல காரணங்களால், விவசாய பயிர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய பூச்சிகளை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய முள்ளெலிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இந்த உலகில் பூச்சியினங்கள் தான் மிகப்பெரும் அளவில் பெருகிக் கொண்டே இருக்கும். அவற்றை கட்டுப்படுத்துவதில் இயற்கையாக முள்ளெலிகளின் பங்களிப்பு அதிகம்; அவசியமும் கூட. எனவே முள்ளெலிகளின் வாழ்வியல் இடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

