/
இணைப்பு மலர்
/
தீபாவளி மலர்
/
பொழுது போக்கிற்காக சேகரித்தவை பொக்கிஷமானது: கின்னஸ் சாதனையாளர் ராபர்ட் கென்னடி
/
பொழுது போக்கிற்காக சேகரித்தவை பொக்கிஷமானது: கின்னஸ் சாதனையாளர் ராபர்ட் கென்னடி
பொழுது போக்கிற்காக சேகரித்தவை பொக்கிஷமானது: கின்னஸ் சாதனையாளர் ராபர்ட் கென்னடி
பொழுது போக்கிற்காக சேகரித்தவை பொக்கிஷமானது: கின்னஸ் சாதனையாளர் ராபர்ட் கென்னடி
PUBLISHED ON : அக் 20, 2025

உலகில் கடிகாரம் கண்டுபிடிக்கும் வரை பகலில் சூரியன் நகர்வை வைத்து நேரத்தை கணித்தனர். அதன்பின் மணல் கடிகாரம், நீர் கடிகாரம் என வடிவமைத்தனர். கி.பி.1650ல் ஊசல் கடிகார பரிணாம வளர்ச்சி துவங்கி இன்று ஸ்மார்ட் கடிகாரமாக வளர்ந்துள்ளது.
சாவி கொடுத்தால் இயங்கும் பழமையான கடிகாரங்களை சேகரித்து, கின்னஸ் சாதனை படைத்துள்ளார் சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த ராபர்ட் கென்னடி. அமெரிக்காவை சேர்ந்த ஜாக்ஸ்காப் என்பவரின் சாதனையை முறியடித்துள்ளார். கின்னஸ் சாதனையாளர் ராபர்ட் கென்னடி கூறியதாவது:
எனது ஊர் நாகர்கோவில். தந்தை தலைமை ஆசிரியர் சில்க்ஸ்ன் ஜார்ஜ், வீட்டில் ஒரு பழமையான சுவர் கடிகாரத்தை பராமரித்து வந்தார். அதற்கு சாவிகொடுத்து இயக்கும் போது அதனை நான் பிரமிப்பாக பார்ப்பேன். அந்த கடிகாரம் பற்றி கேட்ட போது, எனது தாத்தா ஆங்கிலேயர்களிடம் மூணாறு எஸ்டேட்டில் மேனேஜராக பணிபுரிந்த போது அங்கிலேயேர்கள் வழங்கியது' என்றார்.
1983களில் பேட்டரி கடிகாரம் வந்த போது அந்த பழைய கடிகாரம் ஓரம் கட்டப்பட்டது. நான் அதனை பத்திரபடுத்தினேன். அதன்பிறகு பொழுதுபோக்காக பழைய கடிகாரங்களை வாங்க துவங்கினேன். இதற்காக சென்னையில் பழைய பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களுக்கு செல்வேன்.
புதுச்சேரியில் கணினி நிறுவனத்தில் பணிபுரிந்த போது பிரான்ஸ் நாட்டினர் பலர் அறிமுகமாகினர். அதில் ஒரு முதியவர் நல்ல நண்பரானார். அவரும் கடிகாரங்கள் சேகரிப்பாளர். அவர் சொந்தநாடு திரும்புவதாக கூறி ஆரோவில் உள்ள வீட்டிற்கு அழைத்தார். அங்கு சென்ற போது, நெப்போலியன் அரண்மனையில் கடிகாரங்கள் செய்தவரின் வாரிசு தயாரித்த கடிகாரத்தை எனக்கு வழங்கினார்.
அதனுடன் சிறிய நெப்போலியன் சிலையும் வழங்கினார். பொழுதுபோக்காக தேட துவங்கியது ஒரு கட்டத்தில் பொக்கிஷமாகியது.
295 ஆண்டுக்கு முன் தயாரித்த கடிகாரம்
தற்போது 2300 கடிகாரங்கள் உள்ளன. இதில் 1706 கடிகாரங்கள் கின்னஸ் அங்கிகரித்துள்ளது. இச்சாதனைக்காக 2017ல் விண்ணபித்தேன். பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு 2023ல் அங்கீகரித்து சான்றிதழ் வழங்கினர். என்னிடம் உள்ளதில் மிகவும் பழமையானது 295 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட கடிகாரம் ஆகும். இதை 1994ல் மாயவரத்தில் பழைய பொருட்கள் கடையில் வாங்கினேன். உலகிலேயே சிறிய ஊசல் கடிகாரமும் உள்ளது. என்னிடம் உள்ள அனைத்து கடிகாரங்களும் சாவி கொடுத்தால் இயங்குபவை. இரும்பு, மரம், உலோகப் பொருட்களால் ஆனது. கை கடிகாரங்கள் 1500, பாக்கெட் கடிகாரங்கள் 500 உள்ளன. கைகடிகாரங்கள் கின்னசில் இடம் பெறாது. இதனை சேகரிக்க கோல்கட்டா, மும்பை, பெங்களூரு, புதுச்சேரி தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்றுள்ளேன். இன்று இணையதள வசதியால் பழமையான பொருட்கள் கிடைப்பது எளிதாகி உள்ளது. அதனை வாங்கபோட்டி அதிகரித்துள்ளது.
சென்னை கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் அருகே எனது அருங்காட்சியகத்தில் 20 சதவீதம் கடிகாரங்களை மட்டும் காட்சிப்படுத்தி உள்ளேன். அனைத்தையும் காட்சிப்படுத்த போதிய இடம் இல்லை. மாணவர்கள் பலர் வருகின்றனர். ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் பார்க்க முடியாது. சிறிய இடமாக உள்ளதால் பலர் பொருட்களை சேதப்படுத்துகின்றனர். இச் சேகரிப்புகளை நாட்டிற்கு அர்பணிக்க தயாரக உள்ளேன். அரசு உரிய அங்கீகாரம் அளிக்க வேண்டும்.
விரும்பி உழைத்தால் கஷ்டம் தெரியாது. அதுவே வெற்றியின் ரகசியம். 1990க்குப் பின் சாவியால் இயங்கும் கடிகாரங்கள் உற்பத்தி இல்லை. இன்றும் பல வீடுகளில் பழைய பொருட்களின் அருமை தெரியாமல் குப்பையில் வீசுவது கவலை அளிக்கிறது என்றார்.
பாராட்ட 98406 89408

