/
இணைப்பு மலர்
/
தீபாவளி மலர்
/
எழுதித் தீராதவை பெண்களின் வாழ்க்கை: கவிஞர் மனுஷி
/
எழுதித் தீராதவை பெண்களின் வாழ்க்கை: கவிஞர் மனுஷி
PUBLISHED ON : அக் 20, 2025

விழுப்புரம் மாவட்டம் திருநாவலுாரை சேர்ந்த ஜெயபாரதி, 'மனுஷி' எனும் பெயரில் கவிதைகள், சிறுகதைகள் எழுதுகிறார். 'ஆதிக்காதலின் நினைவுக் குறிப்புகள்' கவிதை தொகுப்பிற்கு 2017ல் சாகித்ய அகாடமி யுவபுரஷ்கார் விருது பெற்றவர். “வாழ்வதில் ஒன்றுமில்லை வாழ்க்கை பிய்த்தெறியப்பட்ட ஒரு மலராகிவிட்ட பிறகு மரணத்திலும் ஒன்றுமில்லை அது வெறும் சொல்லாகிவிட்ட பிறகு”-என்பது போன்ற கவிதை வரிகளை படைத்தவர் இந்த மனுஷி. 'இரும்பன்' திரைப்படத்தில் 'உன் வெள்ளந்தியோ அழகுதான்...' பாடல் இவர் எழுதியது. இவரோடு ஓர் உரையாடல்...
* இலக்கியப் பின்புலம் இல்லாத குடும்பத்திலிருந்து வந்து இலக்கியத்தில் தடம் பதித்தது எப்படி?
கவிதை எனது அடையாளமாக மாறும் என நினைத்ததே இல்லை. இளங்கலை தமிழ் பயின்றபோது மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் படித்ததை விட, நுாலகத்தில் புத்தகங்களை வாசித்தது அதிகம். புதுச்சேரி பல்கலையில் முதுகலை படிப்பில் சேர்ந்தபோது அங்கிருந்த பாடத்திட்டம் எனது இலக்கிய வாசிப்பை விரிவாக்கியது. நான் வாசித்த புத்தகங்கள் தனிமை, வெறுமையை இல்லாமல் செய்தன. அம்மாவின் அன்பு, அப்பாவின் அரவணைப்பு இல்லாமல் வளர்ந்ததாலோ வாசிப்பின் வழியாக அந்த ஏக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் இல்லாமல் இருந்தன.
வாசிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் உரையாட நம்பிக்கையான நட்பு வட்டமோ, உறவோ இல்லாத அந்த இடத்தை எழுதி தீர்த்துக் கொண்டேன். அதுதான் என்னை கவிதையை நோக்கி இழுத்துவந்தது.
* பெண்களை பற்றி இன்னும் எழுத வேண்டிய பக்கங்கள் என்ன?
சங்க இலக்கியம் துவங்கி சமகால இலக்கியங்கள்வரை பெண்களை பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கின்றன. இலக்கியங்களில் பெண்களுக்கான இடம் அதிகம் என்பது போல் ஒரு மாயத்தோற்றம் இருக்கும். ஆனால் அவை எல்லாம் ஆண்களால் கட்டமைக்கப்பட்ட பெண்களாகத்தான் இருக்கிறார்கள். அவ்வையார், அள்ளூர் நன்முல்லையார், ஆண்டாள் எனச் சில பெண்பாற்புலவர்களிடம் அசலான பெண் குரலைப் பார்க்க முடியும்.
நம் சமூகத்தை பொறுத்தவரை, பெண்களுக்கான பிரச்னைகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. பெண்களுக்கான கனவு, லட்சியம் அவர்கள் வாழ விரும்பும் வாழ்க்கை ஒரே மாதிரியானவை அல்ல. குடும்ப அமைப்புக்குள் சுருங்கிக் கிடந்த பெண்களின் உலகம் இன்று பொருளாதாரத் தேவைகளுக்காக பொதுவெளிக்கு வரத்துவங்கியுள்ளது.
கல்வி, பெண்களுக்கான வெளியை
விசாலமாக்கியுள்ளது. பல துறைகளில் சாதனை படைக்கின்றனர். ஆனாலும், பெண் எனும் பாலின அடையாளத்தால் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல், தடை, வன்முறை, ஒடுக்குமுறைகள் குறைந்தபாடில்லை. பல துறைகளில் பெண்களின் உலகம் என்னவாக இருக்கிறது என்பதெல்லாம் எழுதப்படாத களங்களாகத்தான் இருக்கிறது.
பெண்களின் காதல்கள் கூட இன்னும் முழுமையாக நவீன இலக்கியத்தில் பேசாப் பொருளாகத்தான் இருக்கிறது. எனவே எழுதித் தீராதவை பெண்களின் வாழ்க்கை.
* மறக்க முடியாத அனுபவம், பாராட்டுகள்
மறக்க முடியாத அனுபவம் சிறுவயதிலேயே என் தாயை இழந்ததுதான். தாய் இனிமேல் வரவேமாட்டார் என்பதை புரிந்து கொள்ளவே சில காலம் ஆனது. அதிலிருந்து மீண்டு வருவதற்காகவே புத்தகங்கள் வாசிக்கத் துவங்கினேன்.
எழுத வந்தபின் அது பெரும் ஆறுதலாகவும், வாழ்க்கையைப் பற்றிக் கொண்டு பயணிக்க உந்து சக்தியாகவும் கவிதை இருந்தது. எனது முதல் கவிதை தொகுப்பு வெளிவந்தபோது மறைந்த விமர்சகர் வெங்கட்சாமி நாதன் கணையாழியில் எழுதிய விமர்சனம் ஆச்சரியப்படுத்தியது. மோதிரக் கையால் குட்டு வாங்குவது என்பார்களே அது போல. இரண்டாவது கவிதைத் தொகுப்பு குறித்து, எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதிய விமர்சனம். எனது கவிதைகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய விருதாக பார்க்கிறேன்.
* நவீன இலக்கியம் மூலம் தமிழ்ச் சமூகம் பெற்றதும், இழந்ததும்?
நவீன இலக்கியம் தமிழ்ச் சமூக மனசாட்சியின் குரலாக ஒலிப்பதை பார்க்க முடிகிறது. இலக்கியத்தின் வேலையே அதுதான் என்றாலும்கூட, அதிகார மையத்தைக் கேள்வி கேட்க, பாதிக்கப்பட்டவர்களின் நியாயத்தைப் புரிந்து கொள்ள வாசகனை பக்குவப்படுத்தும் வேலையை சமகால இலக்கியங்கள் செய்கின்றன. இலக்கியத்தின் தலையாய கடமை அது மட்டும்தான்.
கருத்து பரிமாற 99944 84704

