/
இணைப்பு மலர்
/
தீபாவளி மலர்
/
தமிழ் சாசனங்களில் நரகாசுர வதம்: - சிலாய்க்கும் சிரா
/
தமிழ் சாசனங்களில் நரகாசுர வதம்: - சிலாய்க்கும் சிரா
தமிழ் சாசனங்களில் நரகாசுர வதம்: - சிலாய்க்கும் சிரா
தமிழ் சாசனங்களில் நரகாசுர வதம்: - சிலாய்க்கும் சிரா
PUBLISHED ON : அக் 20, 2025

''எட்டாம் நுாற்றாண்டிலும், பல்லவர், சோழ மன்னர்கள் காலத்திலும், கோயில், வீடுகளில் தீப உற்ஸவம், தீப திருவிழா என பல பெயர்களில் தீபாவளி கொண்டாடப்பட்டது செப்பேடுகள், கோயில் கல்வெட்டுகளான தமிழ் சாசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது எனக் கூறுகிறார் கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் சிவராமன் என்ற சிரா.
கோகுலாஷ்டமி என முதல் சிறுகதையை எழுதி எழுத்துலகில் நுழைந்த இவர் மித்ரன், மகாரதன், சோழன் தலை கொண்ட வீரபாண்டியன், சோழ எல்லை, செம்பியன்கிழாலடிகள், சோழச்சிம்மம் ஆதித்த கரிகாலன் என அடுத்தடுத்து ஆறு புத்தகங்கள் மூலம் வரலாறு புனைவுகள் வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.
சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தபடி எழுத்துலகிலும் பயணிக்கும் சிராவிடம் பேசியதிலிருந்து...
அப்பா, அம்மா நிறைய வாசிப்பார்கள். நான் அதிகம் வாசித்ததில்லை. கல்கி, சிவசங்கரி, இந்திரா செளந்தர்ராஜன், ஜெயகாந்தன் நுால்களின் அறிமுகம் கிடைத்த 2012 லிருந்து தான் வாசிக்க துவங்கினேன். தி.ஜானகிராமன் எழுத்துக்களை அதிகம் வாசித்தேன். பிறகு ரஷ்யா, அமெரிக்கா, பிரெஞ்ச் இலக்கியங்களை வாசித்தேன். பின்னாளில் அந்த எழுத்துக்கள் மண் சார்ந்து இல்லை என மனதில்பட்டது. அதனால் அதிலிருந்து விலகி ஜெயமோகன், ஜெயகாந்தன் கதைகளை வாசித்தேன்.
நான் முதன் முதலில் படித்த தமிழ் வரலாற்று நாவல் ஜெகசிற்பியன் எழுதிய திருச்சிற்றம்பலம். என் வீட்டில் 1200 புத்தகங்களுடன் சிறிய நுாலகம் உள்ளது. இந்தியன் ஹிஸ்ட்ரோபீடியா என்ற பெயரில் யுடியூப் சேனல் நடத்தி வருகிறேன். நான் தெரிந்து கொண்ட, பயணித்த வரலாற்று இடங்களை பற்றி அதில் பதிவிட்டு வருகிறேன். இன்றைய நவீன காலகட்டத்திற்கு புத்தகங்கள் அவசியம் தேவை. நம் கண்ணில் உள்ள திரைகளை விட்டு விலகி வர, ஒரே விஷயமாக இருப்பது புத்தகங்கள் தான். வீட்டில் உள்ள பெரியவர்கள், முதலில் புத்தகங்களை எடுத்து வாசித்தால் தான் குழந்தைகளும் படிக்க துவங்குவர்.
எத்தனை நாளைக்கு தான் படித்து கொண்டே இருக்கப் போகிறாய். நீ எப்போது புத்தகங்களை எழுதப் போகிறாய் என நண்பர்கள் கேள்வி எழுப்பினர். அதுதான் என்னையும் எழுத துாண்டியது. கோவிட் நேரத்தில் ஒரு வெப்சைட் சிறுகதை போட்டி நடத்தியது. அதில் ராஜேந்திரசோழன் படையெடுப்பை பற்றி 'மித்ரன்' என்ற நுாலாக எழுதியிருந்தேன். அது பேசப்பட்டது.
பிறகு தான் நம் மண் சார்ந்த வரலாற்றை சொல்லலாம் என தோன்றியது. இதற்காக கல்வெட்டு, செப்பேடுகளை படிக்க கற்று கொண்டேன். வரலாறு மீது தீராத காதல் இருந்தது. அப்படி எழுதிய மித்ரன் புத்தகம் பெஸ்ட்ஜூரி விருதையும் வென்றது. பிறகு மதாரதன் புத்தகம் எழுதினேன். அது நந்திவர்மபல்லவன் காலகட்ட கதை. பிறகு சோழர்கள் குறித்து நிறைய கதைகள் எழுதினேன்.
தீபாவளி என்றாலே வீடுகளில் புத்தாடைகள், பலகாரங்கள், பட்டாசுகளுடன் கொண்டாட்டம் இருக்கும். இதுகுறித்து வரலாற்று ஆராய்ச்சியாளர் சங்கரநாராயணன் தமிழ் சாசனங்களை ஆய்வு செய்து தெரிவித்திருக்கிறார். மகாவிஷ்ணு நரகாசுரனை வதம் செய்த போது அவனது வேண்டுகோளுக்கு ஏற்ப தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதாக ஒரு கதை வழிவகையாக கூறப்படுகிறது.
இரண்டாம் நந்திவர்ம பல்லவன் காலத்து மங்கள செப்பேடுகளை ஆய்வு செய்த போது 'ப்ரஹ்மாவூத் நரசாரி நாபி கபிலாத்' என்ற வரிகள் உள்ளன. 'நரகாசுரனை அழித்த விஷ்ணுவிடம் இருந்து பிரம்மா தோன்றினார்' என்ற பொருளில் அது உள்ளது. சுந்தரசோழன் காலத்து அன்பில் செப்பேட்டில் 17வது செய்யுளில் விஜயாலயசோழன் திருமால் வடிவமாக புகழப்படுவதாக உள்ளது. எட்டாம் நுாற்றாண்டிலேயே நரகாசுர வதம் குறித்த வரிகள் இருப்பதால் அப்போது தீபாவளி கொண்டாட பட்டிருப்பதை அறிய முடிகிறது.
ஸ்ரீரங்கம் கோயிலில் வேணாட்டரசான ராமவர்மகுலசேகரன்திருவடி காலத்து கல்வெட்டில் தீப உற்ஸவம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தீப உற்ஸவம் புரட்டாசி இறுதி என குறிப்பிடப்படுவதால் அது தீபாவளி என ஊகிக்க முடிகிறது. காஞ்சி அருளானந்த பெருமாள் கோயிலில் 1555ம் காலத்தில் பெருமாள் எழுந்தருளும் நாள் தீபஓளி என உள்ளது. 1588ம் ஆண்டு ஸ்ரீரங்கராயர் கல்வெட்டில் தீபாவளி முதல் கார்த்திகை தீப திருநாள் வரை என்ற வரிகள் உள்ளன.
திருப்பதி திருமலை வெங்கடாஜலபதி கோயிலில் 1542 காலத்து கல்வெட்டு ஒன்றில் தீபாவளிக்கான அதிரச படி என குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த காலத்தில்இருந்தே தீபாவளி பல்வேறு பெயர்களில் கொண்டாப்பட்டு வந்திருக்கிறது. நாமும் உற்சாகமாக கொண்டாடுவோம் என்றார்.
மேலும் பேச 97905 09087

