PUBLISHED ON : நவ 08, 2026

கங்குலும் விடியும் முன்னே
கடிதெழுந்(து) எண்ணெய் தேய்த்து
மங்கலப் புனலில் மூழ்கி
மகிழ்ந்து புத்தாடை பூண்டு
எங்குலம் எம்மின் முன்னோர்
ஏழ்குலம் போற்றும் நாளாம்
செங்கதிர் விடியல் பாடும்
செழிப்புடைத் தீபத் திருநாள்
இடியெனும் ஓசை தோற்க
இடைவிடா(து) ஒலிக்கும் சரசர
வெடிகளின் சத்தம் கேட்டும்
விண்ணெழும் ராக்கெட் சிந்தும்
சுடுபொறி கண்டும் அஞ்சிச்
சூழ்ந்திடும் மேகக் கூட்டம்
அடிபெயர்ந்(து) ஓடக் கண்டால்
அண்டமும் அதிரும் அம்மா
வித்தைபோல் மத்தாப்(பு) எல்லாம்
விண்மீன்மண் வீழ்ந்தன போலும்
புத்தொளிப் புஸ்வா னங்கள்
பொன்மழை பொழிந்தன போலும்
முத்தெனும் சக்கரங்கள்
முழுமதி சுற்றல் போலும்
எத்திசை பாயும் ஒளியால்
ஆதவன் நாணுவன் அன்றே
பக்குவப் பாகில் தோய்ந்து
பரவிடும் நெய்யின் வாசம்
முக்கனி போலும் லட்டும்
முறுவல்கொள் அதிர சங்கள்
பக்கமே குவியும் தட்டில்
பல்தொடும் முறுக்கின் ஓசை
மிக்குயர் பண்டக் குவியல்
மிரட்டுமே இமயம் அம்மா
பார்மிசைத் தீமை செய்த
பாவியாம் நரகா சுரனைப்
போர்முகந் தன்னில் பொன்றப்
பொற்புடைப் பாமை யோடும்
கார்நிறக் கண்ணன் வென்ற
காலமாய் அமைந்த தாலே
சீர்பெறும் நாள்ஈ தென்றே
செங்கதிர் புலர்ந்த(து) அன்றே
இன்னலாய் நின்ற தீமை
இருளென்று மடியும் என்றும்
நன்னலம் பெருகும் என்றும்
நானிலம் உய்யும் என்றும்
பொன்னொளிர் விளக்கை யேற்றிப்
பொலிவொடு பரவும் தீபம்
இந்நிலம் பொங்கி வாழ்க
இன்பம்இவ் வகிலம் சூழ்க
- டாக்டர் எஸ். மீனாட்சி சுந்தரம்
மதுரை
