
ஓரிடத்தில் பெண்கள் சிலர் சந்தித்தால் அரட்டை, கேலி, கிண்டலுக்கு பஞ்சமிருக்காது. ஆனால் இந்த 8 பேரும் சந்தித்தாலோ, வீடியோ காலில் பேசினாலோ விவாதங்களுக்கும், கருத்து பரிமாற்றத்திற்கும் குறைவிருக்காது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெண் எழுத்தாளர்களின் நுால்கள் குறித்து யதார்த்தமாக இவர்கள் விவாதித்ததுதான் இன்று, பெண்ணியம் குறித்து பேசும் 'நாயகி' என்ற நிகழ்ச்சியாக மாறி இருக்கிறது. இந்த நாயகியை' வழிநடத்தி கொண்டிருப்பவர்கள் சென்னையைச் சேர்ந்த தீபா, அகிலா, காயத்ரி, ஜெயஸ்ரீ, பாலைவன லாந்தர், ரேவா, சவிதா, தமிழ் பொன்னி எனும் எட்டு நாயகியர். தினமலர் தீபாவளி மலருக்காக இங்கே பேசுகிறார்கள்...
''நாங்கள் ஒவ்வொருவரும் சென்னையில் வெவ்வேறு தொழில் செய்து கொண்டிருப்பவர்கள். எங்களை ஒரே புள்ளியில் இணைத்தது எழுத்தும், வாசிப்பும்தான். நாங்கள் சந்திக்கும்போது படித்த நுால்கள் குறித்து விவாதிப்போம். அப்படி மறக்கடிக்கப்பட்ட பெண் எழுத்தாளர்களின் நுால்கள் குறித்து பேச்சு வந்தது. தேட ஆரம்பித்தபோதுதான் தெரிந்தது, அவர்களை இந்த சமூகம் கொண்டாடவில்லை என்று.
பெண் எழுத்தாளர்கள் சூடாமணி, சித்தி ஜுனைதா பேகம், கோதைநாயகி, சாவித்ரி அம்மாள், அழகிய நாயகி அம்மாள், எழுத்தாளர் புதுமை பித்தனின் மனைவி கமலா விருத்தாச்சலம், அனுத்தம்மா, குமுதினி ராஜம் கிருஷ்ணன், சரஸ்வதி ராம்நாத் போன்ற 30 பேரின் படைப்புகளை தேடி வாசித்தோம். அவர்களின் படைப்புகள் குறித்து நாம் விவாதிப்பதை விட, மற்றவர்களை பேச வைத்தால் சிறப்பாக இருக்குமே என எண்ணினோம்.
பெண் எழுத்தாளர்கள், தங்கள் படைப்புகளின் நாயகி' என்பதால் அந்த பெயரிலேயே நிகழ்ச்சியை கடந்த மார்ச்சில் சென்னையில் ஒரு அரங்கில் நடத்தினோம். நாங்களே எதிர்பார்க்காத அளவிற்கு நல்ல வரவேற்பு.
இதே கருத்தை மையமாக கொண்டு அடுத்த நிகழ்ச்சியை நடத்தாமல் வேறு ஒரு கருத்துருவை தேடினோம். சுதந்திர போராட்ட தலைவர்கள் குறித்து அறிந்தவர்கள், அவர்களின் மனைவி குறித்து பெரும்பாலும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இதனாலேயே அவர்களின் தியாகங்களும் வெளியே வரவில்லை. உதாரணமாக வ.உ.சி.,யின் தியாகங்கள் குறித்து பேசும் நாம், அவரது மனைவி மீனாட்சி குறித்து பேசுவதில்லை.
வாஞ்சிநாதனின் வீரத்தை பேசும்போது அவரது மனைவி பொன்னம்மாள் குறித்து பேசுவதில்லை. இப்படி தியாகிகளின் மனைவிகள் குறித்து பேசும் நிகழ்ச்சியை ஆக.,15 ல் நடத்தினோம்.
வ.உ.சி., வ.வே.சு., பாரதியார், நாமக்கல் ராமலிங்கம், வாஞ்சிநாதன் ஆகியோரின் மனைவிகள் குறித்து, அரசியல், விடுதலை போரில் அவர்களின் பங்களிப்பு, போராட்ட வாழ்க்கை என அவர்களின் பின்னணியை அறிந்தவர்களை அழைத்து பேச வைத்தோம்.
வ.உ.சி., குறித்து ஆய்வு மேற்கொண்ட ரெங்கையா முருகனை பேச வைத்து வ.உ.சி., மனைவியின் தியாகங்களை தெரியப்படுத்தினோம். வாஞ்சிநாதனின் மனைவி குறித்து பேராசிரியர் சவுந்திர மகாதேவனை பேச அழைத்திருந்தோம். அன்று அவர் வரமுடியாத சூழல். ஆனாலும் திட்டமிட்டபடி நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்பதற்காக எங்களில் ஒருவரான தீபா பேசினார். இப்படி ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு 'கான்சப்ட்' அடிப்படையில் நிகழ்ச்சியை நடத்த உள்ளோம்'' என்கின்றனர் இந்த அஷ்ட நாயகியர்.
இவர்களை வாழ்த்த nayagi2025@gmail.com

