/
இணைப்பு மலர்
/
தீபாவளி மலர்
/
வயலில் ஒரு கால்; வகுப்பறையில் மறுகால்: சாகுபடியில் சாதிக்கும் ஆசிரியை
/
வயலில் ஒரு கால்; வகுப்பறையில் மறுகால்: சாகுபடியில் சாதிக்கும் ஆசிரியை
வயலில் ஒரு கால்; வகுப்பறையில் மறுகால்: சாகுபடியில் சாதிக்கும் ஆசிரியை
வயலில் ஒரு கால்; வகுப்பறையில் மறுகால்: சாகுபடியில் சாதிக்கும் ஆசிரியை
PUBLISHED ON : அக் 20, 2025

விதைக்கணுமா, நாற்று பறிக்கணுமா, நெல் நடவா, அறுவடையா... எல்லா விவசாய பணியையும் செல்ல மகள் துவக்கினால்தான் சொல்லும்படி மகசூல் கிடைக்கும் என்பார் எனது தந்தை' என்கிறார் மதுரை திருப்பாலையை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை பிரசன்னா. எம்.எஸ்சி., பி.எட்., முடித்து, ஆசிரியையாக பணியாற்றினாலும், சிறுவயது ஆர்வத்தால், இன்றும் இவரது எண்ணமெல்லாம் வயலில் ஒருகால், வகுப்பறையில் மறுகால் என்றுதான் இருக்கிறது.
சத்துணவு திட்ட ஊழியராக இருந்த தந்தை சோலைமலை, அக்மார்க் முத்திரை பெறாத விவசாயி. சாகுபடியில் ஆர்வம் கொண்ட அவர், 2005ல் செம்மை நெல் சாகுபடி தொழில்நுட்பத்தால் அதிக நெல் விளைவித்தமைக்காக முதல்வர் ஜெயலலிதாவிடம் விருது பெற்றவர். 2011ல் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் கிரிஷ் கர்மான்' விருது பெற்றார்.
தந்தை வேளாண் உண(ர்)வூட்டி வளர்த்ததால் சாகுபடி பணிகளை சர்வ சாதாரணமாக கையாள்கிறார் பிரசன்னா. கல்விப் பணியில் இருக்கும்போது, இது எப்படி சாத்தியம் என்றால், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களை இதற்காக ஒதுக்கி விடுகிறேன்' என்று கூறும் அவர், விதைநெல், நெல்ரகம், நாற்று பாவுவது, நடுவது, அறுவடை என எல்லா விஷயங்களையும் விரல் நுனியில் வைத்துள்ளார்.
மரபு வழி சாகுபடியை மாற்ற விவசாயத்துறை ஆலோசனை பெற்று, 2016ல் திருந்திய நெல் சாகுபடியை செயல்படுத்தினார். ஒரு ஏக்கர் நிலத்தில் கிடைக்க வேண்டிய நெல்லைவிட கூடுதலாக, 50 சென்ட் (அரை ஏக்கர்) நிலத்தில் 3223 கிலோ (மூன்றேகால் டன்) விளைவித்தார். இதற்காக மாநில அளவில் முதல் பரிசாக ரூ.5 லட்சம், தங்கப்பதக்கம் பெற்றார்.
இந்த ஊக்கத்தால் விதைப்பண்ணை செயல்பாடாக நெல்விதை ரகங்களை பயிரிட்டு, அரசிடம் விற்று லாபம் ஈட்டுகிறார். இவர் கூறுகையில், சாகுபடி தொழில்நுட்பத்தை அறிவியல்பூர்வமாக மேற்கொள்வதால் சாதிக்க முடிகிறது. புதிய தொழில்நுட்பத்தால் தொழிலாளர் சம்பளம், தண்ணீர், உரம், விதை என எல்லாவற்றிலும் 50 சதவீதம் செலவு குறைகிறது. இயற்கை உரத்திற்கு தக்கைபூண்டு, அவுரி, கொழிஞ்சியையும் நாங்களே பயிரிட்டு உரமாக்குகிறோம். இதனால் அதிக பூச்சித்தாக்குதல் இன்றி சாகுபடி செலவு குறைந்துவிடுகிறது' என்கிறார்.
வெற்றிகரமான வேளாண் செயல்பாட்டாளராக ஜொலிப்பதால் ரேடியோ, பத்திரிகைகள், விவசாய கல்லுாரி, கலைக்கல்லுாரிகளுக்கும் கருத்தாளராக செல்கிறார். தஞ்சை தமிழ்ப் பல்கலையில் பேசியுள்ளார். டில்லியில் விவசாயிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
மண்ஆராய்ச்சி நிறுவனம், விவசாய கல்லுாரிகள் நடத்தும் உலக மண்தினம், சுற்றுச்சூழல் தினங்களிலும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். பிரியாணி அரிசிக்கு மாற்றாக வந்த ஏடிடி 44, சீரகசம்பா கலப்பினமான வைகை அணை- 1 என்ற சன்னரக நெல்லை விதைப்பண்ணையில் உருவாக்கி கொடுத்துள்ளார்.
பள்ளியிலும் பார்த்தீனியம் விஷச்செடி ஒழிப்புக்காக மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். இயற்கை சாயம்' தயாரிக்க இவர் வழிகாட்டியதால் இவரது மாணவி தேசிய அளவிலான இன்ஸ்பயர் விருதை பெற்றார். கொரோனா காலத்தை முழுக்க வயல்வெளியில்தான் கழித்துள்ளார். அந்த நேரத்தில் முழுஈடுபாடுடன் வெண்டை, உளுந்து சாகுபடி செய்து டூவீலரில் மார்க்கெட் எடுத்துச் சென்றதும் உண்டு.
வருங்காலத்தில் பண்ணை குட்டை அமைத்து மீன், கால்நடைகளுக்கான பண்ணை வைக்கவும் எண்ணம் உள்ளது. தந்தை வழியிலேயே பிரசன்னாவும் மகன், மகளுக்கு விவசாய ஆர்வமூட்டி வளர்த்து வருகிறார். வணிகத்தில் ஈடுபாடு காட்டும் கணவர் பத்மநாபனும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் எல்லா சாதனையும் எளிதாகிறது என்று மனம் நெகிழ்ந்தார்.
இவரை பாராட்ட sprasanna1423@gmail.com

