/
இணைப்பு மலர்
/
தீபாவளி மலர்
/
எழுந்திரு பறவையே...: அதிசயங்கள் சொல்லும் லேபாக் ஷி
/
எழுந்திரு பறவையே...: அதிசயங்கள் சொல்லும் லேபாக் ஷி
எழுந்திரு பறவையே...: அதிசயங்கள் சொல்லும் லேபாக் ஷி
எழுந்திரு பறவையே...: அதிசயங்கள் சொல்லும் லேபாக் ஷி
PUBLISHED ON : அக் 20, 2025

ஆந்திரப்பிரதேசம் அனந்தபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது லேபாக் ஷி கோயில். கலை, வரலாறு, புராணம் கலந்து இருக்கும் ஓர் அற்புத தலம். விஜயநகர சாம்ராஜ்யத்தின் சிறந்த கட்டடக்கலையைப் பிரதிபலிக்கும் இந்த கோயில் 15ம் நுாற்றாண்டின் நடுப்பகுதியில் கட்டப்பட்டது. சாளுக்கியர், ஹொய்சாளர், காக்கதியர் கலைக்கூறுகளும் உள்ளூர் பாரம்பரியமும் ஒன்றிணைந்து, விஜயநகர காலத்தின் உச்சக்கட்ட கலைத்திறனைக்காட்டுகிறது.
கோயில் சுவர்களிலும் தளங்களிலும் விரிந்திருக்கும் சிற்பங்களும் உயிர்ப்புடன் காட்சியளிக்கும் ஓவியங்களும் மனதை மயக்குகின்றன. ஒவ்வொரு சிற்பமும் ஓவியமும் பழங்கதைகள், புராணக் காட்சிகள், தெய்வீக நிகழ்வுகளை விவரிக்கின்றன. இதன் நுணுக்கம், மேன்மை காரணமாகவே லேபாக் ஷி கோயில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருள் நினைவுச்சின்னமாகியுள்ளது.
இங்கே காணப்படும் தரையைத் தொடாமல் தொங்கும் துாண் உலகம் முழுவதும் அறியப்பட்ட அதிசயம். உலகின் மிகப்பெரிய ஒரே கல்லால் செதுக்கப்பட்ட 70 அடி உயர நந்தி சிலை உள்ளது. பசவண்ணா என அழைக்கப்படும் இந்த நந்தி, நாகலிங்கேஸ்வரரை நோக்கி அமர்ந்த நிலையில் காணப்படுகிறது.15 அடி உயரமும் 27 அடி நீளமும் கொண்ட இந்தச் சிலையின் மேல் செதுக்கப்பட்ட மாலைகளும் மணிகளும், சிற்பிகளின் கைவண்ணத்தைக் காட்டும் சான்று.
கோயில் வளாகம் குமாரசைலம் எனப்படும் ஆமை வடிவ மலை மேட்டின் மீது அமைந்துள்ளது. இங்கு வீரபத்ர சுவாமி மட்டுமின்றி பாபநாசேஸ்வரர், ரகுநாதர், பார்வதி, ராமலிங்கம், ஹனுமலிங்கம் ஆகிய தெய்வங்களுக்காக தனித்தனி சன்னதிகளும் உள்ளன. கூரைகளில் சித்தரிக்கப்பட்டிருக்கும் மகாபாரதம், ராமாயண காட்சிகள், சிவபார்வதி திருமணம், அர்ஜுனனின் போர் போன்றவை மெய்மறக்கச் செய்கின்றன.
இங்குள்ள பெரிய பாதச்சுவடு சீதையுடையது என்கின்றனர். அதன் பெருவிரலில் எப்போதும் நிரம்பியிருக்கும் தண்ணீர் இன்னொரு அதிசயம். இங்குள்ள ஏழு தலை நாக சிற்பத்தை ஒரே ஒரு பகல் நேரத்தில் சிற்பிகள் செதுக்கினார்களாம்.
லேபாக் ஷி ராமாயணத்துடன் தொடர்புடையது. ராவணன் சீதையை கடத்திச் செல்லும் போது, ஜடாயு பறவை வீரமாகப் போராடி இங்கு விழுந்ததாகக் கதையுண்டு. அப்போது ராமர், “லே பாக் ஷி” (தெலுங்கில், 'எழுந்திரு பறவையே') என்று கூறியதால், இந்த ஊருக்கு இந்த பெயர் வந்ததாக புராணங்கள் சொல்கின்றன. மார்ச்சில் நடக்கும் லேபாக் ஷி உற்ஸவத்தின் போது அதிகளவில் பக்தர்கள் கூடுவர்.
சென்னையில் இருந்து 600 கி.மீ., பெங்களூருவிலிருந்து 120 கி.மீ., துாரத்தில் உள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் - ஹிந்துபூர். அருகிலுள்ள விமான நிலையம் - பெங்களூரு

