/
இணைப்பு மலர்
/
தீபாவளி மலர்
/
வாழ்க்கைப் பள்ளியில் பயில்வோம் பாடம்: வழிகாட்டும் வாசுகி ஐ.ஏ.எஸ்.,
/
வாழ்க்கைப் பள்ளியில் பயில்வோம் பாடம்: வழிகாட்டும் வாசுகி ஐ.ஏ.எஸ்.,
வாழ்க்கைப் பள்ளியில் பயில்வோம் பாடம்: வழிகாட்டும் வாசுகி ஐ.ஏ.எஸ்.,
வாழ்க்கைப் பள்ளியில் பயில்வோம் பாடம்: வழிகாட்டும் வாசுகி ஐ.ஏ.எஸ்.,
PUBLISHED ON : அக் 20, 2025

ஈரோட்டை சேர்ந்த கே.வாசுகி ஐ.ஏ.எஸ்., கேரள மாநில பொதுக்கல்வி துறை செயலாளராக உள்ளார். இவர் திருவனந்தபுரம் கலெக்டராக பணிபுரிந்த போது வெள்ளப்பெருக்கு பேரிடர் காலத்தில் மிக சிறப்பாக செயல்பட்டு, பொதுமக்களின் பாராட்டுதலை பெற்றவர். சுற்றுச்சூழல், பேரிடர்கால மீட்பு, புனரமைப்பு பணிக்கு இளைஞர்களை தன்னார்வலர்களாக மாற்றியவர். அண்மையில் இவர் எழுதி வெளியான 'வாழ்க்கை பள்ளியின்' யதார்த்தங்களை சொல்லும் 'The school of life' என்ற ஆங்கில நுால் பெரிதும் பேசப்பட்டது. இவரது கணவர் கார்த்திகேயனும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. கேரள முதல்வரின் அலுவலக சிறப்பு அதிகாரியாக உள்ளார். வாழ்க்கைப் பள்ளியில் நாம் படிக்க வேண்டியது என்ன? வாசுகி ஐ.ஏ.எஸ்., கூறுகிறார்...
கடல், ஆறு, காற்று, மண் என இயற்கையை நமது தலைமுறை நாசம் செய்ததால் அவற்றில் விஷம் கலந்து விட்டது. சுற்றுச் சூழல் மாசாகி விட்டதால் குழந்தைகளுக்கு கூட நோய்கள் பெருகிவிட்டன. புற்று நோய், நீரிழிவு நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து விட்டது. இதற்கு நமது அவசரமான, பரபரப்பான வாழ்க்கை முறையும் காரணம்.
உடல் ஆரோக்கியம் சீர்கெடும் விதத்தில் தான் நாம் நமது வாழ்க்கை முறையை வடிவமைத்திருக்கிறோம். இன்றைய டிஜிட்டல் உலகில் எல்லோரும் பதட்டத்துடன், பரபரப்புடன் வாழ்கிறார்கள். இன்றைய இளையதலைமுறை எதிர்கொள்ளும் வாழ்வின் சவால்களை வடிவமைத்தது நமது தலைமுறையும், இதற்கு முந்தைய தலைமுறையும் தான். ஆனால் பாதிக்கப்படுவதோ இன்றைய இளைஞர்கள்.
சமூக ஊடகங்கள், வீடியோ கேம்ஸ், அலைபேசி என எப்போதும் டீன்ஏஜ் பருவத்தினர், இளைஞர்கள் பொழுதைபோக்குவதால் அவர்களின் மனநலம் பாதிக்கப்படுகிறது. உதாரணமாக இன்ஸ்டாகிராமில் ஒரு படத்தை போடும் போது அதற்கு கிடைக்கும் 'லைக்ஸ்', பாராட்டுக்களால் நமது மூளையில் 'டோப்பமின்' என்ற 'நியூரோ டிரான்ஸ்மிட்டர்' திரவம் சுரக்கும். இதனால் தற்காலிகமாக கணநேரத்தில் இன்பம் கிடைக்கிறது.
இது தான் 'உண்மையான மகிழ்ச்சி' என்று மூளை நம்மை ஏமாற்றி விடுகிறது. அதற்கு அடிபணிந்து அலைபேசியும் அது வழியே சமூக ஊடகங்களும் போதையாகி விடுகிறது. போதையாவது கிடைப்பது சிரமம். 'இந்த போதை' கையில் எப்போதும் இருக்கிறது.
'டிஜிட்டல் அடிமை'
சமூக ஊடகத்தில் பல ரகங்கள், டிவி தொடர்கள், ஓ.டி.டி.,யில் படங்கள், அலைபேசி வாட்ஸ் ஆப் என டிஜிட்டல் உலகத்தில் இப்படி நாளெல்லாம் வாழ்வதால் 'டிஜிட்டல் அடிமை' ஆகிறோம். எதற்கு அடிமையானலும் மனதிற்கும் உடம்புக்கும் நல்லதல்ல. மன அழுத்தம், மன உளைச்சல், அதீதஆர்வம், பதட்டம் ஏற்படுகிறது.
இந்த தலைமுறை எப்போதும் போனில் இருக்கிறார்கள் என்று நாம் கூச்சலிடுகிறோம். ஆனால் அதற்கு நமக்கு உரிமை உள்ளதா. இதனை செய்து வைத்தது நம் தலைமுறை தானே என்று நான் நினைப்பதுண்டு. எனவே இளையதலைமுறைக்கு நான் சொல்ல விரும்புவது அறிவுரை அல்ல; கேட்க விரும்புவது மன்னிப்பு. இதனோடு வேண்டுகோளும் இருக்கிறது. நாங்க தப்பு பண்ணிட்டோம்; உங்க தலைமுறை அவ்வாறு செய்யக்கூடாது.
மாசுபடுத்தாத வாழ்வு
காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் சீர்கேட்டால், ஆரோக்கியமான காற்றும், சுகாதாரமான உணவும் கிடைப்பது இனி அரிதாக கூடும். சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாத வாழ்க்கையை வாழுங்கள்.
அடுத்ததாக உறவு முறை, பந்தம், அன்பு, கரிசனம் எல்லாம் குறைந்து கொண்டு வருகிறது. அது கணவன்- - மனைவி, பெற்றோர்- - குழந்தைகள், நண்பர்கள் என எல்லா தரப்பிலும் அந்த பிணைப்பு தளர்ந்து வருகிறது. நாங்கள் கல்லுாரியில் படிக்கும் காலத்தில், நண்பர்களுக்குள் மிகுந்த நட்புறவோடு ஒருவருக்கொருவர் அக்கறையோடு உதவிக் கொண்டு படிப்போம். சில மாணவ, மாணவியரோடு மட்டுமல்ல; ஒட்டுமொத்த வகுப்பும் ஆதரவாக இருப்போம்.
எம்.பி.பி.எஸ்., படித்த நாங்கள் 25 ஆண்டு களுக்கு பிறகு அண்மையில் சந்தித்த போதும் அதே உறவு, பந்தம், பாசம் இருந்தது. ஆனால் இப்போது கல்லுாரியில் தங்களுக்குள் நட்புறவுக்கு பதில் அலைபேசியிடம் நட்பாக இருக்கிறார்கள்.
வாழ்வின் அர்த்தத்தை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைய உலகில் எல்லோரும் பணம் சம்பாதிக்கும், நுகர்வோர் கலாச்சார வாழ்வுமுறையில் தான் வாழ்கிறோம். லாபநோக்கில் தான் எல்லாம் செயல்களும் நடக்கின்றன. உதாரணமாக துரித உணவு ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல எனத் தெரியும்; எப்போதும் அலைபேசியில் மூழ்கி கிடப்பது நல்லதல்ல எனத் தெரியும். என்றாலும் அவற்றில் வீழ்ந்துவிடுகிறோம். காரணம் இந்த நுகர்வுமயமான உலகம் இதனை லாப நோக்கில் துாண்டுகிறது.
எது வெற்றி
இந்த உலகம் சொல்லும் 'வெற்றி'யை நாம் நம்ப வேண்டிய அவசியமில்லை. வெற்றி என்பது நம் மனதளவில் தான் இருக்க வேண்டும். நமது மனதிற்குள் இருக்கும் வெற்றி, நமக்குள் இருக்கும் மகிழ்ச்சியை கண்டறிய வேண்டும்.
இந்த உலகமும், நீங்களும் சந்தோஷமாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சிந்தியுங்கள். எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். விரக்தி, அவநம்பிக்கை, கோபம் போக தியானம் செய்யுங்கள். உடல் நலத்துக்கு யோகா செய்யுங்கள். மாற்றம் உங்களிடம் இருந்து வரட்டும்.
பெற்றோரும் பரபரப்பாக வாழ்வை தேடி ஓடுகிறார்கள். கிடைக்கும் நேரத்தில் அலைபேசி, டிவியில் நேரத்தை செலவிடாமல் குழந்தைகளை கவனியுங்கள்; அவர்களோடு நேரம் செலவிட்டு அவர்கள் பேசுவதை கேளுங்கள். அறிவுரை சொல்லாதீர்கள். அவர்களை புரிந்துகொள்ளுங்கள்; அவர்கள் விருப்பங்களுக்கும், சிந்தனைக்கும் மரியாதை தாருங்கள். வாழ்வு இனிக்கட்டும்...

