/
இணைப்பு மலர்
/
தீபாவளி மலர்
/
சித்தார்த்தன்... புத்தனிலிருந்து: கவிஞர் தீபிகாவின் எழுத்துப் பயணம்
/
சித்தார்த்தன்... புத்தனிலிருந்து: கவிஞர் தீபிகாவின் எழுத்துப் பயணம்
சித்தார்த்தன்... புத்தனிலிருந்து: கவிஞர் தீபிகாவின் எழுத்துப் பயணம்
சித்தார்த்தன்... புத்தனிலிருந்து: கவிஞர் தீபிகாவின் எழுத்துப் பயணம்
PUBLISHED ON : அக் 20, 2025

புற்றுநோய் உயிரியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவர் தீபிகா நடராஜன். இவரது சொந்த ஊர் நாமக்கல். சென்னை சூளைமேடு பகுதியில் வசிக்கிறார். அறிவியலின் கடினமான பக்கத்திலிருந்து கவிதை எனும் நெகிழ்ச்சியான உலகிற்குள் சுதந்திரமாக நுழைந்திருக்கிறார். 'என் கடலுக்கு யார் சாயல்,' 'புத்தனிலிருந்து சித்தார்த்தனுக்கு திரும்புதல்' ஆகிய இரு கவிதை தொகுப்புகளை எழுதியுள்ளார். சாகித்ய அகாடமி சார்பில் பாட்னாவில் நடந்த சர்வதேச இலக்கிய விழாவில் இவரது கவிதை தொகுப்புகள் இடம் பெற்றன. தமிழ் கவிதைகளை சர்வதேச தளத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் களம் இறங்கியுள்ள இளம் கவிக்குயில் தீபிகாவுடன் ஓர் இனிய உரையாடல்...
டில்லியில் நிர்பயா பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் போது பத்தாம் வகுப்பு படித்து வந்தேன். குடும்பத்தில் எனக்கிருந்த கட்டுப்பாடும், பெண்களுக்கு சமூகத்தில் நடக்கும் அவலத்தையும் ஒப்பிட்டு அப்போது ஒரு கவிதை எழுதினேன். அந்த கவிதை எனக்குள் ஒருவித அமைதியை உண்டாக்கியது. உணர்ச்சியை உள்ளுக்குள் கட்டுப்படுத்தி வைப்பதை விட ஏதோ ஒரு கருவியின் வாயிலாக வெளிக்காட்டுவதன் மூலம் பலர் மனநிம்மதி அடைகின்றனர்.
எனக்கு அப்படி ஒரு கருவியாக கவிதை இருப்பதைப் பார்க்கிறேன்.என்னுடைய கவிதைகள் பெரும்பாலும் அகம் சார்ந்ததாகவும், குழந்தை பருவத்தை சார்ந்தும், சமூகத்தை கேள்வி எழுப்பும் வகையில் இருக்கும். இவை எனது பார்வையில் இருந்து வெளிப்படுபவை. நான் பெரிய அளவில் போற்றத்தக்க சாதனைகள் செய்யவில்லை. இருந்தாலும் ஒரு சராசரி அறிவை பெற்றுள்ளேன்.
அப்படி இருக்கும் போது பெண் என்பதால் பல இடங்களில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. வீட்டில் ஒரு ஆண் குழந்தைக்கு இருக்கும் சுதந்திரம், அதே வீட்டில் வளரும் பெண் குழந்தைக்கு கிடைப்பதில்லை. சாதாரண உடை விஷயத்தில் ஆரம்பித்து பல இடங்களில் எனக்கான விருப்பங்கள் நிராகரிக்கப்படும் போது, எனக்கும் சமூகத்திற்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து வந்தது.
'தனித்து விடப்பட்ட நோய்மையின் இரவொன்றில்தான் திரும்ப தொடங்கினான் சித்தார்த்தன் புத்தனிலிருந்து' இக்கவிதை என்னுள் மாற்றத்தை ஏற்படுத்தியது. சமூகத்தில் இருந்து விலகிச் செல்லும் போதெல்லாம் மீண்டும் சமூகத்துடன் இணைந்து வாழ அறிவுறுத்தி கொண்டே இருக்கும். தனி ஆளாக இருப்பது எந்த மாற்றத்தையும் கொடுக்காது என்பதை எனது வாசிப்பின் மூலம் கற்றுக் கொண்டேன்.
ஜனநாயகமான எழுத்து: டிஜிட்டல் உலகின் வளர்ச்சியால் ஒருவரின் திறமையை எளிதாக வெளிக்கொண்டு வர முடியும். அதற்கான வாய்ப்புகளை பல்வேறு தளங்கள் தருகின்றன. கடந்த ஓராண்டாக யுடியூப் மூலம் கவிதை வாசிப்பு, கதை சொல்வதில் ஈடுபட்டு வருகிறேன். ஆனால் அதில் ஒரு முறை கூட நான் எழுதிய கவிதையை கூறியதில்லை.
நான் படித்து வியந்த, எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்திய கவிதைகளை தான் அதிகம் பேசியுள்ளேன். டிஜிட்டல் தளங்கள் கவிதை எழுதுபவருக்கும் வாசிப்பவருக்கும் இடையே நேரடி இணைப்பை உருவாக்குகிறது. எழுத்திற்கான ஜனநாயகத் தன்மையை இணையம் தந்துள்ளது.பல சிறந்த எழுத்தாளர்கள் அவர்களின் எழுத்தின் மூலமே அடையாளம் காணப்படுகின்றனர்.
நுாறு கவிதைகளுக்கு இடையில் கூட சிறந்த எழுத்தாளரின் கவிதையை கண்டறிய முடியும். அதே போல் எதிர்காலத்தில் 'இது தீபிகாவின் கவிதை' என எனக்கான ஒரு தனி இடத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற இலக்கில் பயணிக்கிறேன். இவ்வாறு கூறினார்.
இன்ஸ்டாகிராம்: neithal_talks

