/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
குன்னுவராயன் கோட்டையில் 13ம் நூற்றாண்டு 'டோல்கேட்'
/
குன்னுவராயன் கோட்டையில் 13ம் நூற்றாண்டு 'டோல்கேட்'
குன்னுவராயன் கோட்டையில் 13ம் நூற்றாண்டு 'டோல்கேட்'
குன்னுவராயன் கோட்டையில் 13ம் நூற்றாண்டு 'டோல்கேட்'
PUBLISHED ON : ஜன 15, 2016

வரி வசூலிப்பது பண்டைய தமிழர்களிடையே இருந்து வந்த பழக்கம். தமிழ் இலக்கியங்களிலேயே இதற்கு சான்றுகள் உள்ளன. இப்போது நாடு முழுவதும் நான்குவழிச் சாலைகளிலும், கப்பல், விமான தளங்களிலும் சுங்கவரி வசூலிப்பதை நாம் பார்க்கிறோம். இச்சுங்க வரியும், அதை வசூலிக்கும் சாவடியும் (டோல்கேட் போன்றது) 12--13ம் நூற்றாண்டு காலத்திலேயே இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
வத்தலக்குண்டு - உசிலம்பட்டி ரோட்டில் குன்னுவராயன்கோட்டை என்ற கிராமம்
உள்ளது. குன்றரன்கோட்டை, குன்றுவராயன் கோட்டையாகி தற்போது குன்னுவராயன்கோட்டை எனவும், கண்ணாபட்டி எனவும் பெயர் பெற்றுள்ளது.
இங்கிருந்து ஒரு கி.மீ., தொலைவில் கூட்டாத்து அய்யம்பாளையம் (மருதா நதி, மஞ்சள் நதி, வைகை ஆறு சங்கமிக்கும் இடம்) என்ற இடத்திற்கு அருகில் புதர் மண்டிய, கோயில் போன்ற பாழடைந்த மண்டபம் உள்ளது. இதுதான் வரிவசூலிக்கும் சாவடியாக இருந்துள்ளது. இதுபற்றி அக்கிராமத்தினருக்கு அவ்வளவாக தெரியவில்லை.
அக்ரஹாரத்தில் வசிக்கும் விஸ்வநாத சிவாச்சாரியார் சிறிதளவு தெரிந்து வைத்துள்ளார். ஆனால் அது என்ன கோயில், உடனுறை தெய்வம் என்ன என்பதற்கான பதில் அவரிடம் இல்லை. இக்கோயில் பக்கவாட்டு சுவர்களில் கல்வெட்டுகள் உள்ளன. ஒரு தனிக்கல்லில் சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது. இந்த சிற்பம் குறித்து திருச்சி மா. ராசமாணிக்கனார் வரலாற்று ஆய்வு மையத்தினர் கூறியது:
இங்கு ஒருவரை, யானை மிதிப்பது போன்ற சிற்பம் உள்ளது. இதுவரை எங்கும் பார்க்காதது. இதன் மூலம் கொடுஞ்செயல் புரிந்தவனை யானையின் காலால் மிதிக்கச் செய்து, மரண தண்டனை வழங்குவது அக்காலத்தில் இருந்தது உறுதி செய்யப்பட்டு உள்ளது, என்றனர்.
கல்வெட்டு குறித்து தஞ்சை தமிழ் பல்கலை கல்வெட்டியல் துறை பேராசிரியர் ஜெயக்குமார் கூறியது: எழுத்தின் அமைவை பொறுத்தளவில் இது 12-13ம் நூற்றாண்டு (சாவடி போன்ற) கோயிலாகும். ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள இந்தப் பாதையை வணிக 'பெருவழி'யாக பயன்படுத்தி உள்ளனர். கேரளா, கொடைக்கானல் பகுதியிலிருந்து குன்றுவராயன்கோட்டை, குருவித்துறை, விக்கிரமங்கலம் வழியாக, மதுரை மாநகருக்குச் சென்று வந்துள்ளனர்.
இக்கிராமம் “கெளுந்தம்” எனும் சிறு வணிகப் பகுதியாக இருந்துள்ளது. கல்வெட்டில், 'நெற்குப்பை நாட்டு தேசி விளங்கு பட்டணம் கெளுந்தகத்திலிருந்து மதுரை உதைய ஈசுவரம்' என உள்ளது. அதாவது, இங்கிருந்து 'பதினெண் விஷயத்தார்' என்ற வணிகக் குழுவினர்
கிழக்கே செல்லும் போது, இக்கோயிலில் சில சுமைகளுக்கு ஒரு புதுக் காசும், சிலவற்றிற்கு அரை புதுக்காசும் வரியாக வசூலித்து உள்ளனர். இதற்கான வசூலிப்பு மையம் இப்பகுதியில் இருந்துள்ளது.
ஒரு புதுக் காசை சிவன் கோயிலுக்கும், அரைப் புதுக் காசை பெருமாள் கோயிலுக்கும் செலுத்தி உள்ளனர். கல்வெட்டில் தொடக்க பகுதி தற்போதுள்ள காசிவிசுவநாதர் ஆலயத்தில் அபிராமி அம்மன் சன்னதியின் மேற்கூரையில் உள்ளது. இந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்தால் மேலும் பல அரிய காசுகள் குறித்த தகவல்கள் கிடைக்கும்” என்றார்.
பதினெண் விஷயத்தார் யார்
தமிழ்நாட்டில் வணிகம் செய்து, வெளிநாடுகளிலும் வணிகம் செய்து வந்த ஏற்றுமதி, இறக்குமதி செய்து வந்த பெரு வணிகக் குழுவினருக்கு பெயர்தான் பதினெண் விஷயத்தார். 13 ம் நூற்றாண்டு காலத்திலும் ஏற்றுமதி, இறக்குமதி வணிகம் தமிழ்நாட்டில் இருந்துள்ளது என்பது இதன்மூலம் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஸ்தானி