/
இணைப்பு மலர்
/
பொங்கல் மலர்
/
பொங்கலுக்கு எழிலூட்டும் பொருட்கள்
/
பொங்கலுக்கு எழிலூட்டும் பொருட்கள்
PUBLISHED ON : ஜன 15, 2016

'தைப்பிறந்தால் வழிபிறக்கும்' இது ஆன்றோர் வாக்கு. தமிழ் மாதங்களில் தைக்கு தனிச் சிறப்பு உண்டு. விளைச்சல் வீடு வந்து சேர்வது இம்மாதத்தில்தான். இதனால், திருமணம் உட்பட நல்ல நிகழ்ச்சிகளை நம்பிக்கையுடன் துவங்குவர். சமய எல்லைகளைக் கடந்த, தமிழர்களின் தனிப்பெருந்திரும் இயற்கைத் திருவிழாவான தைப்பொங்கலை எழிலூட்டும் பொருட்கள் ஒன்றா, இரண்டா... எத்தனை எத்தனை?
தை பிறப்பதற்கு முன், வீடுகளை சுத்தப்படுத்தி வண்ணம் பூசுவர். தை முதல்நாள் அதிகாலை குடும்பத் தலைவர்கள் அல்லது சிறுவர்கள் கையில் 'காப்பு' கட்டுகள் இருக்கும். அதாவது கண்ணுப்பூலச்செடி (பூச்சிக்கடி விஷத்தை முறிக்கும் மருத்துவக் குணம் கொண்டது), வேப்பிலை (மருத்துவக் குணம் நிறைந்தது), 'கம்மம் பூட்டை'(மணிகள் இல்லாத கம்மங்கதிர்) ஆகியவற்றை சோள நாற்றால் முடித்து வைத்திருப்பர். சில கிராமங்களில் கண்ணுப்பூலச் செடியுடன் மா இலை, ஆவாரம்பூ கொண்ட காப்பு கட்டுகின்றனர்.
வீட்டு முற்றம், வாழ்வாதாரமான விளை நிலம், மாட்டு வண்டி, கலப்பை, சைக்கிள், டூவீலரில் காப்புகளை கட்டுவர். கிராமங்களில் உள்ள கோயில்களிலும் வீட்டுக்கு ஒரு காப்பு கட்டி, வழிபடுவர்.
வீட்டு வாசலில் பெண்கள் வண்ணக் கோலமிடுவர். அதன் மேல் பசுஞ்சாண உருண்டையில், பூசணிப்பூ அல்லது பரங்கிப் பூ வைப்பர். சூரியனை நோக்கி மண் அடுப்பு வைத்து, மண்பானை (தற்போது அதிகமாக பித்தளை அல்லது சில்வர் பானை)யில் பச்சரிசி, வெல்லம், நெய், ஏலக்காய், முந்திரிப் பருப்பு, உலர் திராட்சையிட்டு பொங்கலிடுவர். பானையில் பொங்கல் பொங்கும்போது பெண்கள் குலவையிட்டு, 'பொங்கலோ, பொங்கல்,' என்பர்.
அடுப்பிலிருந்து பொங்கல் பானையை இறக்கியபின், குடும்பத்தினருடன் தேங்காய், பழம், கரும்பை வைத்து, சூரியன், நீர், நிலம், காற்று, ஆகாயத்தை வழிபடுவர். அன்று பச்சைமொச்சை, பூசணிக்காய், கருணைக் கிழங்கு என திடமான உணவுகள் சாப்பிடுவதால், எளிதில் செரிமானம் ஆவதற்கு மருத்துவக் குணம் கொண்ட கரும்பு துணைப் பொருளாக இடம் பெறுவது தனிச் சிறப்பு.
மாட்டுப் பொங்கல்: முற்காலத்தில் வீடுகள் மட்டுமின்றி நாட்டிற்கும் ஆதாரமாக இருந்தவை பசுக்கள். இதற்காக போர்கள் நடந்துள்ளன. அதாவது பசுக்களை கவர்தல், மீட்பதற்காக. இதை 'ஆ(பசு) நிறை (கூட்டம்) கவர்தல்' என்பர். சங்க இலக்கியங்களில் குறிப்புகள் உண்டு.
தங்கள் வாழ்வாதாரமான பசுக்கள், உழவு மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிறோம். அன்று மாடுகளை குளிப்பாட்டி, பொட்டு, சந்தனம் இட்டு, கொம்புகளில் வண்ணம் பூசுவர். மாட்டின் மூக்கணாங்கயிறுகளை அகற்றி, புதிய கயிறுகளை மாற்றுவர். மாடுகளின் கழுத்தில் மணி, கால்களில் சலங்கை கட்டி தெருக்களில் ஓடவிடும்போது 'ஜல்ஜல்' சத்தம் இனிமையாக இருக்கும். மாட்டுத்தொழுவத்தை சுத்தம் செய்து, பொங்கலிட்டு, பூஜை செய்து, சாம்பிராணி புகையிட்டு, மாடுகளுக்கு பொங்கல், பழங்களை ஊட்டுவர்.
தைப்பொங்கலுக்கு புதுமணத் தம்பதியினருக்கு பச்சரிசி, பானை, வெல்லம், பழம், கரும்பு, புத்தாடை, காய்கறி அடங்கிய பொங்கல் சீர் கொடுப்பர்.
பாரதி