sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

பொங்கல் மலர்

/

மயில்களின் சப்தமோ முயல்களின் ஓட்டமோ இல்லாத பூமி!

/

மயில்களின் சப்தமோ முயல்களின் ஓட்டமோ இல்லாத பூமி!

மயில்களின் சப்தமோ முயல்களின் ஓட்டமோ இல்லாத பூமி!

மயில்களின் சப்தமோ முயல்களின் ஓட்டமோ இல்லாத பூமி!


PUBLISHED ON : ஜன 15, 2019

Google News

PUBLISHED ON : ஜன 15, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு கரிசல் பூமியில் பிறந்தவர். இவரது கதைகளை வாசிப்பது மிகு மழையின் ஊடே நனைந்து வீடு திரும்புவதை போன்ற அனுபவம். அங்கே காற்று, மழை, குளிர்ச்சி, பாதுகாப்புத் தேடும் மனநிலையும், யாவையும் மீறி இயற்கையில் ஒன்றுகலக்கும் தருணமும் ஒருங்கே கூடியிருக்கின்றன. தனக்கென தனித்துவமான கவித்துவ கதை சொல்லும் மொழி, கதைக்களங்கள் கொண்டவர். புனைவெழுத்தில் சாதனைகள் நிகழ்த்தியவர். நவீன தமிழ் சிறு கதையில் புதிய போக்குகளை உருவாக்கியவர். முழு நேர எழுத்தாளர். சினிமா வசனகர்த்தா. கரிசல் பகுதி நாதஸ்வர கலைஞர்களின் வாழ்க்கை, துயரத்தை பேசுகிறது இவரது 'சஞ்சாரம்' நாவல். 'தமிழர்கள் சுப நிகழ்வுகளில் நாதஸ்வர இசையை பயன்படுத்துகின்றனர். மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் இக்கலைஞர்கள் மகிழ்ச்சியாக இல்லை,' என்கிறார் இவர்.

'சஞ்சாரம்' நாவலுக்காக 2018க்கு சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள எஸ்.ராமகிருஷ்ணன் 'தினமலர்' பொங்கல் மலருக்காக மனம் திறந்தவை...

சாகித்ய அகாடமி விருது கிடைத்ததை எப்படி பார்க்கிறீர்கள்? எழுத்துலகம் எப்படி பார்க்கிறது?

மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. ஒட்டுமொத்த இலக்கிய உலகமும் கொண்டாடுகிறது. முழுநேர எழுத்தாளனாக வாழும் எனக்கு இவ்விருது சிறந்த அங்கீகாரமாகவே உள்ளது.

ஆங்கில இலக்கியம் படித்து, முனைவர் பட்ட ஆய்வை பாதியில் கைவிட்டுள்ளீர்கள். பேராசிரியராக ஆகியிருந்தால், எழுத்தாளர் ராமகிருஷ்ணன் கிடைத்திருப்பாரா அல்லது பேராசிரியராக மட்டும் இருந்திருப்பாரா?

எழுத்தாளனும் ஒரு ஆசிரியன் தான். ஆனால், அவனது வகுப்பறை உலகம். கற்றுத்தருவதில் என்றைக்கும் எனக்கு ஆர்வம் உள்ளது. ஒருவேளை பேராசிரியர் ஆகியிருந்தால், அமெரிக்க பல்கலை ஒன்றில் வேலை செய்து கொண்டிருப்பேன்.

சமூக, அரசியல் மாற்றத்திற்கான கருவியாக ஒரு காலத்தில் எழுத்து, பேச்சு இருந்தது. மாற்றம் நிகழ்ந்ததற்குரிய அடையாளங்கள் நம் கண்முன் சாட்சியாக உள்ளன. ஆனால், இன்று எழுத்தாளர்கள் வரிசை கட்டி அணிவகுத்துள்ள சூழ்நிலையில் சமூக, அரசியல் மாற்றங்களுக்கான சாத்தியம் இல்லாமல் போனது ஏன்? சாத்தியமில்லை என்று யார் சொன்னது?

எழுத்தின் வழியாக உருவாகும் மாற்றங்கள் தனிமனிதனின் ஆளுமையோடு தொடர்புடையது. பண்பாட்டு தளத்தில் செயல்படக்கூடியது. எல்லா காலத்திலும் எழுத்தின் தாக்கம் சமூகத்தில் இருந்து கொண்டேதான் இருக்கிறது. மறந்து விடுவது மக்களின் இயல்பு. நினைவுப்படுத்திக் கொண்டேஇருப்பது எழுத்தாளர்களின் வேலை.

முல்லைப் பெரியாறு பிரச்னையில் 'சாகித்ய அகாடமி' விருது பெற்ற மலையாள எழுத்தாளர் பால் சக்காரியா, தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். அதுபோன்ற சூழல் தமிழ் எழுத்துலகில் இல்லையே. சமூகம் கொதிநிலை அடையும் போதும், சமகால பிரச்னைகள் குறித்தும் தமிழகத்தில் எழுத்தாளர்கள் ஒருவித மவுனம் காப்பது ஏன்?

ஜல்லிக்கட்டு பிரச்னையில், நான் உட்பட அத்தனை எழுத்தாளர்களும் களத்தில் நின்றோமே. மதவாதம், அடிப்படைவாதம் இவற்றுக்கு எதிராக ஒன்று சேர்ந்து போராடுகிறோமே. அவை எல்லாம் எழுத்தாளர்களின் சமூக பொறுப்புணர்வு தானே?

தேசாந்திரியாக உலகை வலம்வரும் நீங்கள், தமிழ் சமூகத்துடன் பிற சமூகங்களை எப்படி ஒப்பீடு செய்கிறீர்கள்? தமிழ் சமூகத்தைவிட மேம்பட்டதாக அல்லது மாறுபட்டதாக எந்த சமூகம் உங்கள் மனக்கண்ணில் விரிகிறது?

தமிழ் சமூகத்தின் வேர் மிக நீண்டதுாரம் பரவியுள்ளது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில் கல்வி, மருத்துவம், போக்குவரத்துத்துறைகளில் தமிழகம் முன்னேறியிருக்கிறது. இலக்கியத்தில், இந்திய அளவில் நாம் தனித்து அறியப்படுகிறோம். தமிழ் 2,000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொடர்ச்சி அறுபடாமல் பேசப்பட்டு வருகிறது. இந்தியாவில் முதன்முதலாக புத்தகம் அச்சிடப்பட்டது தமிழில்தான். இன்றைய இளம் தலைமுறைக்கு தமிழின் பெருமைகள் தெரியவில்லை. அது தான் ஒரே வருத்தம்.

உலகமயமாதலில் நம் பண்பாட்டு அடையாளங்கள் சுவடே இல்லாமல் அழிந்துபோகுமோ என்ற அச்சம். இந்நிலையில் தமிழ் சமூகம் இதுவரை இழந்தவை என்ன? பதிலாக மீண்டவை என்ன?

பண்பாட்டின் மீது தாக்குதல் ஏற்பட்டு வருவது நிஜம். ஆனால், மரபாக தொடரும் விஷயங்களை எளிதாக அழித்துவிட முடியாது. குறிப்பாக தமிழ் குடும்பத்தில் பேணப்பட்டு வரும் பண்பாடு இப்போது மாற்றம் காண ஆரம்பித்துள்ளது. ஆனால், முழுமையாக மாறிவிடவில்லை. தமிழ் மக்களிடம் காணப்படும் அறக்கோட்பாடு வலிமையானது. அது தற்போது காரணமேயில்லாமல் கைவிடப்பட்டு வருகிறது. உணவளித்தல் என்பதை அறமாக செய்து வந்தனர். இன்றைக்கு பசித்தோருக்கு உணவு தருவதை வீண் செயல் என நினைப்பவர்கள் வந்துவிட்டனர்.

நேரக்கட்டுப்பாட்டை தீவிரமாக கடைபிடிப்பவர் நீங்கள். பருவம் சார்ந்து எழுதுகிறீர்கள். அதுவும், மழைக்காலத்தில் கூடுதலாக எழுதுகிறீர்களே? அதற்கான ரசவாத உந்துசக்தி?

இயற்கையோடு இணைந்து வாழுகிறவன் நான். ஒரு நாள் என்பது எனக்கு கிடைத்த பரிசு. அதை ஒரு போதும் வீணடிக்கமாட்டேன். மழைக்காலத்தின் காலைநேரம் மிகவும் அமைதியா இருக்கும். அதுவே எழுதுவதற்கு உகந்த காலம்.

'எழுத்தாளனின் தேவை காட்சி ஊடகங்களிலும் மிக அதிகமாகயிருக்கிறது. ஆனால் எழுத்தாளரின் இடம் எவரோ ஒரு நகலெடுப்பவரால் நிரப்பப்பட்டு விடுகிறது. சினிமாவில் கதை என்பது எழுதப்படுவது இல்லை. மாறாக உருவாக்கப் படுகிறது. கதையை உருவாக்குவதற்கு என ஒரு கூட்டமே வேலை செய்கிறது. அதற்காக பல ஆயிரம் செலவு செய்கிறார்கள். ஆனால் அந்த செலவில் நுாறு ரூபாய் கூட புத்தகம் வாங்க செலவிடப்பட்டிருக்காது. எந்த சினிமா நிறுவனத்திலும் நுாலகம் என்ற ஒன்றை நான் பார்த்ததேயில்லை. மருந்துக்குக்கூட ஒரு நாவலோ, சிறுகதை புத்தகமோ கதை விவாதம் நடக்கும் அறைகளில் கண்டதேயில்லை,' என ஒரு நேர்காணலில் பதிவு செய்துள்ளீர்கள். இதையும் தாண்டி சினிமாவில் வசனகர்த்தாவாக தடம் பதித்து வரும் அனுபவம்?

சினிமா கூட்டு உழைப்பு. அங்கே எழுத்தாளன் பணி இயக்குனருடன் இணைந்து வேலை செய்வதே. முழுமையான சுதந்திரம் ஒரு போதும் கிடைத்துவிடாது. ஒரு நாவலை, சிறுகதையை படமாக்க முயன்று அதில் எழுத்தாளன் வேலை செய்தால், அப்படம் சிறப்பாக வரும். அதை நோக்கியே நான் சென்று கொண்டிருக்கிறேன்.

கரிசல் பூமியில் பிறந்து வளர்ந்தவர் நீங்கள். சிறு வயதில் நீங்கள் பார்த்த கரிசல் பூமிக்கும், தற்போது நீங்கள் காணும் கரிசல் பூமிக்கும் வேறுபாடு?

கரிசலின் மணமும், வெயிலும் மனதில் அப்படியே இருக்கின்றன. இன்று அந்த கிராமங்கள் கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றன. ரியல் எஸ்டேட் காரணமாக நிலம் விற்பனை பொருளாகி விட்டது. விவசாயிகள் நகரங்களை நோக்கி நகர்ந்து போய்விட்டார்கள். அடுத்த தலைமுறைக்கு விவசாயத்தில் நாட்டமில்லை. மயில்களின் சப்தமோ, முயல்களின் ஓட்டமோ காணமுடிவதில்லை. கரிசல் கைவிடப்பட்ட நிலமாகவே உள்ளது. அதை காணும் போது பெருமூச்சும் மனவேதனையும் அதிகமாகிறது என்றார்.

கருத்துக் களமாட writerramki@gmail.com

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்






      Dinamalar
      Follow us