PUBLISHED ON : ஜன 15, 2015

கிராமங்களின் வாழ்க்கை மாறி இருக்கலாம், வசதி மாறியிருக்கலாம், வளமை மாறியிருக்கலாம். அன்றும், இன்றும், என்றும் மாறாதது பாசம் மட்டுமே. பொதுவாகவே அவர்களின் உபசரிப்பு உணர்வு பூர்வமானது.
முகம் தெரியாத நபரையும் வரவேற்று பருக நீர் தந்து பசியாற நினைக்கும் பண்பு கிராமத்திற்கு உண்டு. வெளிநபருக்கு இத்தனை பரிவு என்றால் சொந்த, பந்தங்களுக்குள்ளான பாசப்பிணைப்பு எப்படி இருக்கும்? கிராமங்களின் பாச பரிமாற்றத்தில் ஒன்று தான் பனை ஓலை கொழுக்கட்டை பாசம்.
கிராமங்களின் பாசப் பிணைப்பிற்கு தூது போனது பச்சைக் கிளிகளோ, புறாக்களோ அல்ல, பனை ஓலைகள் தான். மண்பாண்டங்கள் கூட வாங்க முடியாத அந்த ஏழ்மை காலத்தில் பனை ஓலையை மடித்து கூழும், கஞ்சியும் குடித்தவர்களுக்கு ருசியான பண்டங்கள் சமைக்க மட்டும் பாத்திரமா கிடைத்திருக்கும்! அன்று அவர்களுக்கு அனைத்துமாய் இருந்தது பனை மரங்கள்.
பெரும்பாலும் விழாக் காலத்தில் தான் கிராமங்களில் பலகாரம் தயாராகும். அன்று ஒவ்வொரு வீட்டையும் எட்டிப்பார்த்தால் 'பனை ஓலை' கொழுக்கட்டை கட்டாயம் இருக்கும். அன்று மட்டுமல்ல இன்றும் தொடர்கிறது...
என்றோ வரும் விருந்தாளியை வரவேற்க கிராமத்தினர் நம்புவது பனை ஓலை கொழுக்கட்டை மட்டுமே. விழா காப்பு கட்டியதும் தான் ஓலை வெட்ட வேண்டிய மரத்தை தேர்வு செய்வதற்கு போட்டா போட்டி நடக்கும். 'அந்த மரத்து ஓலை அம்புட்டு ருசியா இருக்கும்... இந்த மரத்து ஓலை துவர்க்கும்...' என பனைகளை தரம் பிரிப்பதும் உண்டு.
விழாவிற்கான அழைப்பில் கூட 'அண்ணே... கண்டிப்பா வந்துருண்ணே... பனை ஓலை கொழுக்கட்டை செஞ்சு வெச்சிருக்கேன்...' என பாசத்தோடு அழைப்பர். விழாவிற்கு வந்து விட்டால் வீடு நுழையும் முன் வாசலில் பனை ஓலைகள் சுற்றிய கொழுக்கட்டைகள் குவிந்து கிடக்கும். அதை சுவைத்தபடி நலம் விசாரிப்பது தான் இன்றும் தொடர்கிறது. ஒருவேளை தவிர்க்க முடியாத காரணத்தால் உறவினர் வராமல் போனால் வாசலில் வைத்த கொழுக்கட்டைகள் அவருக்காக காத்திருக்கும். மறுநாள் காலை வரை அதற்கு கெடு.
'அண்ணனுக்கு ஏதோ வேலை போல அதான் வரலே... அது மனசு முழுக்க கொழுக்கட்டையில் தான் இருக்கும்... போய் கொடுத்துட்டுவா...' என மகனையோ, கணவனையோ ஊருக்கு அனுப்பி பனை ஓலையை உரியவரிடம் சேர்த்துடுவார்கள். இந்த பலகார பரிமாற்றம் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் மிகையாக தெரியலாம். ஆனால் அதில் புதைந்திருக்கும் பாசத்தை சம்பந்தப்பட்டவர்களால் மட்டுமே உணர முடியும்.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே கிழவிகுளம் கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் கூறுகையில்: பச்சை பனை ஓலையில் கொழுக்கட்டை வேகும் போது அதன் ருசியே அலாதி. என்ன தான் கறியும், சோறும் போட்டாலும் பனை ஓலை கொழுக்கட்டையை தான் சொந்தங்கள் விரும்புவர். முன்பு வறுமையால் தொடங்கிய இந்த பழக்கம், இன்று வறட்சியால் தொடர்கிறது. உறவுகளை இணைப்பதால் நாங்களும் தொடர்கிறோம், என்றார்.