sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

பொங்கல் மலர்

/

உண்மை சொல்ல ஒரு கல்மேடை - மதுரையின் ஆச்சரியம் அழகாபுரி

/

உண்மை சொல்ல ஒரு கல்மேடை - மதுரையின் ஆச்சரியம் அழகாபுரி

உண்மை சொல்ல ஒரு கல்மேடை - மதுரையின் ஆச்சரியம் அழகாபுரி

உண்மை சொல்ல ஒரு கல்மேடை - மதுரையின் ஆச்சரியம் அழகாபுரி


PUBLISHED ON : ஜன 13, 2022

Google News

PUBLISHED ON : ஜன 13, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'மாப்ள... மாமன் மச்சானா பழகிட்டோம். நான் சொல்றது எல்லாம் உண்மை.

நீ சொல்றதும் உண்மைன்னா நான் நிற்கிற இந்த கல் கட்டடத்துல ஏறி வந்து சொல்லு. நான் ஒத்துக்கிறேன்' என ஒருவர் அழைக்க, எதிரே நிற்பவர் முகம் வெலவெலத்து போனார்.

'ஏப்பு... தைரியமான ஆம்பளன்னா ஏறி போய் அவன்தான் பொய் சொல்றானு சொல்லு...' என ஊரார் உசுப்பேத்த, 'மன்னிச்சுடுங்க... நான்தான் பொய் சொன்னேன்' என பெரிய கும்பிடு போட்டு 'ஆளைவிட்டால் போதும்' என கீழே நிற்கின்றவர் 'எஸ்கேப்' ஆனார்.

இந்த நவீன காலத்திலும் மதுரை மாவட்டத்தில் இந்த 'உண்மை' சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது. பெயருக்கேற்ப அழகான குட்டிக் கிராமமாக இருக்கிறது அழகாபுரி. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லுாரை அடுத்து அமைந்துள்ளதால் 'அ' என்று இன்ஷியலோடு அழைத்தால்தான் இந்த ஊருக்கு பெருமை. இதைவிட பெருமை இங்குள்ள மிகப்பழமையான வரதராஜ பெருமாள் கோயிலும், அதன் அருகில் உள்ள கல் கட்டடம் என்று ஊர் மக்களால் அழைக்கப்படும் கல் மேடையும்தான். இங்கு திருவிழா காலத்தில் சுவாமிகள், நேர்த்திக்கடன் குதிரைகளை இறக்கி வைத்து வழிபடுவது சிறப்பு.

எல்லாவற்றிக்கும் முத்தாய்ப்பாக காலம் காலமாக உண்மையை மட்டும் இந்த கல்மேடை சொல்லி வருகிறது என்றால் ஆச்சரியம்தானே. இந்த கல் கட்டடத்தில் பெண்கள் ஏறமாட்டார்கள். இது இங்குள்ள மரபு.

'பொய் பேச நினைப்பவர் ஏற மாட்டார். போதை வஸ்துகள் பயன்படுத்துவோரும் ஏறமாட்டார்கள். இங்கு எடுக்கும் எந்த முடிவுக்கும் ஊர்மக்கள் கட்டுப்படுவார்கள். மாமன் மச்சானாக பழகுபவர்கள் சண்டை போட்டுக்கொண்டால், இந்த கட்டடத்தில் உன்னை ஏற்றுவேன் என்று சொல்வதும், எதிராளி பயப்படுவதும் இக்கட்டடத்தின் மகிமைக்கு சிறப்பு' என்கிறார் கிராம தண்டல்காரர் அழகர்சாமி.

இங்கு மக்கள் ஜாதி, மத பேதமின்றி மாமன், மச்சானாக வாழ்வதும், இன்னும் 'பக்கா' கிராமமாகவே இருப்பதும் சிறப்பு. வரதராஜ பெருமாள் கோயிலுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தி மக்கள் பராமரித்து வருகிறார்கள். கோயில் வளாகத்தில் கொடிமரமாக கல் கம்பம் உள்ளது.

''இந்த கோயிலோடு தொடர்புடையது செல்லாயி அம்மன் கோயில். தவிர அய்யனார், நாணல்குளம், கருப்புச்சாமி கோயில்களில் பங்குனி திருவிழாவை ஊர்மக்கள் சேர்ந்து கொண்டாடுவது ஆண்டாண்டு காலமாக நடக்கிறது'' என்கிறார் செல்லாயி அம்மன் கோயில் பூஜாரி பொன்னுச்சாமி.

''கிராமம் என்றாலே மந்தை இருக்கத் தானே செய்யும். இந்த மந்தையில் விவசாய பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. ஜல்லிக்கட்டு காளைகளுக்கு இங்கு களப்பயிற்சி அளிக்கிறார்கள். கிராமம் தொடர்பாக எந்த ஒரு முடிவு எடுக்க வேண்டியிருந்தாலும் அனைவரும் இந்த மந்தையில் உள்ள கல் கட்டடம் முன் கூடி முடிவு எடுப்போம். அந்த முடிவு இதுவரை தவறாக போனதில்லை'' என இக்கிராம நாட்டாமை சுரேஷ் பெருமிதம் கொள்கிறார்.

நகரமும், கிராமமும் கலந்த மாவட்டம் மதுரை என்பதற்கு அடையாளமாக இருக்கிறது இந்த அழகாபுரி.

கே.ராம்குமார்

ஆர்.அருண்முருகன்






      Dinamalar
      Follow us