sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

பொங்கல் மலர்

/

கருப்பனுடன் கலகல பொங்கல்! - பூரிப்பில் சூரி

/

கருப்பனுடன் கலகல பொங்கல்! - பூரிப்பில் சூரி

கருப்பனுடன் கலகல பொங்கல்! - பூரிப்பில் சூரி

கருப்பனுடன் கலகல பொங்கல்! - பூரிப்பில் சூரி


PUBLISHED ON : ஜன 14, 2022

Google News

PUBLISHED ON : ஜன 14, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடல் அசைவு, 'டைமிங் ஜோக்' என தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் தற்போது சூரி முதலிடத்தில் உள்ளார். 'உடன்பிறப்பே', 'அண்ணாத்தே' படங்கள் தந்த வெற்றியுடன் 'வேலவன்' உள்ளிட்ட அடுத்தடுத்த படங்கள் மூலம் மக்களை சிரிக்க வைக்க வாய்ப்பு கிடைத்ததில் கொஞ்சம் உற்சாகமாகவே இருக்கிறார் சூரி.காமெடியனிலிருந்து கதாநாயகன் வரிசையிலும் இடம் பிடித்து விட்டார்.

எதற்கும் துணிந்தவன், விடுதலை, விரும்பன், பெயரிடப்படாத ஒரு படம், கொம்பு வச்ச சிங்கமுடா என சூரி கைவசம் ஏராளமான படங்கள். அடுத்தடுத்த படப்பிடிப்புகளால் படுபிஸி. சென்னை அம்பத்துார் அருகே ஒரு படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு அடுத்த படப்பிடிப்பிற்காக காரில் பயணித்த சூரியுடன் தினமலர் பொங்கல் மலருக்காக பேசியதிலிருந்து...

அடுத்தடுத்த வெற்றி படங்கள்... எப்படி சாத்தியமானது

இதற்கு ரசிகர்கள் தான் காரணம். அடுத்தடுத்து வெளியான படங்கள் வெற்றி பெற்று மக்களை சிரிக்க வைப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

'அண்ணாத்தே' வாய்ப்பு எதிர்பார்த்தீர்களா

சின்ன வயசுல ரஜினி ரசிகன். எங்கள் ஊரில் ரஜினி, கமல் என கோஷ்டிகளாக இருப்போம். ஒரு முறை ஊரில் பண்டிகைக்காக ரஜினி படங்கள் மூன்றை திரையில் ஒளிபரப்பிக்கிட்டு இருந்தோம். அப்ப ஒரு படம் ஓடிக்கொண்டிருந்த நிலையில் கிளைமாக்ஸ் காட்சி வரும் பெட்டியை கமல் ரசிகர்கள் துாக்கி கொண்டு போய் வைக்கோல் படப்பிற்குள் மறைத்து வைத்து விட்டனர். வேறு வழியின்றி அடுத்த படத்தை ஓட விட்டு சமாளிச்சோம். அந்த காலத்தில் டூரிங் டாக்ஸில் மண்ணை குவித்து ரஜினி படத்தை பார்த்த நான் நடிகனாகியும் அவருடன் நடிக்க முடியலையே என்ற ஏக்கம் இருந்தது. அந்த ஏக்கத்தை 'அண்ணாத்தே' தீர்த்துடுச்சு. படப்பிடிப்புகளின் போது அவருக்கும், எனக்கும் பக்கத்து பக்கத்து அறை. விமானத்தில் அவருக்கு பக்கத்து சீட். ரஜினி சாரே 'பக்கத்து சீட்டை சூரிக்கு போட்ருங்க' என கூறினார் என்றதை கேட்டதும் ஏற்பட்ட சந்தோஷம் மறக்க முடியாது.

வழக்கமாக பொங்கலுக்கு மதுரைக்கு வந்துடுவீங்களே. இந்த முறை எப்படி

கொரோனா வந்து கடந்த வருஷம் பொங்கல் கொண்டாட முடியாமல் செய்து விட்டது. மதுரை பக்கத்தில் உள்ள ராஜாக்கூர் தான் என் ஊர். ஊரில் பொங்கல் உற்சாகமாக களைகட்டும். எங்கள் வீட்டில் ஏகப்பட்ட மாடுகள் இருக்கும். சாமி கும்பிட்டு ஊரே கோலாகலமாக இருக்கும். மனம் நிறைவான பொங்கல் இருக்கும். அண்ணன், தம்பி, சித்தப்பா, மாமா, அத்தை, பாட்டி, தாத்தா என எல்லா உறவுகாரங்களும் ஊருக்கு வந்து விடுவர்.

பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப் பொங்கல் களைகட்டும். பசுவுக்கு ஒரு கலர். காளைக்கு ஒரு கலர். எருமைக்கு ஒரு கலர் என கொம்புகளில் அடிப்போம். கண்மாயில் குளிப்பாட்டி மாலையணிவித்து பொங்கல் வைத்து கும்பிடுவோம்.

காளைக்கு கருப்பன் பெயர் எப்படி

நான் ஊருக்கு வந்தால் என் பொழுதுபோக்கு கருப்பனுடன் தான். அழகர் கோவில் பதினெட்டாம் படி கருப்பணசுவாமி ஒரு காவல் தெய்வம். ஆக்ரோஷமான சாமி. அவர் பெயரை காளைக்கு வைத்தேன். நடை, உடை, அகலம், உயரம் என கருப்பன் பாடி லாங்வேஜ் என கருப்பணசாமிக்கு பொருத்தமாக இருக்கும். ரோஷம் பயங்கரமாக வரும். அப்போது சாப்பிட மாட்டான். படுத்து கொள்வான். புலிக்குளத்தில் அதிக உயரமான நீளமான மாடு கருப்பன்.

இதுவரை 50க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து இருக்கிறது. ஒரு முறை கூட பிடிபடாதது தான் கருப்பனோட சிறப்பு. கட்டில், பீரோ, சைக்கிள், டைனிங் டேபிள், சோபாசெட், 'டிவி', அண்டா என கருப்பன் வாங்கிய பரிசுகளை வைத்து 'கருப்பன் பர்னிச்சர்ஸ்' என கடையே வைக்கலாம்.

பரிசு பொருட்களை பிறருக்கு தந்து விடுவீர்களாமே

தம்பி பரிசை வாங்கி வந்து வீட்டில் வைத்து விடுவான். ஆனால் அதை நாங்கள் வைத்து கொள்ள மாட்டோம். ஊர் மக்களுக்கு வழங்கி விடுவோம். அவர்கள் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் போது சீர் கொடுத்து விடுவர். சமீபத்தில் கூட குமாரபாளையத்தில் ஜல்லிக்கட்டில் பங்கேற்று சோபா, டிரெஸிங் டேபிளும் வாங்கி வந்தது. அதை ஒரு ெபண் திருமணத்திற்கு வழங்கி விட்டோம்.

மறக்க முடியாத பொங்கல்

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு கோயில் மாடு இருக்கும். அது ஊருக்கு என நேர்ந்து விட்டதாக இருக்கும். செல்லபிள்ளையாக இருக்கும். எல்லா வீட்டிற்கும் போகும், சாப்பிடும். சொந்தமாடாக கவனிப்பர். மாட்டுப்பொங்கலன்று முதலாவதாக கோயில் காளையை அவிழ்த்து விடுவாங்க. நான் சிறுவனாக இருந்த போது ஒருமுறை கோயில் காளையை அவிழ்த்து விட்ட போது எங்க அப்பாவும், அவர் வயதினரும் காளையை பிடிக்க முயன்றனர். ஆனால் அவங்க ஐம்பது பேரையும் அந்த காளை ஒரு சந்திற்குள் விரட்டி சென்றது. காளைக்கு பயந்து ஓடியவர்களும் அந்த சந்திற்குள் சிக்கினர். அவர்கள் ஒவ்வொருவரையும் காப்பாற்றியது இப்போதும் நினைவில் இருக்கிறது. அதுபோல மாறுவேடப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் பொங்கலையொட்டி நடக்கும். உறவினர் ஆறுமுகம் நாடகங்களில் நாரதராக நடிப்பார். அத்தை கலைச்செல்வி வள்ளி திருமணம், அரிச்சந்திரன் நாடகங்களில் நடிப்பார். சிறுவனாக இருந்த எனக்கு பெண் வேடமிட்டு நடிக்க ஏற்பாடு செய்தார். நானும் பெண் வேடமிட்டு நடிக்க அமர்ந்திருந்தேன். அந்த நேரம் என்னைதேடி என் அம்மா வந்தார். நான் இருப்பது தெரியாமல் அருகில் இருந்தவர்களிடம் சாமியை பார்த்தீர்களா என கேட்டார். என் அத்தை வந்து இந்தா இருக்கிறான் என சுட்டி காட்டவும், அம்மா ஆச்சரியப்பட்டு போனார். அந்த மாறுவேடப்போட்டியில் முதல் பரிசு கிடைத்ததை மறக்க முடியாது.

ஜல்லிக்கட்டு காளை கருப்பன் எப்படியிருக்கிறார்

நல்லா இருக்கிறார். அப்பா மறைவுக்கு பிறகு எல்லா மாடுகளையும் கொடுத்து விட்டோம். மாடுகள் மீது அம்மா அதிகம் கவனம் செலுத்துவார். குழந்தைகளை விட அதிக சிரத்தை எடுத்து பார்த்து கொள்வார். அவங்க கஷ்டப்பட கூடாது என்பதற்காக மாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்துட்டோம். கருப்பன் மட்டும் தம்பி வினோத் முத்தையா வசம் இருக்கிறது. நான் ஊருக்கு வரும் போது அதை நானும் கவனித்து கொள்வேன்.

நடிகராவதற்கு முன்பும், நடிகரான பிறகும் பொங்கல் கொண்டாடுவது குறித்து

நடிகராவதற்கு முன் ஊரில் ஒருத்தனாக கொண்டாடினேன். இப்ப நான் கொண்டாடுவதை ஊரே பார்க்கிறது. நடிகனாக இருந்தாலும் ஊருக்கு வந்தால் பிறந்த மண்ணில் ஒருவனாக இருப்பேன்.

ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது

கொரோனாவால் எல்லோருக்கும் கஷ்டம். இதிலிருந்து மீண்டு வந்த நிலையில் மீண்டும் தொற்று பரவி வருகிறது. கஷ்டமாக இருக்கிறது. பாதுகாப்பாக பொங்கல் கொண்டாடுங்கள்.

எம்.ரமேஷ்பாபு






      Dinamalar
      Follow us